எனக்கு வேலை வேண்டும்: பணக்கஷ்டத்தில் தவிக்கும் வினோத் காம்ப்ளி
By DIN | Published On : 18th August 2022 04:36 PM | Last Updated : 18th August 2022 04:36 PM | அ+அ அ- |

90களில் கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்த்தவர்களால் வினோத் காம்ப்ளியை மறக்க முடியாது. குறுகிய காலத்தில் சச்சினுக்கு இணையான புகழை அடைந்து வந்த வேகத்தில் காணாமல் போனவர்.
50 வயது காம்ப்ளி, இந்திய அணிக்காக 1993 முதல் 2000 வரை 17 டெஸ்டுகள், 104 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் இரு இரட்டைச் சதங்கள் எடுத்துள்ளார். 1993-ல் மட்டும் இரு இரட்டைச் சதங்கள், இரு சதங்கள், ஒரு அரை சதம் என டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை அமர்க்களமாகத் தொடங்கினார்.
இந்நிலையில் பிசிசிஐ அளிக்கும் ஓய்வூதியத்தை மட்டும் நம்பி வாழ்வதாகவும் தனக்கு உரிய வேலையை மும்பை கிரிக்கெட் சங்கம் தரவேண்டும் என்றும் ஒரு பேட்டியில் காம்ப்ளி கூறியுள்ளார். பேட்டியில் அவர் தெரிவித்ததாவது:
நான் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர். பிசிசிஐ அளிக்கும் ரூ. 30,000 ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி வாழ்கிறேன். அது மட்டுமே என்னுடைய வருமானம். அதுதான் என் குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறது.
மும்பை கிரிக்கெட் சங்கத்திடமிருந்து (எம்சிஏ) உதவியை எதிர்பார்க்கிறேன். குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை எனக்கு உண்டு. எம்சிஏவிடம் பலமுறை சொல்லிவிட்டேன், தேவைப்பட்டால் நான் பயிற்சியாளராகப் பணிபுரிகிறேன் என்று. மும்பை கிரிக்கெட் தான் எனக்கு வாழ்க்கையை அளித்தது. ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட் ஆட்டங்களில் உங்களால் விளையாட முடியாது. நல்ல வேலை இருந்தால் மட்டுமே வாழ்க்கையை நல்லவிதமாக வாழமுடியும். எனக்கு ஒரு நல்ல வேலையை மும்பை கிரிக்கெட் சங்கம் அளிக்க வேண்டும். ஒருமுறை டாக்ஸியில் என் வீட்டுக்கு வருவதற்குக் கூட நண்பரிடம் கடன் வாங்கி தான் வந்தேன். இது எனக்கு வேதனையை அளித்தது. நான் பணக்காரனாகப் பிறக்கவில்லை. கிரிக்கெட் தான் எனக்கு எல்லாமும் அளித்தது. சிறு வயதில் வறுமையை அனுபவித்துள்ளேன். சில நாள்களில் உணவே கிடைக்காது. ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவன் நான்.
என்னுடைய நிலைமையைப் பற்றி சச்சினுக்கு நன்குத் தெரியும். ஆனால் அவரிடமிருந்து நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை. டெண்டுல்கர் அகாதெமியில் எனக்குப் பயிற்சியாளர் பணியை அளித்தார். ஆனால் அதற்காக நீண்ட தொலைவு செல்லவேண்டும். சச்சின் நல்ல நண்பர். எனக்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருப்பார்.
இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது போன்ற வேலை எனக்கு வேண்டும். அமோல் முசும்தார் மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார் என எனக்குத் தெரியும். எங்கேயாவது என் தேவை இருந்தால் அங்கு நான் நிச்சயம் இருப்பேன். நானும் அவரும் இணைந்து விளையாடியுள்ளோம். அருமையான அணி இருந்தது. ஓர் அணியாக மும்பை வீரர்கள் விளையாட வேண்டும் என்பதே என் விருப்பம் என்று கூறியுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...