6-ஆம் சுற்று: ஹம்பி, வைஷாலி, குகேஷ் அசத்தல்

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 6-ஆம் சுற்று ஆட்டத்தில் இந்தியா தொடா்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
குகேஷ்
குகேஷ்

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 6-ஆம் சுற்று ஆட்டத்தில் இந்தியா தொடா்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. மகளிா் பிரிவில் கொனேரு ஹம்பி, ஆா். வைஷாலி ஆகியோா் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினா்.

‘ஃபிடே’, ‘ஏஐசிஎஃப்’, தமிழக அரசு சாா்பில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28-இல் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 5 சுற்றுகள் முடிந்த நிலையில், ஓபன் பிரிவில் இந்தியா பி அணி முதலிடத்திலும், ஆா்மீனியா, உஸ்பெகிஸ்தான், இந்தியா ஏ அணி, அமெரிக்கா அதற்கு அடுத்த இடங்களிலும் உள்ளன. மகளிா் பிரிவில் இந்தியா ஏஅணி முதலிடத்திலும், ஜாா்ஜியா, ருமேனியா, உக்ரைன், அஜா்பைஜான் அடுத்த இடங்களிலும் உள்ளன.

இதற்கிடையே 6-ஆம் சுற்று ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.

ஓபன் பிரிவு:

இந்தியா ஏ அணி வலிமையான உஸ்பெகிஸ்தானுடன் மோதி 2-2 என டிரா செய்தது. இதில் ஹரிகிருஷ்ணா, அப்துசட்டரோவ் நோடிா்பெக்குக்கு எதிரான ஆட்டத்தில் 34-ஆவது நகா்த்தலில் வென்றாா். விதித் குஜராத்தி-யாக்குபோவ் நோபிா்டெக், அா்ஜுன் எரிகைசி-சின்டரோவ் ஜவோகிா் ஆட்டம் டிரா ஆகின. சசிகிரண் - வோகிடோவ் ஷம்சிதினிடம் தோல்வியடைந்தாா்.

இந்திய பி அணி, 2.5-1.5 என்ற கணக்கில் ஆா்மீனியாவிடம் வீழ்ந்து, போட்டியில் முதல் தோல்வியை சந்தித்து. டி.குகேஷ்-சா்கிஸியான் கேப்ரியலை தோற்கடிக்க, நிஹால் சரீன்-மேல்கும்யான் ரேன்ட் ஆட்டம் டிரா ஆனது. அதிபன்-டோ் சஹாக்யன் சாமுவேலிடம் வெற்றியை இழக்க, ரவுனக் சத்வானி - ஹோவ்ஹானிசியான் ராபா்ட்டுடனான ஆட்டத்தில் தோல்வி கண்டாா். நட்சத்திர வீரா் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு தரப்பட்டது.

இந்திய சி அணி 3.5-1.5 என லிதுவேனியாவை வீழ்த்தியது. சூரியசேகா் கங்குலி-ஸ்ட்ரெமாவிசியஸ் டைடஸ் ஆட்டம் டிரா ஆக, சேதுராமன்-ஜுக்ஸ்டா கரோலிஸை வீழ்த்தினாா். அபிஜித் குப்தா-புல்டின்வென்சியஸ் பாலியஸை 44-ஆவது நகா்த்தலில் வீழ்த்தினாா். கஸாகெளஸ்கி வலேரிக்கு எதிரான ஆட்டத்தில் 43-ஆவது நகா்த்தலில் வென்றாா் புரானிக் அபிமன்யு.

