தமிழ்நாட்டிலிருந்து 100 செஸ் கிராண்ட்மாஸ்டர்கள்: தமிழக அரசின் புதிய இலக்கு

தமிழ்நாட்டிலிருந்து 100 செஸ் கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டிலிருந்து 100 செஸ் கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் 75-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைச் சமீபத்தில் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரணவ். இந்தியாவிலுள்ள 75 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 27 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் இந்திய அளவில் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்களிப்பு மேலும் அதிகமாகியுள்ளது. 1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்மாஸ்டர் ஆனார் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த். தற்போது 75-வது கிராண்ட்மாஸ்டரும் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான். 

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. 100 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி அனைவருடைய பாராட்டையும் பெற்றது தமிழக அரசு. சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இரு இந்திய அணிகளுக்கும் (ஓபன் பிரிவில் இந்தியா பி, மகளிர் பிரிவில் இந்தியா ஏ)  தலா 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையை வழங்கினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். மேலும் செஸ் கிராண்ட்மாஸ்டர் தகுதியை அடைந்த பிரணவுக்கு ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையைத் தமிழக அரசு வழங்கியது. 

இந்நிலையில் பிரபல செஸ் பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ் ட்விட்டரில் கூறியதாவது:

சில செஸ் வீரர்களையும் பயிற்சியாளர்களையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் தமிழக அரசும் அழைத்து தமிழ்நாட்டில் செஸ் விளையாட்டை மேம்படுத்துவது குறித்து கலந்தாலோசித்தன. அடுத்த சில வருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து மேலும் 100 செஸ் கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்குவதே தமிழக அரசின் திட்டம். எனவே அனைத்துத் தரப்பிலிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது. இது நிஜமாக வேண்டும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com