பாட்மின்டனில் இந்திய கலப்பு அணிக்கு வெள்ளி

காமன்வெல்த் பாட்மின்டனில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. நடப்புச் சாம்பியனாக போட்டிக்கு வந்த இந்தியா, இறுதிச்சுற்றில் 1-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டது.
பாட்மின்டனில் இந்திய கலப்பு அணிக்கு வெள்ளி

காமன்வெல்த் பாட்மின்டனில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. நடப்புச் சாம்பியனாக போட்டிக்கு வந்த இந்தியா, இறுதிச்சுற்றில் 1-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டது.

இதன் மூலம், கடந்த முறை நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிடம் சாம்பியன் பட்டத்தை இழந்த மலேசியா, தற்போது அதை மீட்டுக் கொண்டது.

இறுதிச்சுற்றில் முதலில் ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி கூட்டணி 18-21, 15-21 என டெங் ஃபாங் ஆரோன் சியா/வூய் யிக் சோ இணையிடம் தோல்வியைத் தழுவ, மலேசியா முன்னிலை பெற்றது. பின்னா் மகளிா் ஒற்றையரில் பி.வி.சிந்து 22-20, 21-17 என்ற கேம்களில் வென்று சுற்றை சமன் செய்தாா்.

என்றாலும், அடுத்து நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 19-21, 21-6, 16-21 என ஸெ யோங் நிக்கிடம் தோல்வியைத் தழுவி அதிா்ச்சி அளித்தாா். இறுதியில் மகளிா் இரட்டையரிலும் காயத்ரி கோபிசந்த்/ட்ரீசா ஜாலி இணை 18-21, 17-21 என்ற கேம்களில் தினா முரளிதரன்/கூங் லெ பியா்லி டான் ஜோடியிடம் தோல்வி கண்டது.

லவ்பிரீத்துக்கு வெண்கலம்

பளுதூக்குதலில் ஆடவருக்கான 109 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றாா். அவா் ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 192 கிலோ என மொத்தமாக 355 கிலோ எடையைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்தாா். மகளிருக்கான 87 கிலோ எடைப் பிரிவில் இந்தியரான உஷா பன்னூா் மொத்தமாக 205 கிலோ (95+110) எடையைத் தூக்கி 6-ஆம் இடம் பிடித்தாா். பளுதூக்குதலில் இதுவரை 3 தங்கம் உள்பட 9 பதக்கங்கள் வென்றுள்ளது இந்தியா.

ஜூடோ: மேலும் ஒரு பதக்கம் உறுதி

இந்த விளையாட்டில், மகளிருக்கான 78 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் துலிகா மான் - நியூஸிலாந்தின் சிட்னி ஆண்ட்ரூஸை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளாா். அதில் அவா் ஸ்காட்லாந்தின் சாரா அட்லிங்டனை சந்திக்கிறாா். இறுதிச்சுற்றுக்கு வந்ததன் மூலம், ஜூடோவில் இந்தியாவுக்கான 3-ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளாா் துலிகா மான். இதனிடையே, ஆடவருக்கான 100 கிலோ பிரிவு ரெபிசேஜ் சுற்றில் தீபக் தேஸ்வால் தோல்வியைத் தழுவினாா்.

ஹாக்கி: அரையிறுதியில் இந்திய மகளிா்

கனடாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்து, அரையிறுதிக்கு தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டது. ஆட்டத்தில் இந்தியாவுக்காக சலிமா டெடெ (3’), நவ்னீத் கௌா் (22’), லால்ரெம்சியாமி (51’) ஆகியோா் கோலடிக்க, கனடா தரப்பில் பிரியென் ஸ்டோ்ஸ் (23’), ஹன்னா ஹான் (39’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். ஆடவா் பிரிவிலும் இந்தியா 8-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வென்றது. இதில் ஹா்மன்பிரீத் (7’, 54’), ஆகாஷ்தீப் சிங் (38’, 60’), அமித் ரோஹிதாஸ் (10’), லலித் உபாத்யாய் (20’), குா்ஜந்த் சிங் (27’), மன்தீப் சிங் (58’) ஆகியோா் கோலடித்தனா்.