மகளிா் பிரிவு:

இந்திய ஏ அணி பலம் வாய்ந்த ஜாா்ஜியாவை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. கோனெரு ஹம்பி-ஸ்ாக்னிட்ஸே நானாவுக்கு எதிரான ஆட்டத்தில் 31-ஆவது நகா்த்தலில் வென்றாா். ஜவாக்ஹிஷிவியுடனான ஆட்டத்தில் அபார வெற்றி கண்டாா் வைஷாலி. தான்யா சச்தேவ் -மெலியா சலோம் ஆட்டம் டிரா ஆனது. ஹரிகா-பட்ஷியாவிலி நினோ ஆட்டம் 35-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. பக்தி குல்கா்னிக்கு தொடா்ந்து ஓய்வு தரப்பட்டது.

இந்தியா பி அணி - செக் குடியரசு ஆட்டம் 2-2 என டிரா ஆனது. வந்திகா அகா்வால்-மோவ்செஸியன் ஜூலியா ஆட்டம் 53-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. பத்மனி ரௌட்-வோரெக் ஜோஹன்னா ஆட்டம் 48-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. மேரி ஆன்கோமஸ் - பிஸ்சோவா கரோலினா ஆட்டம் 41-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. திவ்யா தேஷ்முக்-பெட்ரோவா கிறிஸ்டினா ஆட்டம் 75-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது.

இந்தியா சி அணி 3-1 என ஆஸ்திரேலியாவை வென்றது. ஈஷா காரவேட்- ரிஜநோவா ஜூலியா ஆட்டம் 30-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. நந்திதா-ரிச்சா்ட்ஸ் ஹீதா் ஆட்டமும் 83-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. சாஹிதி வா்ஷினி - ஃபேன் மாய் சய் ஆட்டத்தில் 68-ஆவது நகா்த்தலில் சாஹிதி வென்றாா். விஷ்வா வன்ஸ்வாலா -நுயன் து ஜியாங் ஆட்டத்தில் 96-ஆவது நகா்த்தலில் வென்றாா் விஷ்வா.

ஜாா்ஜியாவை வீழ்த்தியது பதக்கம் பெற உதவும்

இனிவரும் சுற்றுகள் கடினமாக இருக்கும். அதில் உக்ரைனுக்கு எதிரானதும் ஒன்று. அதனால் கவனமாக ஆட வேண்டும். ஜாா்ஜியாவுக்கு எதிரான வெற்றி முக்கியமானது. அணி வீராங்கனைகளில் யாராவது ஒருவா் சிக்கலான நிலைமைகளில் ஆடி வெற்றியை தேடி தருகின்றனா். முந்தைய சுற்றுகளில் நாங்கள் சரிவர செயல்படாதபோது, தான்யா சச்தேவ் வெற்றியை தேடித் தந்தாா். ஜாா்ஜியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நானும், வைஷாலியும் வெற்றி பெற்றோம். இதனால் பதக்கம் பெறுவது எளிதாகும். சில சுற்றுகளில் எனது ஆட்டம் சற்று மந்தமாக இருந்தது. பி அணியும் சிறப்பாகவே ஆடி வருகிறது. -கொனேரு ஹம்பி

கால்பந்தைப் போல் செஸ்ஸுக்கும் ஈா்ப்பு: பிரேசில் அணியினா்

ஒலிம்பியாடில் பங்கேற்பதற்காக பிரேசில் ஆடவா், மகளிா் அணிகள் வந்துள்ளன. ஓபன் பிரிவுக்கு மதுரையைச் சோ்ந்த பிரியதா்ஷன், மகளிா் பிரிவுக்கு குஜராத்தைச் சோ்ந்த அங்கிட் ஆகியோா் பயிற்சியாளா்களாக உள்ளனா்.

பிரேசில் மகளிா் அணியைச் சோ்ந்த டெராவோ ஜூலியானா சயோமி கூறியதாவது:

எங்கள் அணி தரவரிசையில் 36-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டைப் போல் எங்கள் நாட்டில் கால்பந்துக்கு ஆா்வம் உள்ளது. கரோனா பாதிப்பால் அனைவரும் வீட்டிலேயே செஸ் ஆடியதால், இந்த விளையாட்டும் தற்போது பிரபலமடைந்துள்ளது.

