பல ஆட்டங்களில் நான் விளையாட மாட்டேன்: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அறிவிப்பு
By DIN | Published On : 13th December 2022 02:57 PM | Last Updated : 13th December 2022 02:57 PM | அ+அ அ- |

2022-23 ரஞ்சி கோப்பைப் போட்டியின் பல ஆட்டங்களில் காயம் காரணமாக விளையாடப் போவதில்லை என இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமது கூறியுள்ளார்.
25 வயது கலீல் அஹமது, இந்திய அணிக்காக 11 ஒருநாள், 14 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக நவம்பர் 2019-ல் இந்தியாவுக்காக விளையாடினார். உள்ளூர் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுகிறார். ஐபிஎல் 2022 போட்டியில் தில்லி அணிக்காக விளையாடிய கலீல் அஹமது, 10 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்நிலையில் காயம் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார் கலீல் அஹமது. இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது:
கிரிக்கெட்டிலிருந்து வெளியே இருப்பது துரதிர்ஷ்டவசமாகும். ஆனால் என்னுடைய உடல்நிலையால் இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியின் பல ஆட்டங்களை நான் தவறவிடுவேன். குணமாவதற்கான முயற்சியில் உள்ளேன். முழு உடற்தகுதி நிலையை அடைந்த பிறகு மீண்டும் விளையாட வருவேன். அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி என்றார்.