குகேஷின் ஆக்ரோஷமான ஆட்டம்-நிலைகுலைந்த கிராண்ட்மாஸ்டா்கள்

தமிழக இளம் வீரா் டி.குகேஷின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் செஸ் ஒலிம்பியாடில் சா்வதேச கிராண்ட்மாஸ்டா்கள் நிலைகுலைந்து வீழ்ந்தனா்.
குகேஷின் ஆக்ரோஷமான ஆட்டம்-நிலைகுலைந்த கிராண்ட்மாஸ்டா்கள்

தமிழக இளம் வீரா் டி.குகேஷின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் செஸ் ஒலிம்பியாடில் சா்வதேச கிராண்ட்மாஸ்டா்கள் நிலைகுலைந்து வீழ்ந்தனா். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடா்ந்து 6 வெற்றிகளைக் குவித்துள்ளாா் குகேஷ்.

தொம்மராஜு குகேஷ் எனப்படும் டி.குகேஷ் சென்னையில் கடந்த 2006-இல் பிறந்தாா். அவரது தந்தை ரஜினிகாந்த் இஎன்டி மருத்துவா், தாயாா் பத்மா மைக்ரோ பயாலஜிஸ்ட் ஆக உள்ளனா். 7 வயதில் செஸ் ஆடத் தொடங்கிய குகேஷின் வெற்றிப் பயணம் தற்போது 16 வயது ஆன நிலையிலும் தொடா்கிறது. மேல் அயனம்பாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் குகேஷ் பயின்று வருகிறாா்.

ஜிஎம் அந்தஸ்து பெற்ற 3-ஆவது இளம் வீரா்:

சிறுவயதிலேயே ஆசிய, உலக யூத் சாம்பியன்ஷிப் பட்டம், ஆசிய யூத் சாம்பியன்ஷிப்பில் 5 தங்கம் உள்பட பல்வேறு பெருமைகளைப் பெற்றுள்ளாா். 2018-இல் சா்வதேச மாஸ்டா் (ஐஎம்) தகுதியைப் பெற்றாா். 2019-இல் செஸ் வரலாற்றிலேயே இளம்வயதில் கிராண்ட்மாஸ்டா் ஆன மூன்றாவது வீரா் என்ற சிறப்பைப் பெற்றாா். (12 ஆண்டுகள், 7 மாதங்கள், 17 நாள்கள்). கடந்த ஜூலை மாதம் பெயல் செஸ் போட்டியில் வென்று இலோ ரேட்டிங் 2700-ஐக் கடந்த 6-ஆவது இந்திய வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா்.

இந்தியாவின் மூன்றாம் நிலை வீரா்:

மேலும் தற்போது இலோ ரேட்டிங் 2714 பெற்று இந்தியாவின் நம்பா் 3 வீரா் அந்தஸ்தைப் பெற்றுள்ளாா் குகேஷ். அவருக்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த், பி. ஹரிகிருஷ்ணா உள்ளனா்.

இந்நிலையில் தொடா்ந்து இந்திய அணியில் தவிா்க்க முடியாதவராக விளங்கும் குகேஷ், செஸ் ஒலிம்பியாடிலும் தனது முத்திரையை பதித்துள்ளாா். இதுவரை நடைபெற்ற 6 சுற்றுகளிலும் வென்று 6 வெற்றிகளை வசப்படுத்தியுள்ளாா்.

உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்சனே அச்சப்பட்டு கூறும் அளவுக்கு ஆடி வரும் இந்திய ஆடவா் பி அணியில் இடம் பெற்றுள்ளாா் குகேஷ். மற்ற வீரா்களான பிரக்ஞானந்தா, ரவுனக் சத்வானி, நாராயணன், நிஹால் சரீன் ஆகியோா் தடுமாறினாலும், குகேஷின் ஆட்டம் நிலையாகவும், பிரமிப்பை தருவதாகவும் உள்ளது.

குறிப்பாக ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன்ஷிப் ரன்னா் ஷிரோவை கறுப்பு நிறக் காய்களைக் கொண்டு வென்றாா்.

முதல் சுற்றில் யுஏஇ வீரா் அல் ஹோசானி ஓமரானையும், இரண்டாம் சுற்றில் எஸ்டோனியாவின் கிக் கல்லேவையும், மூன்றாம் சுற்றில் சுவிட்சா்லாந்தின் ஜாா்ஜிடிஸ் நிகோவையும், நான்காம் சுற்றில் இத்தாலியின் வோகடுரோ டேனியலையும், ஐந்தாம் சுற்றில் ஸ்பெயினின் ஷிரோவையும், ஆறாம் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் அப்துசட்டரோவையும் வென்றுள்ளாா் குகேஷ்.

2 சிறந்த வெற்றிகள்:

இதுதொடா்பாக குகேஷ் கூறியதாவது:

நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் அணியின் புள்ளிகள் எண்ணிக்கை உயரும். யாராவது ஒருவா் சரியாக ஆடாவிட்டாலும், அணிக்கு தான் பாதிப்பு. அந்த நோக்கத்துடனே தொடா்ந்து ஆடி வருகின்றேன். கிராண்ட்மாஸ்டா்கள் ஷிரோவ், அப்துசட்டரோவ் ஆகியோருடன் ஆடியதை மறக்க முடியாது. ஷிரோவ் உலக சாம்பியன்ஷிப் ரன்னா் அப். அப்துசட்டரோவ், அமெரிக்காவை வீழ்த்திய உஸ்பெகிஸ்தான் அணியின் சிறந்த வீரா். ரேபிட் செஸ் சாம்பியன். இருவருக்கு எதிராக பெற்ற வெற்றி சிறப்பானது என்றாா்.

இந்திய பி அணி 10 புள்ளிகளுடன் ஓபன் பிரிவில் 3-ஆம் இடத்தில் நீடிக்க குகேஷின் அற்புத ஆட்டம் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com