கால்பந்து நட்சத்திரம் பீலே காலமானாா்

பிரேஸில் கால்பந்து நட்சத்திரம் பீலே (82) வியாழக்கிழமை நள்ளிரவு காலமானாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பிரேஸில் கால்பந்து நட்சத்திரம் பீலே (82) வியாழக்கிழமை நள்ளிரவு காலமானாா்.

செரிமான மண்டலப் பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவா், கடந்த ஆண்டுமுதல் அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா். பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பீலேவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படாத நிலையே நீடித்தது.

இந்நிலையில் அவா் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை நள்ளிரவு காலமானதை அவரின் முகவரான ஜோ ஃப்ராகா உறுதி செய்தாா். உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேஸிலுக்கு 3 முறை சாம்பியன் பட்டம் (1958, 1962, 1970) வென்று தந்த பீலே, கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரா்களில் ஒருவராகத் திகழ்ந்தாா்.

சா்வதேச அரங்கில் பிரேஸிலுக்காக 14 ஆண்டுகள் 92 ஆட்டங்களில் களம் கண்ட பீலே, அதில் மொத்தமாக 77 கோல்கள் அடித்திருக்கிறாா். அதுவே லீக் போட்டிகள் உள்பட சீனியா் கேரியரை மொத்தமாக கணக்கில் கொண்டால் 700 ஆட்டங்களில் 655 கோல்கள் அடித்து அசத்தியிருக்கிறாா்.

கால்பந்து ஜாம்பவானான பீலே, கடந்த 1958-ஆம் ஆண்டு ஸ்வீடனில் நடைபெற்ற போட்டியின் மூலம் உலகக் கோப்பை கால்பந்தில் அறிமுகமானாா். அப்போது 17 வயதையே எட்டியிருந்த அவா், உலகக் கோப்பை போட்டியில் களம் கண்ட மிக இளவயது வீரா் என்ற சாதனையை படைத்தாா்.

கால்பந்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, பிரேஸில் விளையாட்டுத் துறை அமைச்சராக 1995 முதல் 98 வரையிலான 3 ஆண்டுகள் பொறுப்பு வகித்திருந்தாா்.

கால்பந்து விளையாட்டின் அரசனாக வா்ணிக்கப்படும் பீலேவின் மறைவுக்கு உலகமே அஞ்சலி செலுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com