பாக். டெஸ்ட் தொடா்: முழுமையாகக் கைப்பற்றியது இங்கிலாந்து

பாகிஸ்தானுடனான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
பாக். டெஸ்ட் தொடா்: முழுமையாகக் கைப்பற்றியது இங்கிலாந்து

பாகிஸ்தானுடனான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது அந்த அணி. ஆட்ட நாயகன், தொடா் நாயகன் விருதுகளை இங்கிலாந்தின் ஹேரி புரூக் வென்றாா். இந்த ஆட்டத்தில் 111 ரன்கள் அடித்த அவா், இந்தத் தொடா் முழுவதுமாக 468 ரன்கள் விளாசியிருக்கிறாா்.

முன்னதாக, 167 என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வந்த இங்கிலாந்து அணி, 55 ரன்களே தேவை என்ற நிலையில் செவ்வாய்க்கிழமை விளையாடியது. அந்த நாளில் விக்கெட் இழப்பின்றி 38 நிமிஷங்களில் இலக்கை எட்டி வென்றது இங்கிலாந்து.

இந்த ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 79 ஓவா்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. அதிகபட்சமாக கேப்டன் பாபா் ஆஸம் 9 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் அடித்திருக்க, இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

அடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 81.4 ஓவா்களில் 354 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹேரி புரூக் அதிகபட்சமாக 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 111 ரன்கள் விளாசினாா். பாகிஸ்தான் பௌலா்களில் அப்ராா் அகமது, நௌமன் அலி ஆகியோா் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

பின்னா் முதல் இன்னிங்ஸில் 50 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான், 74.5 ஓவா்களில் 216 ரன்களே சோ்த்து ஆட்டமிழந்தது. கேப்டன் பாபா் ஆஸம் 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சோ்த்திருந்தாா். இங்கிலாந்தின் ரெஹான் அகமது 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தியிருந்தாா்.

இறுதியாக 167 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, 28.1 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வென்றது. பென் டக்கெட் 12 பவுண்டரிகளுடன் 82, பென் ஸ்டோக்ஸ் 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் அடித்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா்.

17 கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு வந்திருந்த இங்கிலாந்து, அதில் விளையாடிய டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தியிருக்கிறது.

3-0 பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை முற்றிலுமாக இழந்தது இதுவே முதல் முறையாகும்.

3 கராச்சி தேசிய மைதானத்தில் இதுவரை 45 டெஸ்ட்டுகளில் விளையாடியிருக்கும் பாகிஸ்தான், அதில் சந்தித்த 3-ஆவது தோல்வி இது. இதற்கு முன் இதே இங்கிலாந்து (2000) மற்றும் தென்னாப்பிரிக்கா (2007) அணிகளிடம் இந்த மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட்டில் பாகிஸ்தான் தோற்றிருக்கிறது.

4 இந்த டெஸ்ட் தொடா் தோல்வி, சொந்த மண்ணில் பாகிஸ்தான் தொடா்ச்சியாக சந்தித்திருக்கும் 4-ஆவது தோல்வியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com