மெஸ்ஸியின் கனவா? மோர்டிச்சின் முனைப்பா?
By DIN | Published On : 13th December 2022 05:14 AM | Last Updated : 13th December 2022 05:14 AM | அ+அ அ- |

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா - குரோஷியா அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பையில் கடந்த 2014-ஆம் ஆண்டில் ஆர்ஜென்டீனாவும், 2018-ஆம் ஆண்டில் குரோஷியாவும் இறுதி ஆட்டம் வரை வந்து தோல்வி கண்டன. எனவே அவற்றுக்கு இடையேயான இந்த ஆட்டம் கடும் சவால் மிக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆர்ஜென்டீனாவுக்காக உலகக் கோப்பை வென்று தந்து வெற்றிகரமான கேப்டனாக அணியிலிருந்து ஓய்வுபெறும் கனவில் இருக்கிறார் லயோனல் மெஸ்ஸி. அதற்கு குறுக்கே நிற்கும் குரோஷியா, கடந்த முறை இறுதி ஆட்டம் வரை வந்து தோற்ற நிலையில், இந்த முறை அணியை இன்னும் ஒருபடி மேலேற்றி வாகை சூட வைக்கும் முனைப்பில் இருக்கிறார் லூகா மோர்டிச்.
ஆர்ஜென்டீனாவைப் பொருத்தவரை கோபா அமெரிக்கா சாம்பியனாக போட்டிக்கு வந்திருக்கிறது. தொடர்ந்து 36 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத உறுதியும், நட்சத்திர வீரர் மெஸ்ஸியும் அணிக்கு பலம். போட்டியின் தொடக்கத்தில் சவூதி அரேபியாவிடம் அதிர்ச்சிகரமான தோல்வியைத் தழுவினாலும், பின்னர் அதிலிருந்து மீண்டு இந்த இடத்துக்கு முன்னேறியிருக்கிறது ஆர்ஜென்டீனா.
அந்த அணியைப் போல பிரபலமான தன்மைகளைக் கொண்டிருக்காவிட்டாலும், தருணத்திற்கு ஏற்றாற்போல திடீரென வெகுண்டெழுந்து வெல்லும் அணியாக இருக்கிறது குரோஷியா. அதற்கு உதாரணம், பிரேஸிலை காலிறுதியில் வீழ்த்தியது. கோலடிக்காவிட்டாலும், அதற்கு உதவாவிட்டாலும் நடுகளத்திலிருந்து அணியின் போக்கை கட்டுப்படுத்துவதில் முக்கிய வீரராக இருக்கிறார் மோர்டிச். சவாலான தருணங்களை எதிர்பார்த்து அதில் தனது திறமையை காட்டுவதாகவே இருக்கிறது குரோஷியா.
ரசிகர்களைப் பொருத்தவரை, வெற்றி, தோல்வியைக் கடந்து வேறொரு பரபரப்புக்காக இந்த ஆட்டத்தை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். நெய்மர் (பிரேஸில்), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்) என நட்சத்திர வீரர்கள் சார்ந்த அணி காலிறுதிச்சுற்றுடன் வெளியேறியது கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் மெஸ்ஸியும் இணைந்துவிடக் கூடாது என்ற எதிர்பார்ப்பு அவர்களிடையே இருக்கிறது.