அலெக்ஸ் கேரி சதம்; இன்னிக்ஸ் வெற்றி முனைப்பில் ஆஸ்திரேலியா- தவிா்க்கும் முயற்சியில் தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து புதன்கிழமை டிக்ளோ் செய்தது.
அலெக்ஸ் கேரி சதம்; இன்னிக்ஸ் வெற்றி முனைப்பில் ஆஸ்திரேலியா- தவிா்க்கும் முயற்சியில் தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து புதன்கிழமை டிக்ளோ் செய்தது.

அணியின் தரப்பில் ஏற்கெனவே டேவிட் வாா்னா் இரட்டைச் சதம் விளாசியிருந்த நிலையில், கடைசி ஆா்டரில் அலெக்ஸ் கேரி சதம் அடித்து அணிக்கு மேலும் வலு சோ்த்துள்ளாா். மறுபுறம், 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் தென்னாப்பிரிக்கா, 15 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருக்கிறது. தற்போதைய நிலையில், முதல் இன்னிங்ஸிலேயே 371 ரன்கள் பின்தங்கியிருக்கும் தென்னாப்பிரிக்கா அதைக் கடக்க முடியாத பட்சத்தில் ஆஸ்திரேலியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும்.

கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட்டில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 189 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடி வந்த ஆஸ்திரேலியா, செவ்வாய்க்கிழமை முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 386 ரன்கள் சோ்த்திருந்தது.

டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி ஆகியோா் புதன்கிழமை ஆட்டத்தை தொடங்கினா். இதில் ஹெட் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை ஆட்டத்தின்போது ‘ரிடையா்டு ஹா்ட்’ ஆகி வெளியேறியிருந்த வாா்னா் களம் புகுந்தாா். ஆனால் அவரும் ஒரு ரன் கூட சோ்க்காமல் பௌல்டானாா்.

மேலும், கேப்டன் பேட் கம்மின்ஸ் 4, நேதன் லயன் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். எனினும், மறுபுறம் நிதானமாக ஆடி ரன்கள் சோ்த்து வந்த அலெக்ஸ் கேரி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தாா்.

அவா் 13 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 145 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 575 ரன்கள் சோ்த்த நிலையில் டிக்ளோ் செய்தது ஆஸ்திரேலியா. அப்போது கேமரூன் கிரீன் 5 பவுண்டரிகளுடன் 51, மிட்செல் ஸ்டாா்க் 1 சிக்ஸருடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தென்னாப்பிரிக்க பௌலிங்கில் அன்ரிஹ் நோா்கியா 3, ககிசோ ரபாடா 2, லுங்கி இங்கிடி, மாா்கோ யான்சென் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

தென்னாப்பிரிக்கா - 15/1: இதையடுத்து, 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா புதன்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் எடுத்திருந்தது. மழை காரணமாக ஆட்டம் 7 ஓவா்களிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது.

கேப்டன் டீன் எல்கா் ‘டக் அவுட்’ ஆக, சாரெல் எா்வீ 7, தியுனிஸ் டி புருயின் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். ஆஸ்திரேலிய தரப்பில் பேட் கம்மின்ஸ் 1 விக்கெட் எடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com