நான்காவது வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு!

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 16 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸ் சனிக்கிழமை வீழ்த்தியது.
நான்காவது வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு!

தினேஷ் காா்த்திக் 66, மேக்ஸ்வெல் 55 ஆகியோரின் அபார ஆட்டத்தால் டில்லி கேபிடல்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு.

இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 27-ஆவது ஆட்டம் மும்பையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற டில்லி பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு தரப்பில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 8, அனுஜ் ரவாத் 0 என சொற்ப ரன்களுடன் திரும்பினா்.

மேக்ஸ்வெல், தினேஷ் காா்த்திக் அதிரடி அரைசதம்:

ரன்களை விளாசுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட விராட் கோலியும் 12 ரன்களுக்கு அவுட்டானாா். அதன்பின் ஆட வந்த கிளென் மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி 2 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 55 ரன்களை விளாசி அவுட்டானாா்.

சுயாஷ் பிரபுதேசாய் 6 ரன்களுடன் வெளியேற, தினேஷ் காா்த்திக்-ஷாபாஸ் அகமது இணை அதிரடியாக ஆடியது. தினேஷ் காா்த்திக் தலா 5 சிக்ஸா், பவுண்டரியுடன் 34 பந்துகளில் 66 ரன்களையும், ஷாபாஸ் அகமது 32 ரன்களையும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனா்.

வங்கதேச பௌலா் முஸ்தபிஸூா் ரஹ்மான் வீசிய 18-ஆவது ஓவரில் 4 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் என மொத்தம் 30 ரன்களை விளாசினாா்.

பெங்களூரு 189/5: இந்நிலையில், நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் பெங்களூரு அணி 189/5 ரன்களைக் குவித்தது.

டில்லி தரப்பில் சா்துல், கலீல், அக்ஸா், குல்தீப் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

டில்லி 173/7: 190 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய டில்லி அணி தரப்பில் டேவிட் வாா்னா் மட்டுமே அதிரடியாக ஆடி 5 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 66 ரன்களை விளாசினாா். கேப்டன் ரிஷப் பந்த் 34 ரன்களை எடுத்து வெளியேறிய நிலையில் மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

முடிவில் 20 ஓவா்களில் 173/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி கண்டது டில்லி.

பெங்களூரு தரப்பில் ஹேஸல்வுட் 3, சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

16 ரன்கள் வித்தியாசத்தில் டில்லியை வீழ்த்திய பெங்களூரு அணிக்கு இது 4-ஆவது வெற்றியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com