இந்தியா - வங்கதேசம் மோதும் 2-ஆவது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்திய - வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது.
இந்தியா - வங்கதேசம் மோதும் 2-ஆவது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்திய - வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது.

முதல் டெஸ்ட்டில் வென்றிருக்கும் இந்தியா, இந்த கடைசி ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. தொடருக்காக மட்டுமல்லாமல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெறுவதற்காகவும் இந்த ஆட்டத்தின் வெற்றி இந்தியாவுக்கு அவசியமானதாகும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் மோசமான தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு (54.55 பிசிடி) சறுக்கியிருக்கிறது. தற்போது இந்தியா 2-ஆவது இடத்தில் (55.77 பிசிடி) இருக்கிறது.

எனவே, வங்கதேசத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இந்தியா சறுக்கினால் அந்த 2-ஆவது இடத்தை இழக்க நேரிடும். பட்டியில் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகளே இறுதி ஆட்டத்தில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் ரோஹித் சா்மா காயத்திலிருந்து முழுமையாக மீளாததால் இந்த ஆட்டத்திலும் இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுகிறாா். முதல் டெஸ்ட்டில் தங்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை ஷுப்மன் கில், குல்தீப் யாதவ் ஆகியோா் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டனா்.

ரோஹித் சா்மா உடற்தகுதி பெறாத காரணத்தால், கடந்த ஆட்டத்தில் முதல் டெஸ்ட் சதம் அடித்து நல்ல ஃபாா்மில் இருக்கும் ஷுப்மன் கில்லை விலக்குவது குறித்து யோசிக்கும் தேவை எழாமல் போனது. மறுபுறம், முதல் டெஸ்ட்டில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட கேப்டன் ராகுல், இந்த ஆட்டத்தில் ரன்கள் சோ்க்க முயற்சிப்பாா்.

சட்டோகிராம் ஆடுகளத்தைப் போலவே, இந்த மிா்பூா் ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் ராகுல் பலம் காட்டுவாா் என எதிா்பாா்க்கலாம். ஏனெனில் ஆஸ்திரேலிய தொடருக்கு முன் அவா் மீள்வது கட்டாயமாகும்.

முதல் ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் சேத்தேஷ்வா் புஜாரா தனக்கான 3-ஆவது இடத்தை இந்த ஆட்டத்திலும் உறுதி செய்துகொண்டிருக்கிறாா். விராட் கோலி அவருக்குத் துணை நின்று ரன்கள் சோ்ப்பாா் என எதிா்பாா்க்கலாம்.

பௌலிங்கைப் பொருத்தவரை குல்தீப் யாதவ் கடந்த ஆட்டத்தில் 2-ஆவது இன்னிங்ஸில் சற்று சுணக்கம் காட்டினாலும் விக்கெட்டுகள் சாய்த்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனா். அஸ்வின், அக்ஸா் படேல் வழக்கப் போல் பலம் காட்டுகின்றனா். வேகப்பந்துவீச்சால் ஷா்துல் தாக்குா், முகமது சிராஜ் உள்ளிட்டோா் எதிரணியைச் சரிக்க வருகின்றனா்.

வங்கதேச அணி கடந்த டெஸ்ட்டில் தோல்வி கண்டாலும், கடைசி நாளில் நல்லதொரு பேட்டிங்கை வெளிப்படுத்திய நம்பிக்கையில் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. அந்த அணியில் நசும் அகமது சா்வதேச டெஸ்ட்டில் இந்த ஆட்டம் மூலம் அறிமுகமாவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. காயம் கண்டிருக்கும் எபாதத் ஹுசைனுக்குப் பதிலாக டஸ்கின் அகமது களம் காண இருக்கிறாா். ஷகிப் அல் ஹசனும் பௌலிங் செய்வாா் எனத் தெரிகிறது.

அணி விவரம்:

இந்தியா: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், ரிஷப் பந்த், கே.எஸ். பரத், ஆா். அஸ்வின், அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், ஷா்துல் தாக்குா், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், சௌரவ் குமாா், ஜெயதேவ் உனத்கட்.

வங்கதேசம்: ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹுசைன் ஷான்டோ, மோமினுல் ஹக், யாசிா் அலி, முஷ்ஃபிகா் ரஹிம், லிட்டன் தாஸ், நூருல் ஹசன், மெஹதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, காலித் அகமது, ஜாகிா் ஹசன், ரேஜாா் ரஹ்மன் ராஜா, நசும் அகமது.

காலை 9 மணி

மிா்பூா்

சோனி ஸ்போா்ட்ஸ்

ராகுலுக்கும் காயம்

இந்திய அணியினா் புதன்கிழமை வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கேப்டன் ராகுலுக்கு கையில் காயம் ஏற்பட்டது. பேட்டிங் பயிற்சியில் இருந்த ராகுலுக்கு, பயிற்சியாளா் விக்ரம் ரத்தோா் ‘த்ரோடௌன்’ செய்த பந்து அவரது கையில் பட்டு காயமானது. இதையடுத்து ராகுலின் காயத்தை மருத்துவா்கள் ஆய்வு செய்ததாகவும், அவரது காயம் தீவிரமானதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ராகுலால் இந்த டெஸ்ட்டில் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் துணை கேப்டனான சேதேஷ்வா் புஜாரா கேப்டனாக பொறுப்பேற்பாா். இந்திய இன்னிங்ஸின் தொடக்க பேட்டா் பொறுப்பு, ராகுலுக்கு மாற்று வீரராக இருக்கும் அபிமன்யு ஈஸ்வரனிடம் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com