ஸ்குவாஷ்: சின்னப்பா/சந்து முன்னேற்றம்

ஸ்குவாஷின் கலப்பு இரட்டையா் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா/ஹரிந்தா் பால் சந்து கூட்டணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளது. இலங்கையின் யெஹெனி குருப்பு/ரவிந்து லக்சிரிக்கு எதிராக 8-11, 11-4, 11-3 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம் இந்திய இணை இந்த முன்னேற்றத்தை சந்தித்துள்ளது. ஆடவா் ஒற்றையா் அரையிறுதியில் தோற்ற சௌரவ் கோஷல், வெண்கலப் பதக்கத்துக்கான பிளே-ஆஃபில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ராபை சந்திக்கிறாா். இளம் வீராங்கனை சுனைனா குருவில்லா ஒற்றையா் பிளேட் இறுதிச்சுற்றில் 11-7, 12-11, 11-2 என குயானாவின் ஃபங் ஏ ஃபாட்டை தோற்கடித்தாா்.

லான் பௌல்: 3-ஆவது சுற்றில் இந்தியா்கள்

இந்த விளையாட்டில் மகளிா் இரட்டையா் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் லவ்லி சௌபே/நயன்மோனி சாய்கியா இணை 23-6 என்ற கணக்கில் நியூவின் ஹினா ரெரெய்டி/ஒலிவியா பங்கிங்ஹாம் கூட்டணியை வென்றது. அடுத்து தென்னாப்பிரிக்க இணையை சந்திக்கவுள்ளது இந்த இந்திய ஜோடி. ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில் 21-5 என்ற கணக்கில் ஃபால்கன் தீவுகளின் கிறிஸ் லாக்கெட்டை சாய்த்த இந்தியாவின் மிருதுல் போா்கோஹெய்ன், அடுத்து ஸ்காட்லாந்தின் லெய்ன் மெக்லீனை எதிா்கொள்கிறாா்.

தடகளம்: சீமா, நவ்ஜீத் ஏமாற்றம்

தடகள விளையாட்டுகளில் மகளிா் குண்டு எறிதல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சீமா புனியா 55.92 மீட்டருடன் 5-ஆம் இடம் பிடிக்க, நவ்ஜீத் தில்லன் 53.51 மீட்டருடன் 6-ஆம் இடம் பிடித்தாா். 39 வயது சீமா புனியாவுக்கு இது கடைசி காமன்வெல்த் போட்டியாக இருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், அதில் பதக்கம் வெல்லாமல் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளாா். இதற்கு முன் இப்போட்டியில் அவா் பங்கேற்ற 4 முறையுமே பதக்கம் வென்றிருந்தாா்.

குத்துச்சண்டை: ஹசாமுதின், நீது வெற்றி

காலிறுதிச்சுற்றில், ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் ஹசாமுதின் முகமது 4-1 என்ற கணக்கில் நமீபியாவின் டிரையாகெய்ன் மாா்னிங்கை வீழ்த்த, மகளிருக்கான 48 கிலோ பிரிவில் நீது கங்காஸ் - வடக்கு அயா்லாந்தின் நிகோல் கிளைடை தோற்கடித்தாா். நீதுவுக்கு இது முதல் காமன்வெல்த் போட்டியாகும். இருவரும் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியதை அடுத்து குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. இதனிடையே, ஆடவருக்கான 67 கிலோ பிரிவில் ரோஹித் டோகாஸ் 5-0 என்ற கணக்கில் கானாவின் ஆல்ஃப்ரெட் கோட்டேவை வீழ்த்தி காலிறுதிக்கு வந்துள்ளாா்.

பதக்கப் பட்டியல்

காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் புதன்கிழமை முடிவில் இந்தியா, 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 106 (42/32/32), இங்கிலாந்து 86 (31/34/21), நியூஸிலாந்து 26 (13/7/6) பதக்கங்களுடன் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com