காமன்வெல்த் போட்டிகள்: இம்முறை தான் இந்திய அணி அதிகப் பதக்கங்களை வென்றதா?

அதிகப் பதக்கங்களை வென்றதன் அடிப்படையில் இது 5-வது சிறந்த போட்டியாக...
குத்துச்சண்டை வீராங்கனை நிது கங்காஸ்
குத்துச்சண்டை வீராங்கனை நிது கங்காஸ்

சமீபத்தில் முடிவடைந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 61 பதக்கங்களை வென்றது. 

இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலகின் பெரிய விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்றாக காமன்வெல்த் போட்டி உள்ளது. கடைசியாக கடந்த 2018-இல் ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலத்துடன் மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றது. 

இந்த வருடம் இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் கடந்த திங்களன்று முடிவடைந்தன. கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த்தில் 66 பதக்கங்களை வென்ற இந்திய அணி, பிர்மிங்கம் போட்டியில் 61 பதக்கங்களை வென்றது. இப்போட்டியில் ஐயாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றார்கள். 

இம்முறை இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-ம் இடம் பிடித்தது. கடைசி நாளன்று பாட்மிண்டனில் பி.வி. சிந்து, சாத்விக் - சிராஜ் ஜோடி, லக்‌ஷயா சென், டேபிள் டென்னிஸில் சரத் கமல் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றார்கள். இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. டேபிள் டென்னிஸில் தமிழக வீரர் சத்யன் வெண்கலப் பதக்கம் வென்றார். 

இந்திய அணி 12 விளையாட்டுகளில் பதக்கங்களை வென்றது. மல்யுத்தம், பளு தூக்குதல், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் (பாரா டென்னிஸ் உள்பட) ஆகிய விளையாட்டுகளில் இந்திய அணி தான் அதிகப் பதக்கங்களை வென்றது. மல்யுத்த விளையாட்டில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக 6 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. அதிகத் தங்கப் பதக்கங்களை வென்றவர் - தமிழகத்தின் சரத் கமல். டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆடவர் அணி, ஒற்றையர், கலப்பு இரட்டையர் என மூன்று போட்டிகளில் அவர் தங்கம் வென்றார். மேலும் ஆடவர் இரட்டையர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் என ஒரே போட்டியில் 4 பதக்கங்களுடன் மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார். 

ஹாக்கி போட்டியில் இந்தியா முதல்முறையாக ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் பதக்கம் வென்றுள்ளது. இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கமும் மகளிர் அணி வெண்கலப் பதக்கமும் வென்றார்கள். 

டேபிள் டென்னிஸ் வீரர்கள்
டேபிள் டென்னிஸ் வீரர்கள்

2026 காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெறவுள்ளது. 

பல விளையாட்டு ரசிகர்களிடமும் உள்ள கேள்வி - பிர்மிங்கம் காமன்வெல்த் போட்டியில் தான் இந்திய அணி அதிக பதக்கங்களை, அதிக தங்களை வென்றதா?

பதில் - நிச்சயமாக இல்லை.

மேலே பார்த்தது போல 2018 காமன்வெல்த் போட்டிகளில் பெற்ற பதக்கங்கள், தங்கங்களை விடவும் இம்முறை குறைவான பதக்கங்கள், தங்கங்களையே நாம் பெற்றுள்ளோம். 

அதிகப் பதக்கங்களை வென்றதன் அடிப்படையில் இது 5-வது சிறந்த போட்டியாக இந்தியாவுக்கு அமைந்துள்ளது. 2010-ல் தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி அதிகபட்சமாக 101 பதக்கங்களை வென்று 2-ம் பிடித்தது. 

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா: அதிகப் பதக்கங்கள்

2010, தில்லி - 101 பதக்கங்கள்
2002, மான்செஸ்டர் - 69 பதக்கங்கள்
2018, கோல்ட் கோஸ்ட் - 66 பதக்கங்கள்
2014, கிளாஸ்கோ - 64 பதக்கங்கள்
2022 - பிர்மிங்கம் - 61 பதக்கங்கள்

சரி, எந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி அதிக தங்கப் பதக்கங்களை வென்றது? இதிலும் தில்லி காமன்வெல்த் போட்டிகளுக்கே முதலிடம்.

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா: அதிக தங்கப் பதக்கங்கள்

2010, தில்லி - 38 தங்கப் பதக்கங்கள்
2002, மான்செஸ்டர் - 30 தங்கப் பதக்கங்கள்
2018, கோல்ட் கோஸ்ட் - 26 தங்கப் பதக்கங்கள்
2006, மெல்போர்ன் - 22 தங்கப் பதக்கங்கள்
2022 - பிர்மிங்கம் - 22 தங்கப் பதக்கங்கள்

தங்கம் வென்ற பி.வி. சிந்து
தங்கம் வென்ற பி.வி. சிந்து

2022 காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு இடம்பெறவில்லை. 2018 போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு இடம்பெற்றிருந்தபோது இந்திய அணி இதில் மட்டும் 16 பதக்கங்களை (7 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம்) வென்றது.  காமன்வெல்த் போட்டிகளில் ஒட்டுமொத்தமாகத் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் இந்திய அணி 63 தங்கம் உள்பட 135 பதக்கங்களைப் பெற்றுள்ளது. வேறு எந்த விளையாட்டிலும் இந்திய அணி இத்தனை பதக்கங்களை வென்றதில்லை. பிர்மிங்கம் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு இடம்பெற்றிருந்தால் இந்திய அணியின் பதக்க எண்ணிக்கை நிச்சயம் மேலும் அதிகமாகியிருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com