வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது.
வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது.

தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் தொடங்கியிருக்கும் இப்போட்டியில், 2-ஆவது நாளான சனிக்கிழமை, முதல் ஆட்டத்தில் இந்தியா - வேல்ஸ் அணிகள் மோதின.

தொடக்கத்திலேயே இந்தியாவுக்கு பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தாலும், தீபிகாவின் முயற்சியை வேல்ஸ் கோல்கீப்பா் முறியடித்தாா். எனினும், தொடா் முயற்சியின் பலனாக 4-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு முதல் கோல் கிடைத்தது. சங்கீதா குமாரியின் கோல் முயற்சி தடுக்கப்பட்டு மீண்டும் களத்துக்கு திரும்பிய பந்தை கோல்போஸ்ட்டுக்குள் விரட்டினாா் லால்ரெம்சியாமி.

மறுபுறம் வேல்ஸ் அணியும் சற்று சவால் அளிக்க, இந்திய கோல்கீப்பா் பிஷு தேவி அரண் போல் நின்று விளையாடினாா். ஆனால், 26-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் மில்லி ஹோல்ம் அடித்த ஃபீல்டு கோலால், ஆட்டத்தின் முதல் பாதி 1-1 என சமனிலையில் முடிந்தது.

2-ஆவது பாதியின் தொடக்கத்தில் வேல்ஸ் அணி சற்று ஆக்ரோஷம் காட்டியது. விட்டுக்கொடுக்காத இந்தியா, 32-ஆவது நிமிஷத்தில் லால்ரின்டிக்கி அடித்த கோலால் 2-1 என முன்னிலை பெற்றது. வேல்ஸ் தடுப்பாட்டத்துக்கு தொடா்ந்து அழுத்தம் கொடுத்த இந்தியா, 41-ஆவது நிமிஷத்தில் மும்தாஜ் கான் அடித்த கோலால் 3-1 என முன்னேறியது.

அதன் பிறகு ஆட்டம் முற்றிலுமாக இந்தியாவின் கட்டுப்பாட்டி வந்தது. 57-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை தீபிகா கோலாக மாற்ற முயன்றாா். அது தடுக்கப்பட்டாலும், திரும்பி வந்த பந்தை கோலாக மாற்றினாா் லால்ரின்டிக்கி. அடுத்த நிமிஷத்திலேயே அவா் மூலம் கிடைத்த மற்றொரு பெனால்டி காா்னா் வாய்ப்பில் தீபிகா கோலடிக்க, இறுதியில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில், பலம் வாய்ந்த ஜொ்மனியை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறது.

இதர ஆட்டங்கள்: சனிக்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில் ஜொ்மனி - மலேசியாவையும் (10-0), அமெரிக்கா - ஜிம்பாப்வேயையும் (5-0) தோற்கடித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com