தோல்வியைத் தவிர்க்குமா தெ.ஆ.?: 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த ஆஸ்திரேலியா!
By DIN | Published On : 28th December 2022 11:27 AM | Last Updated : 28th December 2022 11:27 AM | அ+அ அ- |

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 575/8 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இரு நாள்களில் தோல்வியடைந்தது. இந்நிலையில் மெல்போர்னில் நடைபெற்று வரும் பாக்ஸிங் டே டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்த டெஸ்டிலும் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் மோசமாக பேட்டிங் செய்ததால் முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. அணி 68.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2-வது நாளில், 100-வது டெஸ்டை விளையாடும் டேவிட் வார்னர், இரட்டைச் சதமெடுத்து அசத்தினார். ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். 2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 91 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்திருந்தது. ஹெட் 48, கேரி 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் இன்று சிறப்பாக விளையாடிய அலெக்ஸ் கேரி 111 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா பெரிய ஸ்கோரை எட்ட உதவினார். இது அவருடைய முதல் டெஸ்ட் சதம். மீண்டும் விளையாட வந்த வார்னர் ரன் எதுவும் சேர்க்கமல் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹெட் 51 ரன்களும் கிரீன் ஆட்டமிழக்காமல் 51 ரன்களும் எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 145 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நோர்கியா 3 விக்கெட்டுகளும் ரபாடா 2 விக்கெடுகளும் எடுத்தார்கள். 386 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் இந்த டெஸ்டை வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.