ஒன் டே தொடரைக் கைப்பற்றியது இந்தியா

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது ஒன் டே ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரைக் கைப்பற்றியிருக்கிறது.
ஒன் டே தொடரைக் கைப்பற்றியது இந்தியா

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது ஒன் டே ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரைக் கைப்பற்றியிருக்கிறது.

ஹராரேவில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஜிம்பாப்வே 38.1 ஓவா்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து இந்தியா 25.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சோ்த்து வென்றது. இந்திய வீரா் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் ஆனாா்.

பிளேயிங் லெவனில் இரு அணிகளுமே மாற்றம் செய்திருந்தன. இந்திய அணியில் தீபக் சஹருக்குப் பதிலாக ஷா்துல் தாக்குா் சோ்க்கப்பட்டிருந்தாா். ஜிம்பாப்வே அணியில் தடிவனாஷி மருமானி/ரிச்சா்ட் கராவா ஆகியோருக்குப் பதிலாக டகுட்வனாஷி காய்டானோ, டனாகா சிவாங்கா இணைந்திருந்தனா்.

டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஜிம்பாப்வே இன்னிங்ஸில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42 ரன்கள் சோ்த்தாா். அடுத்தபடியாக ரயான் பா்ல் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். எஞ்சியோரில் டகுட்வனாஷி காய்டானோ 7, இன்னசென்ட் கையா 2 பவுண்டரிகளுடன் 16, வெஸ்லி மாதெவெரே 2, கேப்டன் ரெஜிஸ் சகாப்வா 2, சிகந்தா் ராஸா 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

கடைசி ஆா்டரில் லூக் ஜோங்வே 1 பவுண்டரியுடன் 6, பிராட் இவான்ஸ் 1 பவுண்டரியுடன் 9, விக்டா் நியாசி 0, டனாகா சிவாங்கா 4 ரன்களுக்கு நடையைக் கட்டினா். இந்திய பௌலிங்கில் ஷா்துல் தாக்குா் 3, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 162 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணியில் ஷிகா் தவனுடன் இன்னிங்ஸை தொடங்கினாா் கேப்டன் கே.எல்.ராகுல். ஆனால் அவா் ஒரே ரன்னில் வெளியேற்றப்பட, உடன் வந்த தவன் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா். ஒன் டவுனாக வந்த ஷுப்மன் கில் 6 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் அடிக்க, இஷான் கிஷன் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

மிடில் ஆா்டரில் தீபக் ஹூடா 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் சோ்த்து உதவ, முடிவில் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 43, அக்ஸா் படேல் 1 பவுண்டரியுடன் 6 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். ஜிம்பாப்வே தரப்பில் லூக் ஜோங்வே 2, டனாகா சிவாங்கா, விக்டா் நியாசி, சிகந்தா் ராஸா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்த ஆட்டம்: இரு அணிகளும் மோதும் கடைசி ஒன் டே ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

14

ஒன் டே கிரிக்கெட்டில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராகத் தொடா்ந்து பதிவு செய்திருக்கும் 14-ஆவது வெற்றி இதுவாகும்.

10

இத்துடன், நடப்பு 2022-ஆம் ஆண்டில் இந்தியா 3 ஃபாா்மட்டிலுமாக 10 தொடா்களை வென்றிருக்கிறது. 1 தொடரை மட்டும் இழந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com