ஆசியக் கோப்பை: தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற அணி எது?

குவைத் - சிங்கப்பூர், ஹாங்காங் - ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் மோதின.
மஸ்கட் - ஓமன் மைதானம்
மஸ்கட் - ஓமன் மைதானம்

ஆசியக் கோப்பை டி20 போட்டியில் பிரதான சுற்றில் விளையாட ஹாங்காங் அணி தகுதியடைந்துள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், தகுதிச்சுற்று அணி என மூன்று அணிகள் குரூப் ஏ பிரிவிலும் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன. 

ஆசியக் கோப்பை டி20 கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நான்கு நாடுகள் விளையாடின. ஒவ்வொரு அணியும் தலா மூன்று ஆட்டங்களில் விளையாடியதில் ஹாங்காங்க் அணி முதலிடம் பெற்று இந்திய அணி உள்ள குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. 

நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் குவைத் - சிங்கப்பூர், ஹாங்காங் - ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் மோதின. ஒரு இடத்துக்கு ஹாங்காங் - ஐக்கிய அரபு அமீரகம், குவைத் ஆகிய அணிகள் போட்டியிட்டன. 

குவைத் அணி சிங்கப்பூரை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 4 புள்ளிகளுடன் ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு நெருக்கடி தந்தது. தகுதிச்சுற்றில் கடைசியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை ஹாங்காங் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஹாங்காங் அணி, ஆசியக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றில் விளையாடும் தகுதியை அடைந்தது. 

ஆகஸ்ட் 31 அன்று ஹாங்காங் அணி இந்தியாவுக்கு எதிராகவும் செப்டம்பர் 2 அன்று பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com