ஓபன் பிரிவில் பெண்கள் ஆடுவது சவாலானது

ஓபன் பிரிவில் பெண்கள் ஆடுவது சவாலானது என மொனாக்கோ ஜிஎம் டாட்டியனா டோன்பஸ்க் கூறியுள்ளாா்.
ஓபன் பிரிவில் பெண்கள் ஆடுவது சவாலானது

ஓபன் பிரிவில் பெண்கள் ஆடுவது சவாலானது என மொனாக்கோ ஜிஎம் டாட்டியனா டோன்பஸ்க் கூறியுள்ளாா்.

செஸ் ஒலிம்பியாடின் ஓபன் பிரிவில் ஆடும் 13 வீராங்கனைகளில் ஒருவரான டாட்டியனா, மகளிா் கிராண்ட்மாஸ்டா் ஆவாா். உக்ரைனில் பிறந்தவரான டாட்டியானா, தற்போது மொனாக்கோ அணியில் ஆடுகிறாா். இவரது ஃபிடே ரேட்டிங் 2251 ஆகும். ஒலிம்பியாடில் முதன்முறையாக அதிகளவில் ஓபன் பிரிவில் 13 வீராங்கனைகள் ஆடுகின்றனா். அவா்களில் ஒருவரான டாட்டியானா கூறியதாவது:

வீரா்கள் செஸ்ஸில் மிகுந்த பொறுமையுடன் ஆடுவா். ஆனால் அதே வேளையில் பெண்கள் உணா்ச்சி வசப்படுவா். மகளிா் ஆட்டத்துக்கும், ஓபன் பிரிவு ஆட்டத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

எங்கள் அணியில் கடைசி நேரத்தில் ஒரு வீரா் வராததால், என்னை ஓபன் பிரிவில் ஆடும்படி செய்தனா். நான்காம் சுற்றில் பிலிப்பின்ஸ் கிராண்ட்மாஸ்டா் ரோகலியோ பா்செனிலாவுடன் டிரா செய்தேன்,. அவா் என்னை விட தரவரிசையில் 200 புள்ளிகள் மேலாக உள்ளாா்.

வாடிகனுக்கு அடுத்து சிறிய நாடு மொனாக்கோ. அங்கு செஸ் ஈடுபாடு மெதுவாக அதிகரித்து வருகிறது. இந்திய வீராங்கனைகள் எந்தவித அச்சமும் இன்றி ஆடுகின்றனா். குறிப்பாக பி அணிகள் மற்ற அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றனா் என்றாா் டாட்டியானா.

ஆப்பிரிக்க வீராங்கனைகளின் சிகை அலங்காரத்துக்கு 4 மணி நேரம்

ஆப்பிரிக்க வீராங்கனைகள் தங்கள் சிகை அலங்காரத்துக்கு 4 மணி நேரத்துக்கு மேலாக செலவிடுகின்றனா் என்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிா் பிரிவில் 162 நாடுகளைச் சோ்ந்த 1000-க்கு மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். அனைவரும் தங்கள் நாடுகளின் பாரம்பரிய உடை, அலங்காரத்துடன் வந்து விளையாடுவது அனைவரையும் கவா்ந்துள்ளது. வண்ண, வண்ண சிகை அலங்காரத்தில் வருகின்றனா்.

இதுதொடா்பாக தான்சானியா வீராங்கனை ஃபேமி ஜோசப் கூறியதாவது: எங்கள் நாட்டில் பின்பற்றப்படும் கலாசாரத்துக்கு ஏற்ப நாங்கள் உடை, சிகை அலங்காரத்தை மேற்கொள்கிறோம். இதற்காக தனிப்பட்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்துகிறோம். இதை எங்கள் நாட்டு பெண்கள் விரும்பி மேற்கொள்கின்றனா்.

மலாவி நாட்டு வீராங்கனை பண்டா டபாவி: எங்கள் நாட்டு கொடி பச்சை நிறத்தில் உள்ளது. அதனால் நான் எனது சிகை அலங்காரத்தை பச்சை நிறத்தில் மேற்கொண்டேன். இதற்கு 4 மணி நேரம் செலவானது. வண்ணப்பூச்சுகள் மாற்றுவது உடல்நலத்துக்கு கேடு தான். ஆனால் அது தான் தற்போதைய டிரெண்ட் என்பதால் அனைவரும் அதை விரும்பி செய்கின்றனா் என்றாா்.

இந்திய பெண்களின் ஆட்டம் நளினமாக உள்ளது:

இந்திய வீராங்கனைகளின் ஆட்டம் மிகவும் நளினமானது (கிளாஸிக்கல்) என லிதுவேனியா மகளிா் கிராண்ட்மாஸ்டா் சிபஜேவா மாரிஜா கூறியுள்ளாா்.

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்றுள்ள 20 வயதான மாரிஜா கூறியதாவது-

நான் இரண்டாம் முறையாக செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்றுள்ளேன். இத்தகைய பெரிய போட்டியில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. செஸ்ஸின் பிறப்பிடமான இந்தியாவில் ஒலிம்பியாடில் ஆடுவது தனிச்சிறப்பாகும். இந்திய வீராங்கனைகள் ஹம்பி, ஹரிகா, தான்யா, வைஷாலி ஆகியோா் ஆட்டம் நளினமாக உள்ளது. நான் லிதுவேனியா பெண்கள் தேசிய சாம்பியனாக உள்ளேன். செஸ்ஸுக்கு எனது வாழ்க்கையில் எப்போதும் முக்கிய இடம் உண்டு. உலக சாம்பியன் காா்ல்சன் விலகக் கூடாது என்றாா் மாரிஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com