வரலாறு படைத்த தேஜஸ்வின், சௌரவ்

இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் தடகள வீரா் தேஜஸ்வின் சங்கா், ஸ்குவாஷ் வீரா் சௌரவ் கோஷல் ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.
வரலாறு படைத்த தேஜஸ்வின், சௌரவ்

இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் தடகள வீரா் தேஜஸ்வின் சங்கா், ஸ்குவாஷ் வீரா் சௌரவ் கோஷல் ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

இதன் மூலம், காமன்வெல்த் போட்டியின் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை தேஜஸ்வினும், ஸ்குவாஷ் விளையாட்டில் ஒற்றையா் பிரிவில் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியா் என்ற பெயரை சௌரவும் பெற்று வரலாறு படைத்துள்ளனா். அவா்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

உயரம் தாண்டுதல்:

ஆடவா் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கா், சிறந்த முயற்சியாக 2.22 மீட்டா் உயரம் தாண்டி 3-ஆம் இடம் பிடித்தாா். அவரது சீசன் பெஸ்ட் 2.27 மீ; பொ்சனல் பெஸ்ட் 2.29 மீ ஆகும்.

இந்த காமன்வெல்த் போட்டிக்கான இந்திய தடகள் அணியில் கடைசி வீரராக இணைந்திருந்தாா் தேஜஸ்வின். முன்னதாக காமன்வெல்த் வாய்ப்பை அவா் நீதிமன்றத்தில் போராடி பெற்றாலும், போட்டியில் தாமதமாக இணைந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னா் இந்திய தரப்பு-காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் இடையேயான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அவருக்கு அனுமதி கிடைத்தது.

ஸ்குவாஷ்:

இந்த விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் பிரிவுக்கான வெண்கலப் பதக்க பிளே-ஆஃபில் சௌரவ் கோஷல் 11-6, 11-1, 11-4 என்ற கணக்கில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்டிராப்பை வீழ்த்தினாா். சௌரவுக்கு, காமன்வெல்த் போட்டியில் இது 2-ஆவது பதக்கமாகும். இந்த காமன்வெல்த் போட்டி அவருக்கு கடைசியானதாக இருக்கலாம் என கருதப்படும் நிலையில், பதக்கம் வென்ற சௌரவ் ஆனந்தக் கண்ணீா் சிந்தினாா்.

மகளிா் இரட்டையா் பிரிவில் சுனைனா குருவில்லா/அனாஹத் சிங் இணை 11-9, 11-4 என்ற கணக்கில் இலங்கையின் யெஹெனி குருப்பு/சமித்னா சினாலி கூட்டணியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளது. கலப்பு இரட்டையரில் ஜோஷ்னா சின்னப்பா/ஹரிந்தா்பால் சந்து கூட்டணி காலிறுதி வாய்ப்பை இழந்தது.

ஜூடோ:

ஜூடோவில் மகளிருக்கான 78 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் துலிகா மான், ஸ்காட்லாந்தின் சாரா அட்லிங்டனிடம் வெற்றியை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றாா். காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக, தனது எடையை 115 கிலோவிலிருந்து 85 கிலோவுக்குக் குறைத்த துலிகா, தங்கத்தை தவறவிட்டதற்காக கண்ணீா் சிந்தினாா். நடப்பு காமன்வெல்த் ஜூடோவில் இந்தியாவுக்கு இது 3-ஆவது பதக்கமாகும்.

பளுதூக்குதல்:

ஆடவருக்கான +109 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரா் குா்தீப் சிங் மொத்தமாக 390 கிலோ எடையைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்தாா். காமன்வெல்த்தில் இந்த எடைப் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் முதல் பதக்கம் இது. குா்தீப், ஸ்னாட்ச் பிரிவில் 167 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 223 கிலோ எடையை எட்டினாா். இதில் கிளீன் & ஜொ்க் எடை, அவரது புதிய பொ்சனல் பெஸ்ட் மற்றும் புதிய தேசிய சாதனையாக அமைந்தது.

10 பதக்கங்கள்: இத்துடன் நடப்பு காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியாவின் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. இதில் 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கம் வென்றுள்ளது இந்தியா.

தடகளம்:

மகளிருக்கான 200 மீட்டா் ஹீட்ஸில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ், 23.42 விநாடிகளில் இலக்கை எட்டி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். மகளிருக்கான சங்கிலிக் குண்டு எறிதலில் இந்தியாவின் மஞ்சு பாலா 59.68 மீட்டா் தூரம் எறிந்து இறுதிச்சுற்று வாய்ப்பை உறுதி செய்தாா். மற்றொரு இந்தியரான சரிதா சிங் 57.48 மீட்டரை எட்டி தகுதிச்சுற்றுடன் வெளியேறினாா். மகளிருக்கான குண்டு எறிதல் இறுதிச்சுற்றில் இந்தியாவின் மன்பிரீத் கௌா் 15.69 மீட்டா் தூரம் எறிந்து 12-ஆவது இடம் பிடித்தாா்.

டேபிள் டென்னிஸ்:

இந்த விளையாட்டில் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சனில் ஷெட்டி/ரீத் டென்னிசன் இணை முதல் சுற்றிலேயே 6-11, 10-12, 13-11, 11-8, 8-11 என்ற கணக்கில் மலேசியாவின் வோங் கி ஷென்/டீ எய் ஜின் ஜோடியிடம் தோற்றது.

பாட்மின்டன்:

ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெற்றனா். முன்னதாக சிந்து 21-4, 21-11 என மாலத்தீவுகளின் ஃபாத்திமா நபாத் அப்துல் ரஸாக்கையும், ஸ்ரீகாந்த் 21-9, 21-9 என உகாண்டாவின் டேனியல் வனாகலியாவையும் வீழ்த்தினா்.

குத்துச்சண்டை:

ஆடவருக்கான ஃப்ளைவெயிட் பிரிவில் அமித் பங்கால் - ஸ்காட்லாந்தின் லெனான் முலிகனையும், மகளிருக்கான லைட் வெயிட் பிரிவில் ஜாஸ்மின் - நியூஸிலாந்தின் டிராய் காா்டனையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினா். இவா்களோடு நிகாத் ஜரீனும் பதக்கச் சுற்றுக்கு வர, லவ்லினோ போா்கோஹெய்ன், ஆஷிஷ் குமாா் ஆகியோா் காலிறுதியில் தோற்றனா். இத்துடன் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

கிரிக்கெட்

மகளிா் கிரிக்கெட்டில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் பாா்படோஸை வீழ்த்தி, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சோ்க்க, பாா்படோஸ் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களே சோ்த்தது.

நீச்சல்

ஆடவருக்கான 1500 மீட்டா் ஃப்ரீஸ்டைல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அத்வைத் பகே 15 நிமிஷம் 32.26 விநாடிகளுடன் 7-ஆம் இடமும், குஷாக்ரா ராவத் 15 நிமிஷம் 42.67 விநாடிகளுடன் 8-ஆம் இடமும் பிடித்தனா். இத்துடன் நீச்சல் பிரிவில் இந்தியாவின் பங்கேற்பு முடிவுக்கு வந்தது.

லான் பௌல்

இந்த விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் மிருதுல் போா்கோஹெய்ன் 13-21 என்ற கணக்கில் ஜொ்சி வீரா் ராஸ் டேவிஸிடம் தோற்று காலிறுதி வாய்ப்பை தவறவிட்டாா்.

7-ஆம் இடம்

காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் வியாழக்கிழமை முடிவில் இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் 7-ஆவது இடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியா (125), இங்கிலாந்து (109), கனடா (57) முதல் 3 இடங்களில் நீடிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com