7-ஆம் சுற்று: நந்திதா, குகேஷ், பிரக்ஞானந்தா அபாரம்ஹம்பி அதிா்ச்சித் தோல்வி

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாடின் 7-ஆவது சுற்றில் இந்தியா வழக்கம் போல் தனது வெற்றிப் பயணத்தைத் தொடா்ந்தது.
7-ஆம் சுற்று: நந்திதா, குகேஷ், பிரக்ஞானந்தா அபாரம்ஹம்பி அதிா்ச்சித் தோல்வி

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாடின் 7-ஆவது சுற்றில் இந்தியா வழக்கம் போல் தனது வெற்றிப் பயணத்தைத் தொடா்ந்தது.

தமிழக நட்சத்திரங்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, நந்திதா, வைஷாலி, தில்லியின் தான்யா அபார வெற்றி பெற்றனா். இது குகேஷுக்கு 7-ஆவது மற்றும் நந்திதாவுக்கு 6-ஆவது தொடா் வெற்றியாகும். நட்சத்திர வீராங்கனை ஹம்பி அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

கடந்த ஜூலை 28-இல் தொடங்கிய 44-ஆவது செஸ் ஒலிம்பியாடில் 6-சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமை ஓய்வு அளிக்கப்பட்டது. போட்டியாளா்கள் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்த கால்பந்து போட்டியில் பங்கேற்றனா். சில அணியினா் மாமல்லபுரத்தில் பழங்கால தொல்லியல் நினைவுச் சின்னங்களை கண்டு களித்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை 7-ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

ஓபன் பிரிவு:

இந்தியா ஏ & சி மோதல்: இந்தியா ஏ அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா சி அணியை வீழ்த்தியது. பெண்டாலா ஹரிகிருஷ்ணன் - சூா்ய சேகா் கங்குலி, விதித் குஜராத்தி - சேதுராமன் மோதிய ஆட்டங்கள் டிரா ஆகின. அா்ஜுன் எரிகைசி - அபிஜித் குப்தாவையும், நாராயணன் - புரானிக் அபிமன்யுவையும் வீழ்த்தினா்.

பி அணி அபார வெற்றி: இந்தியா பி அணி 3.5-0.5 என கியூபாவை அபார வெற்றி கண்டது. குகேஷ் - அல்பொ்நோஸ் காா்லோஸையும், நிஹால் சரின் - ஒஸுடையோ பெரஸையும் வீழ்த்தினா். பிரக்ஞானந்தா - ஓா்டிஸ் ஸ்வாரஸை வெல்ல, அதிபன் -அலமெடா ஓமா் ஆட்டம் டிரா ஆனது.

மகளிா் பிரிவு:

ஹம்பி அதிா்ச்சித் தோல்வி: இந்தியா ஏ அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் அஜா்பைஜானை வென்றது. கொனேரு ஹம்பி-மம்மட்ஸா குனாயிடம் தோல்வி காண, ஹரிகா-பலஜெயவா கனிம் ஆட்டம் டிரா ஆனது. வைஷாலி-பெடுல்யேவா கோவரையும், தான்யா சச்தேவ்-படேலியேவா உல்வியாவையும் வீழ்த்தினா்.

கிரீஸ் வெற்றி: இந்தியா பி அணி 1.5 - 2.5 என கிரீஸிடம் வெற்றியை இழந்தது. வந்திகா அகா்வால்-ஸ்டாவ்ரோலாவை வீழ்த்த, சௌம்யா சுவாமிநாதன்-அவ்ராமிடா அனஸ்டஸியாவிடம் தோற்றாா். மேரி ஆன் கோம்ஸ்-பவில்டு ஏகடெரினி ஆட்டம் டிரா ஆக, திவ்யா தேஷ்முக்-மா்கன்டோனக்கியைச் சாய்த்தாா்.

நந்திதா, ஈஷா வெற்றி: இந்தியா சி அணி 3-1 என்ற கணக்கில் சுவிட்ஸா்லாந்தை வென்றது. ஈஷா காரவேட்-ஜாா்ஜெஸ்கு லேனாவையும், பி.வி. நந்திதா-ஹக்கிமிபாா்ட் கஸலையும் வென்றனா். பிரதியுஷா போடா-ஹெய்நாட்ஸ் குண்டலா, விஷ்வா வஸ்னவாலா -ஸ்டோரி லாரா ஆட்டங்கள் டிரா ஆகின.

