இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்: அறிவிப்பு

2011 முதல் இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்டுகள், 101 ஒருநாள், 34 டி20 ஆட்டங்களில் 30 வயது ஸ்டோக்ஸ் விளையாடியுள்ளார். 
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்: அறிவிப்பு

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் சமீபத்தில் விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. இந்தத் தோல்வி இங்கிலாந்துக்கும் ஜோ ரூட்டுக்கும் பெரிய சிக்கலாக அமைந்தது. கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் 4-ல் தோற்ற இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-2 எனப் பின்தங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து கடைசி இடத்தில் அதாவது 9-ம் இடத்தில் உள்ளது. விளையாடிய 11 டெஸ்டுகளில் ஒரு டெஸ்டில் மட்டும் வெற்றி பெற்று 7 டெஸ்டுகளில் தோற்றுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் பதவியைப் பறிக்க வேண்டும், இங்கிலாந்து அணிக்குப் புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தன. ஆனாலும் தொடர்ந்து கேப்டனாக இருக்க ரூட் விருப்பம் தெரிவித்தார். கடைசியில் வேறுவழியின்றி ராஜிநாமா செய்துவிட்டார். 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாக இயக்குநர் ராப் கீ-யுடனான சந்திப்பின் முடிவில் கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ள ஸ்டோக்ஸ் சம்மதித்ததாகவும் ஆண்டர்சன், பிராட் ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்களையும் அணியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளவேண்டும் என அவர் கோரிக்கை வைத்ததாகவும் இங்கிலாந்து ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன. 

2021 ஐபிஎல் போட்டியில் கேட்ச் பிடிக்க முயன்றபோது விரலில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார் ஸ்டோக்ஸ். இதன் காரணமாக அவரால் சர்வதேசப் போட்டிகளில் பங்கு பெற முடியாமல் போனது. பல மாதங்களுக்குப் பிறகு ஆஷஸ் தொடரில் விளையாடிய ஸ்டோக்ஸ், 10 இன்னிங்ஸில் 236 ரன்களும் 4 விக்கெட்டுகளும் மட்டுமே எடுத்தார். ஜூன் மாதம் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. ஜூன் 2 அன்று முதல் டெஸ்ட் தொடங்குகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில்லை என முடிவெடுத்தார் ஸ்டோக்ஸ். 

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஸ்டோக்ஸ் நியமிக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து ஆடவர் அணியின் 81-வது கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 2020-ல் குழந்தை பிறந்த சமயத்தில் இங்கிலாந்துக்குத் திரும்பியதால் மேற்கிந்தியத் தீவுகளில் இங்கிலாந்து அணி விளையாடிய ஒரு டெஸ்டில் கேப்டனாகப் பணியாற்றியுள்ளார் ஸ்டோக்ஸ். அந்த டெஸ்டில் இங்கிலாந்து தோல்வியடைந்தது. 

2011 முதல் இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்டுகள், 101 ஒருநாள், 34 டி20 ஆட்டங்களில் 30 வயது ஸ்டோக்ஸ் விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com