2022-இன் ஐசிசி சிறந்த வீரர்: சூர்யகுமார் யாதவ் பெயர் பரிந்துரை

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் ஐசிசியின் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரருக்கானப் பட்டியலில் தேர்வாகியுள்ளார்.
2022-இன் ஐசிசி சிறந்த வீரர்: சூர்யகுமார் யாதவ் பெயர் பரிந்துரை

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் ஐசிசியின் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரருக்கானப் பட்டியலில் தேர்வாகியுள்ளார்.

ஆடவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்ய குமாரின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவரைத் தவிர, சாம் கரண், ஷிகந்தர் ராசா மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரது பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

சூர்யகுமார் யாதவ் (இந்தியா)

குறுகிய வடிவிலான டி20 போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணியின் சூர்யகுமார் யாதவுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. டி20 போட்டிகளில் ஒரு ஆண்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதிகமாக அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். டி20 போட்டிகளில் இந்த ஆண்டில் மட்டும் 1164 ரன்கள் அவர் குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 187.43 ஆகும்.

டி20 போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அவர் இந்த ஆண்டில் மட்டும் 68 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டில் மட்டும் சூர்யகுமார் யாதவ் இரண்டு சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் அடித்துள்ளார்.

அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். 6 இன்னிங்ஸில் விளையாடிய அவர் 3 அரைசதங்கள் அடித்திருந்தார். அவரது பேட்டிங் சராசரி கிட்டத்தட்ட 60 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 189.68 ஆகவும் இருந்தது.

உலகக் கோப்பைக்குப் பிறகும் சூர்யகுமாரின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. உலகக் கோப்பைக்குப் பின் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்த ஆண்டில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார் சூர்யகுமார் யாதவ். இதன்மூலம், 890 புள்ளிகளுடன் ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்துக்கு அவர் முன்னேறினார்.

ஷிகந்தர் ராசா (ஜிம்பாப்வே)

ஜிம்பாப்வே ஆல்-ரவுண்டர் ஷிகந்தர் ராசாவுக்கும் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது. அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர் அவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் அவர் 735 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 150-க்கும் அதிகமாக உள்ளது. பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் 25 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது எகானமி 6.13 ஆகும். உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெறுவதற்கு அவரது சிறப்பான பங்களிப்பு காரணமாக அமைந்தது. அந்தப் போட்டியில் 25 ரன்கள் கொடுத்து பாகிஸ்தானின் 3 விக்கெட்டுகளை சாய்த்தார் ராசா.

சாம் கரண் (இங்கிலாந்து)

இங்கிலாந்து வீரர் சாம் கரண் உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினைப் பெற்றார். டி20 போட்டிகளில் அவருக்கும் இந்த ஆண்டு மறக்க முடியாததாகவே அமைந்துள்ளது. உலகக் கோப்பைத் தொடரில் அவர் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இலங்கை வீரர் வனிந்து ஹசராங்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி வெறும் 10 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். உலகக் கோப்பைத் தொடரில் ஆடவர் பிரிவில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். காயம் காரணமாக 2021 டி20 தொடரில் விளையாட முடியாத போதிலும், 2022-ஆம் ஆண்டின் உலகக் கோப்பை அவருக்கு மிகச் சிறப்பாக இருந்தது. 

முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்)

முகமது ரிஸ்வான் இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் 996 ரன்கள் குவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல் தொடரும் சிறப்பான ஃபார்ம் இந்த ஆண்டும் தொடர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ரிஸ்வான் 10 அரைசதங்கள் அடித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 45.27 ஆகும். அவர் 836 புள்ளிகளுடன் ஐசிசி சிறந்த பேட்ஸ்மேன்களின் வரிசையில் இந்தியாவின் சூர்யகுமாருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளார்.

யாருக்கு இந்த ஆண்டின் சிறந்த வீரர் விருது?

இவர்களில், ஐசிசி-ன் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருது யாருக்கு கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த ஆண்டின் சிறந்த வீரர் யார் என்பதை ஐசிசி விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com