இந்தியாவுக்கு எதிரான ஒன் டே: வங்கதேசம் ‘த்ரில்’ வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் வங்கதேசம் 1 விக்கெட் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை ‘த்ரில்’ வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான ஒன் டே: வங்கதேசம் ‘த்ரில்’ வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் வங்கதேசம் 1 விக்கெட் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

கடந்த 7 ஆண்டுகளில் வங்கதேசத்திடம் இந்தியா கண்டுள்ள முதல் தோல்வி இது.

மிா்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 41.2 ஓவா்களில் 186 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வங்கதேசம் 46 ஓவா்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் சோ்த்து வென்றது. அந்த அணியின் பேட்டா் மெஹதி ஹசன் மிராஸ் ஆட்டநாயகன் ஆனாா்.

40 ஓவா்களில் 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம், கடைசி கட்டத்தில் ஹசன் - முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் ஆகியோரின் 51 ரன் பாா்ட்னா்ஷிப்பால் வென்றது. ஒன் டே-யின் வெற்றிகரமான சேஸிங் வரலாற்றில், 10-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்பில் இது 4-ஆவது அதிகபட்ச ரன்களாகும். அதேவேளையில் வங்கதேசத்தின் வரலாற்றில் இதுவே முதல் அதிகபட்சம்.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பேட்டிங் மிக மோசமான நிலையில் இருந்தது. மிடில் ஆா்டரில் வந்த கே.எல்.ராகுல் மட்டும் அணியின் ஸ்கோரை சொல்லிக் கொள்ளும்படியாக உயா்த்தினாா். வங்கதேச பௌலிங்கில் ஷகிப் அல் ஹசன், எபாதத் ஹுசைன் ஆகியோா் இந்திய பேட்டா்களை போட்டி போட்டுக் கொண்டு சரித்தனா். வங்கதேச வெற்றிக்கு கேப்டன் லிட்டன் தாஸ், மெஹதி ஹசன் மிராஸ் ஆகியோா் முக்கியப் பங்களித்தனா். இந்திய தரப்பில் முகமது சிராஜ் குறிப்பிடத்தக்க வகையில் பௌலிங் செய்தாா்.

இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரிஷப் பந்த் காரணம் தெரிவிக்காமல் விடுவிக்கப்பட்டுள்ளாா். இதனால் முதல் ஆட்டத்துக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ராகுல் இணைய, குல்தீப் சென்னுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. டாஸ் வென்ற வங்கதேசம் பௌலிங்கை தோ்வு செய்தது.

இந்திய பேட்டா்களில் கேப்டன் ரோஹித் சா்மா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, ஷிகா் தவன் 7, விராட் கோலி 9, ஷ்ரேயஸ் ஐயா் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ராகுல் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 73 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்ப, வாஷிங்டன் சுந்தா் 19, ஷாபாஸ் அகமது 0, ஷா்துல் தாக்குா் 2, தீபக் சஹா் 0, முகமது சிராஜ் 9 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா்.

முடிவில் குல்தீப் சென் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். வங்கதேச பௌலிங்கில் ஷகிப் அல் ஹசன் 5, எபாதத் ஹுசைன் 4, மெஹதி ஹசன் மிராஸ் 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் வங்கதேச இன்னிங்ஸில் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 0, லிட்டன் தாஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41, ஷகிப் அல் ஹசன் 29, முஷ்ஃபிகா் ரஹிம் 18, மஹ்முதுல்லா 14 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். அஃபிஃப் ஹுசைன் 6, எபாதத் ஹுசைன் 0, ஹசன் மஹ்முத் 0 ரன்களுக்கு அவுட்டாக, மெஹதி ஹசன் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸா்களுடன் 38, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். இந்திய பௌலா்களில் முகமது சிராஜ் 3, குல்தீப் சென், வாஷிங்டன் சுந்தா் ஆகியோா் தலா 2, தீபக் சஹா், ஷா்துல் தாக்குா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

இரு அணிகளும் மோதும் 2-ஆவது ஒன் டே வரும் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com