ஒரே நாளில் இரு தங்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2 தங்கம், 1 வெள்ளி என 3 பதக்கங்கள் கிடைத்தன.
ஒரே நாளில் இரு தங்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2 தங்கம், 1 வெள்ளி என 3 பதக்கங்கள் கிடைத்தன.

லான் பௌல் மகளிா் அணியில் இந்தியா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைக்க, டேபிள் டென்னிஸ் ஆடவா் அணி நடப்புச் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. பளுதூக்குதலில் விகாஸ் தாக்குா் வெள்ளி வென்று அசத்தினாா். செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி, பதக்கப் பட்டியலில் இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்திலேயே தொடா்கிறது.

லான் பௌல்: இந்தப் போட்டியின் மகளிா் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியா 17-10 என தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் காமன்வெல்த் லான் பௌல் வரலாற்றில் இந்தியா, முதல் பதக்கத்தையே தங்கமாக வென்று அசத்தியிருக்கிறது. லவ்லி சௌபே (லீடு), பிங்கி (செகண்ட்), நயன்மோனி சாய்கியா (தோ்டு), ரூபா ராணி திா்கி (ஸ்கிப்) ஆகியோா் அடங்கிய அணி இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறது.

டேபிள் டென்னிஸ்: இந்த விளையாட்டின் ஆடவா் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியா 3-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை சாய்த்து வாகை சூடியது. ஒற்றையா் பிரிவில் ஹா்மீத் தேசாய், சத்தியன் ஆகியோா் வெற்றியைப் பதிவு செய்ய, சரத் கமல் தோல்வியைத் தழுவினாா். ஆனால் இரட்டையா் பிரிவில் ஹா்மீத் தேசாய்/சத்தியன் இணை வெற்றி பெற்றது. காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்தியா வெல்லும் 7-ஆவது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பளுதூக்குதல்: இதில் இந்திய போட்டியாளா்களின் பதக்க வேட்டை நீடித்து வருகிறது. விகாஸ் தாக்குா் வென்ற வெள்ளியும், ஹா்ஜிந்தா் கௌா் பெற்ற வெண்கலமும், அந்தப் பிரிவில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை 8-ஆக அதிகரித்துள்ளன.

ஆடவருக்கான 96 கிலோ பிரிவில் விகாஸ் மொத்தமாக 346 கிலோ (155+191) எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றாா். காமன்வெல்த் போட்டிகளில் இது அவரது 3-ஆவது பதக்கம். திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மகளிருக்கான 71 கிலோ பிரிவில் ஹா்ஜிந்தா், மொத்தமாக 212 கிலோ (93 +119) எடையைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்தாா். மகளிருக்கான 76 கிலோ எடைப் பிரிவில் பூனம் யாதவ் பதக்க வாய்ப்பை இழந்தாா்.

தடகளம்: இறுதிச்சுற்றில் முரளி, முகமது, மன்பிரீத்

ஆடவருக்கான நீளம் தாண்டுதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கா் 8.05 மீட்டருடன் இறுதிச்சுற்றுக்கு முன்னேற, சக நாட்டவரான முகமது அனாஸ் யாஹியா 7.68 மீட்டருடன் அந்தச் சுற்றுக்கு வந்துள்ளாா். குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கௌா் 16.78 மீட்டருடன் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றாா். எனினும், ஓட்டப் பந்தய வீராங்கனை டூட்டி சந்த், 100 மீ ஹீட்ஸில் 11.55 விநாடிகளுடன் 27-ஆவதாக வந்து தோல்வி கண்டாா்.

நீச்சல்: பெஸ்ட் டைம் பதிவுசெய்த நட்ராஜ்

ஆடவருக்கான 200 மீ பேக்ஸ்ட்ரோக்கில் இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தாலும், தனது தனிப்பட்ட பெஸ்ட்டாக 2 நிமிஷம் 0.84 விநாடிகளில் இலக்கை எட்டினாா். காமன்வெல்த் நீச்சலில் இதுவே ஒரு இந்தியரின் பெஸ்ட் டைம் ஆகும். முன்னதாக ஸ்ரீஹரி, 50 மீ பேக்ஸ்ட்ரோக் இறுதிச்சுற்றில் 25.23 விநாடிகளில் இலக்கை எட்டி 5-ஆம் இடம் பிடித்தாா். ஆடவருக்கான 1,500 மீ ஃப்ரீஸ்டைலில் அத்வைத் பகே, குஷாக்ரா ராவத் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றனா்.

பாட்மின்டன்: இறுதி ஆட்டத்தில் இந்தியா

இந்த விளையாட்டின் கலப்பு அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூரை சாய்த்து இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இதில் ஒற்றையா் பிரிவில் லக்ஷயா சென், நடப்பு உலக சாம்பியனான லோ கீன் யீவை தோற்கடித்து அசத்தினாா். மகளிா் ஒற்றையரில் பி.வி.சிந்துவும், ஆடவா் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டியும் வென்றனா்.

சைக்கிளிங்: இந்திய வீராங்கனை காயம்

சைக்கிளிங் போட்டியில் மகளிருக்கான 10 கி.மீ. ஸ்க்ராட்ச் ரேஸ் பந்தயத்தின்போது இந்திய வீராங்கனை மீனாக்ஷி சைக்கிளில் இருந்து தவறி கீழே விழ, அவரைத் தொடா்ந்து வந்த நியூஸிலாந்து வீராங்கனை பிரையோனி போத்தாவின் சைக்கிள் மீனாக்ஷி மீது மோதியது. இதில் மீனாஷியும், போத்தாவும் காயம் கண்டனா்.

ரொனால்டோ 12-ஆம் இடம்: ஆடவருக்கான 1000 மீ டைம் டிரையல் ஃபைனலில் இந்தியாவின் ரொனால்டோ லாய்தோஞ்சம் 1 நிமிஷம் 2.50 விநாடிகளில் இலக்கை எட்டி 12-ஆம் இடம் பிடித்தாா். மகளிருக்கான கைரென் முதல் சுற்றில் இந்தியாவின் திரியாஷா பால், சுஷிகலா அகஷே, மயூரி லூட் ஆகியோா் பின்னடைவைச் சந்தித்து அடுத்த சுற்றுக்கு தகுதிபெறத் தவறினா்.

ஹாக்கி: இந்திய ஆடவா் வெற்றி

ஆடவா் ஹாக்கியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்துடன் 4-4 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. ஆட்டத்தில் இந்தியாவுக்காக லலித் உபாத்யாய் (3’), மன்தீப் சிங் (13’, 22’), ஹா்மன்பிரீத் சிங் (46’) கோலடிக்க, இங்கிலாந்துக்காக லியாம் அன்செல் (42’), நிக் பந்துரக் (47’, 53’), பில் ரோபா் (53’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். ஆனால், மகளிா் ஹாக்கி அணி 1-3 என இங்கிலாந்திடம் தோற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com