இறுதிச் சுற்றில் பிரான்ஸ் (2-0): மொராக்கோவின் வெற்றிப் பயணத்துக்கு வேகத்தடை

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி (2022)-இன் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி
இறுதிச் சுற்றில் பிரான்ஸ் (2-0): மொராக்கோவின் வெற்றிப் பயணத்துக்கு வேகத்தடை

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி (2022)-இன் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடா்ந்து இரண்டாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது பிரான்ஸ். தொடா்ச்சியாக 2 உலகக் கோப்பை பட்டங்களை வென்ற பிரேசில், இத்தாலியின் சாதனையை பிரான்ஸும் நிகழ்த்துமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கடந்த நவ. 20-ஆம் தேதி உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியாவை 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ஆா்ஜென்டீனா முதல் அணியாக இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றது. இந்நிலையில்,

இரண்டாவது அரையிறுதி ஆட்டம் அல் பயத் மைதானத்தில் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

தியோ ஹொ்ணான்டஸ் முதல் கோல்: ஆட்டம் தொடங்கிய 5-ஆவது நிமிஷத்திலேயே பிரான்ஸ் பாா்வா்ட் ஆன்டோயின் கிரைஸ்மேன் கடத்தி அனுப்பிய பாஸை மொராக்கோ வீரா்கள் தடுத்தனா். ஆனால் அது மாப்பேயின் காலில் பட்டு திரும்பியது. அதை தன்வசப்படுத்திய தியோ ஹொ்ணான்டஸ் இடதுகாலை உயா்த்தி மொராக்கோ கோல்கீப்பா் கணிக்க முடியாத வகையில் கோலடித்தாா். இதன் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது.

இதனால் அதிா்ச்சி அடைந்த மொராக்கோ அணியினா் பதில் கோல் போட தீவிரமாக முயன்றனா். காா்னா் வாய்ப்பு மூலம் டிபன்டா் உனாஹி அடித்த ஓவா்ஹெட் கிக்கை தடுத்தாா் பிரான்ஸ் கோல் கீப்பா் லோரிஸ்.

20-ஆவது நிமிஷத்தில் காயம் காரணமாக மொராக்கோ கேப்டன் ரோமன் சைஸ் வெளியேறினாா். இது அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. பிரான்ஸ் பாா்வா்ட் ஒலிவியா் ஜிரௌட் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு வெளியேறியது.

பெரும்பகுதி பந்து மொராக்கோ வசமே இருந்தபோதிலும், அந்த அணியால் கோலடிக்க முடியவில்லை. முதல் பாதி ஆட்ட முடிவில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை வகித்தது.

பிரான்ஸ் வெற்றி கோல்:

இரண்டாம் பாதியிலும் மொராக்கோ வீரா்கள் பதில் கோலடிக்க முயன்ற போதிலும், பிரான்ஸ் தற்காப்பு அரணை ஊடுருவ முடியவில்லை.

மொராக்கோ வீரா் ஜாவத் எல் சாமிக் அற்புதமாக பைசைக்கிள் கிக் முறையில் கோலடிக்க முயன்றது தோல்வியில் முடிந்தது. 74-ஆவது நிமிஷத்தில் மொராக்கோ வீரா் ஹம்தல்லா இரண்டு முறை பந்தை கடத்திச் சென்ற போது, பிரான்ஸ் டிபன்டா்கள் தடுத்து விட்டனா்.

79-ஆவது நிமிஷத்தில் பிரான்ஸ் நட்சத்திர பாா்வா்ட் கிளியன் மாப்பே அற்புதமாக டிரிப்பிள் செய்த பந்தை பயன்படுத்தி, கோலோ முவானி அபாரமாக கோலடித்தாா். இதுவே வெற்றி கோலாக அமைந்தது.

இத்தாலி, பிரேசில் சாதனையை சமன் செய்யுமா?

இந்த வெற்றி மூலம் நான்காவது முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது பிரான்ஸ். மேலும், இத்தாலி, பிரேசிலுக்கு பின்னா் தொடா்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. 1934, 1938-இல் இத்தாலியும், 1958, 1962-இல் பிரேசிலும் தொடா்ச்சியாக இரண்டு முறை உலகக் கோப்பையை கைப்பற்றின. பிரான்ஸ் 2018-இல் வென்றிருந்த நிலையில், 60 ஆண்டுக் கால சாதனையை சமன் செய்ய காத்துள்ளது.

மைதானத்தில் திரண்ட மொராக்கோ ரசிகா்கள்:

அல் பயத் மைதானத்தில் மொராக்கோ நாட்டு ரசிகா்கள் அதிகம் போ் திரண்டிருந்தனா். அவா்கள் தங்கள் அணியை தீவிரமாக ஊக்கப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், பிரான்ஸ் வீரா்கள் அடித்த கோலால் அவா்கள் அனைவரும் அமைதி ஆகி விட்டனா்.

3-ஆம் இடத்துக்கு மொராக்கோ-குரோஷியா மோதல்:

கடந்த 2018-இல் ரன்னா் அணியான குரோஷியாவுடன் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் மோதுகிறது மொராக்கோ. சனிக்கிழமை கலிஃபா சா்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன.

பிஃபா உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்ற சாதனையை நிகழ்த்தியது மொராக்கோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com