ஜேமிசனைத் தேர்வு செய்தது ஏன்?: சிஎஸ்கே விளக்கம்
By DIN | Published On : 24th December 2022 01:15 PM | Last Updated : 24th December 2022 01:15 PM | அ+அ அ- |

ஏலத்தில் பங்கேற்ற சிஎஸ்கே நிர்வாகம்
நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசனைத் தேர்வு செய்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்க 991 வீரர்கள் பதிவு செய்தார்கள். அவர்களில் அணிகளின் விருப்பத்துக்கேற்ப 405 வீரர்கள் ஏலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களில் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள். இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர்கள். இந்த 405 வீரர்களில் இருந்து 80 வீரர்கள் ஏலம் வழியாகத் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இந்த ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை ரூ. 18.50 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப். இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். கேம்ரூன் கிரீனை ரூ. 17.50 கோடிக்கு மும்பையும் நிகோலஸ் பூரனை ரூ. 16 கோடிக்கு லக்னெளவும் தேர்வு செய்தன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிரபல இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்தது. இதனால் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக் கூடிய ஒரு வீரர் சிஎஸ்கேவுக்குக் கிடைத்துள்ளார்.
இந்நிலையில் ஏலத்தில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசனைத் தேர்வு செய்தது குறித்து சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது:
எங்களுக்கு ஒரு ஆல்ரவுண்டர் தேவைப்பட்டார். ஸ்டோக்ஸைத் தேர்வு செய்ததில் தோனி மகிழ்ச்சியாக உள்ளார். கைல் ஜேமிசன் காயமடைந்ததால் யாரும் அவரைத் தேர்வு செய்ய எண்ணவில்லை. ஃபிளெமிங்கிடமிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது, காயத்திலிருந்து அவர் மீண்டுவிட்டார், விளையாட ஆர்வமாக உள்ளார் என்று. ஏலத்துக்குப் பிறகு சிஎஸ்கே அணி பிரமாதமாக உள்ளது. இந்தப் பருவத்தில் நன்றாக விளையாடுவோம் என்றார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...