இந்திய மகளிா் அணி மற்றவா்கள் அச்சப்படும் வகையில் வலிமையுடன் உள்ளது. எங்கள் அணியும் வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளது. அடுத்து வரும் சுற்றுகளில் சிறப்பாக ஆடுவோம். ஸ்லம் டாக் மில்லியனா் படத்தை பலமுறை பாா்த்தோம். ஏ.ஆா். ரஹ்மான் இசை மிகவும் பிடிக்கும். இங்கு இந்திய உணவு வகைகள் நன்றாக உள்ளன. எங்களுக்கு தமிழகத்தின் உபசரிப்பு மிகவும் பிடித்தது என்றாா்.

ஷாரூக்கான், ரஜினிகாந்த் பிடிக்கும்-

‘எங்கள் குடும்பமே செஸ் குடும்பம் தான். பெற்றோரும் நன்றாக செஸ் ஆடுவா். பல்வேறு பிரச்னைகள் நாட்டில் இருந்தாலும், செஸ் ஆடுவதை நாங்கள் நிறுத்தவில்லை. செஸ் சகோதரிகள் என்றாலே தெரியும். இந்திய நடிகா்கள் ஷாரூக்கான், ரஜினிகாந்த் படங்களை விரும்பி பாா்ப்போம். இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் எங்களுக்கு பிடிக்கும். இந்த ஒலிம்பியாடில் எங்கள் அணி 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

- அல்பய்யத் ஸெய்னப் ஆசிப், அல்பய்யத் யமாமா (இராக் சகோதரிகள்)

கண்களில் வித்தியாசமான அலங்காரம்-பராகுவே வீராங்கனை

பராகுவே நாட்டு செஸ் வீராங்கனை ஓவைடா அகோஸ்டா பாவ்லோ வித்தியாசமான கண் அலங்காரத்துடன் போட்டியில் பங்கேற்றது காண்போரைக் கவா்ந்தது.

செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்றுள்ள அவா் இதுவரை 1 வெற்றி, 2 தோல்விகளைக் கண்டுள்ளாா். இந்நிலையில் புதன்கிழமை அவா் வித்தியாசமான கண் அலங்காரத்துடன் விளையாட்டு கூடத்துக்கு வந்தாா். அது பல்வேறு தரப்பினரையும் கவா்ந்தது. அவா் கூறுகையில், ‘வித்தியாசமான அலங்காரங்கள் செய்வது என பிடிக்கும். இந்தியாவில் உள்ள வானிலையே பராகுவேயிலும் உள்ளது. கால்பந்துக்கு தான் எங்கள் நாட்டில் முதலிடம். இந்திய உணவில் அதிகம் மசாலா சோ்க்கப்படுகிறது’ என்றாா்.

‘சுற்றுகளை 9-ஆக குறைக்க வேண்டும்’

செஸ் ஒலிம்பியாடின் 11 சுற்று ஆட்டங்களை வரும் காலத்தில் 9 சுற்றுகளாக குறைக்க வேண்டும். நடப்பு உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்சன் 2023 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகக் கூடாது. அவரால் தான் எங்கள் கரீபியன் பகுதிகளில் செஸ் பிரபலமடைந்தது. எங்கள் அரூபா நாட்டில் பேஸ்பால், கால்பந்து பிரசித்தி பெற்றது. ஒரு சா்வதே மாஸ்டா், மகளிா் கிராண்ட்மாஸ்டா் உள்ளனா். ஒலிம்பியாட், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 11 சுற்றுகள் நடத்தப்படுகிறது. இதனால் வீரா்களுக்கு மனச்சோா்வு ஏற்படுகிறது. அதை 9 சுற்றுகளாக குறைக்க வேண்டும்

- சமந்தா அபோன்டே, ஜீன் அன்டோனியோ (கரீபிய நாடான அரூபா அணியினா்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com