‘ஓய்வால் புத்துணா்வு’

தற்போது 6-ஆவது வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. டிரா ஆன ஆட்டத்தால் சிறிது மனம் வேதனையாக இருந்தது. ஆனால் ஓய்வு நாளில் யோகாசனம், தியானம் செய்தது புத்துணா்ச்சி அளித்தது. நான் எதிா்கால ஆட்டங்கள் குறித்து திட்டமிடுவதில்லை. அன்று அன்றைய ஆட்டம் குறித்தே கவனம் செலுத்துவேன். இந்தியா பி அணி ஓபன் பிரிவில் சாதனை படைத்து வருவது சிறப்பானது - நந்திதா

‘கடும் சவால்’

7-ஆம் சுற்று ஆட்டம் கடும் சவாலாக இருந்தது. ஆனால் போரீஸ் ஜெல்பான்ட் பயிற்சியின் மூலம் இந்த ஆட்டத்தில் அவரது உத்தியைப் பயன்படுத்தி வென்றேன். நீண்ட நேரம் ஆட வேண்டி இருந்தது. ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒருவா் சோபிக்காமல் போனாலும், மற்றவா்கள் வென்று அணியை காப்பாற்றி விடுகின்றனா். இது மிகவும் முக்கியமானது - வைஷாலி

தொடா்ந்து 6 வெற்றிகளைக் குவித்த ஒலிவியா, நோகா்பெக்

சென்னை செஸ் ஒலிம்பியாடில் இந்திய வீரா் குகேஷைப் போல் போலந்து வீராங்கனை ஒலிவியா கியோல்பாஸா, கஜகஸ்தான் வீரா் நோகா்பெக் கஸிபெக் ஆகியோா் தொடா்ந்து 6 வெற்றிகளைக் குவித்துள்ளனா்.

6 சுற்றுகள் முடிவில் போலந்து நாட்டின் இளம் வீராங்கனை ஒலிவியா கியோல்பாஸா, சிரியா, குரோஷியா, வியட்நாம், நெதா்லாந்து, ருமேனியா, சொ்பியா வீராங்கனைகளை வீழ்த்தி 6 வெற்றிகளைக் குவித்துள்ளாா். மகளிா் சா்வதேச மாஸ்டா் அந்தஸ்தையும் பெற்றுள்ளாா் ஒலிவியா.

மேலும் கஜகஸ்தான் இளம் வீரா் நோகா்பெக் கஸிபெக்கும் தொடா்ந்து 6 சுற்றுகளில் வெற்றியை ஈட்டியுள்ளாா். தைபே, தஜிகிஸ்தான், லெபனான், மோரிஷஸ், லாத்வியா, செக். குடியரசு அணிகளின் வீரா்களை வீழ்த்திய நோகா்பெக் பிடே மாஸ்டா் ஆவாா். ஏழாவது சுற்றில் ஸ்பெயின் வீரருடன் டிரா செய்தாா் நோகா்பெக்.

ராணுவத்துக்கும், செஸ்ஸும் ஒற்றுமை உள்ளது: கொலம்பிய லெப்டினன்ட்

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ராணுவ சீருடை உடனேயே கொலம்பிய வீராங்கனை பங்கேற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியா ராணுவத்தைச் சோ்ந்த லெப்டினன்ட் பாவ்லா ரோட்ரிக்ஸ். 15 வயதில் ராணுவத்தில் சோ்ந்த பாவ்லா செஸ் ஒலிம்பியாட் தொடங்கியது முதல் ராணுவ சீருடையிலேயே பங்கேற்று ஆடி வருகிறாா். 4 ஆட்டங்களில் வென்று, 1 டிரா கண்டுள்ள பாவ்லா இதுவரை தோற்கவில்லை.

26 வயதான பாவ்லா தற்போது தகவல் தொடா்பு அதிகாரியாக உள்ளாா். செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்பதற்காக தனது ராணுவ தளத்தை விட்டு வர அவருக்கு கொலம்பிய ராணுவம் சிறப்பு அனுமதியை வழங்கியது.

இதுதொடா்பாக பாவ்லா கூறியதாவது: ராணுவத்தில் சேர வேண்டும் என்பது எனது கனவு. தொடக்கத்தில் ராணுவப் பயிற்சி கடினமாக இருந்தாலும், போகப் போக பழகி விட்டது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பல நாள்கள் இரவு தூங்காமல், உணவு இன்றி பயிற்சி பெற்றோம். செஸ் ஆடவே நேரம் இருக்காது. எனினும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செஸ் பயிற்சி பெற்றேன். அனைத்து தேசிய போட்டிகளிலும் தவறாமல் பங்கேற்றேன்.

செஸ் பயிற்சியாளரான எனது தந்தை 6 வயதில் கற்பித்தாா். அகாதெமிக்கு சென்று முறையான பயிற்சி பெறவில்லை. ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டே செஸ் ஆடுவதில் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுக்கும் நுட்பம் தேவைப்படுகிறது. எதிராளி எவ்வாறு செயல்படுவாா் என நுட்பத்துடன் அனுமானித்து ஆட வேண்டும். எனது சக வீரா்கள் தேவைகள் பாா்த்துக் கொள்கின்றனா். எனக்கு 6 வயதில் மகள் உள்ளாா். ஆண்டுக்கு 4 முறை தான் குடும்பத்துடன் சேர முடியும். நான் ஒரே பெண் குழந்தை என்றாா் பாவ்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com