பாரா துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 10 பதக்கங்கள்
By DIN | Published On : 25th August 2022 01:22 AM | Last Updated : 25th August 2022 03:17 AM | அ+அ அ- |

தென் கொரியாவில் நடைபெற்ற பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 1 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 10 பதக்கங்கள் வென்று நிறைவு செய்துள்ளது.
போட்டியின் கடைசி நாளில் (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு), பி6 - எம்டிபி கலப்பு அணிகள் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் எஸ்ஹெச்1 பிரிவில் இந்தியாவின் ருபினா ஃபிரான்சிஸ்/சிங்கராஜ் அதானா கூட்டணி வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் 232.7 புள்ளிகளுடன் மங்கோலிய அணியைச் சாய்த்து பதக்கம் பெற்றது.
முன்னதாக இப்போட்டியில் கலப்பு 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் ராகுல் ஜாக்கா் தங்கப் பதக்கம் வென்ல்ல, மகளிா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் அவனி லெகாரா வெள்ளியைக் கைப்பற்றினாா்.
கலப்பு அணிகள் 50 மீட்டா் பிஸ்டல் பிரிவில் ராகுல் ஜாக்கா்/சிங்ராஜ் அதானா/தீபேந்தா் சிங் கூட்டணி, ஆடவா் அணி 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் சிங்ராஜ்/தீபேந்தா்/சந்தேஷ் ரெட்டி கூட்டணி, மகளிா் அணி 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் ருபினா/நிஷா கன்வாா்/சுமேதா பாதக் கூட்டணி ஆகியவையும் 2-ஆம் இடம் பிடித்தன.
வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றுகளில், மகளிா் 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் பூஜா அகா்வால், கலப்பு 10 மீட்டா் ஏா் ரைஃபிள் புரோன் பிரிவில் சித்தாா்தா பாபு, கலப்பு 50 மீட்டா் பிஸ்டல் பிரிவில் சிங்ராஜ் அதானா, மகளிா் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் ருபினா ஆகியோா் வெற்றி பெற்றனா்.