999: இது என்ன தெரியுமா?

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் 74-வது ஒருநாள் வீரர்...
இந்திய அணியின் ஜாம்பவான்கள் - சச்சின், கங்குலி, டிராவிட்
இந்திய அணியின் ஜாம்பவான்கள் - சச்சின், கங்குலி, டிராவிட்


1000.

பிப்ரவரி 6 அன்று ஆமதாபாத்தில் மே.இ. தீவுகள் அணிக்கு எதிராக தன்னுடைய 1000-மாவது ஒருநாள் ஆட்டத்தை விளையாடவுள்ளது இந்தியா. இந்த இலக்கைத் தொடும் முதல் அணி, இந்தியா தான். 

கடைசியாக தென்னாப்பிரிக்காவில் விளையாடியதோடு, இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 999 ஆட்டங்களில் விளையாடியுள்ளது.

அஜித் வடேகர்
அஜித் வடேகர்

அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி முதல்முதலாக 1974-ல் இங்கிலாந்துக்குச் சென்று 2 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி 0-2 எனத் தோற்றது. அப்போது ஒருநாள் கிரிக்கெட் 55 ஓவர்களுக்கு விளையாடப்பட்டது. இந்திய அணி விளையாடிய முதல் ஒருநாள் ஆட்டத்தில் கவாஸ்கர் இடம்பெற்றார்.  பிறகு நேராக இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் 3 ஆட்டங்களில் விளையாடி ஓர் ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றது வெங்கட்ராகவன் தலைமையிலான இந்திய அணி. உலகக் கோப்பை 60 ஓவர்களுக்கு நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த வெங்கட்ராகவன், இந்தியாவின் முதல் உலகக் கோப்பை கேப்டன். 

ஜூன் 11, 1975 அன்று உலகக் கோப்பைப் போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்காவுடன் தான் முதல் ஒருநாள் வெற்றியைப் பெற்றது இந்தியா. கிழக்கு ஆப்பிரிக்கா 120 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கவாஸ்கரும் ஃபரூக் இன்ஜினியரும் ஆட்டமிழக்காமல் இலக்கை விரட்டி இந்திய அணிக்கு முதல் ஒருநாள் வெற்றியை அளித்தார்கள். கவாஸ்கர் 65 ரன்களும் ஃபரூக் இன்ஜினியர் 54 ரன்களும் எடுத்தார்கள். அப்போது இந்திய அணிக்குப் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் என யாரும் கிடையாது. வீரர்களே எல்லாவற்றுக்கும் பொறுப்பு. 

கபில் தேவ் 
கபில் தேவ் 

முதல் ஒருநாள் தொடர் வெற்றி, விளையாட ஆரம்பித்த 8 வருடங்கள் கழித்துதான் கிடைத்தது. 1982-ல் இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வெற்றி பெற்று தனது முதல் ஒருநாள் தொடர் வெற்றியை ருசித்தது இந்திய அணி. அதுவரை விளையாடிய இரு உலகக் கோப்பைப் போட்டிகள், ஒரு முத்தரப்புப் போட்டி, 4 ஒருநாள் தொடர்களில் இந்திய அணிக்குத் தோல்வியே கிடைத்தது.

1983, 2011 என ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி இரு உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. 

1974-ல் இங்கிலாந்தில் முதல் ஒருநாள் ஆட்டத்தை விளையாடியது இந்தியா. அதில் விளையாடிய 11 பேருமே அறிமுக வீரர்கள் தான். 2-வது ஒருநாள் ஆட்டத்தில் கோபால் போஸ், அசோக் மன்கட் என இருவரும் அறிமுகமானார்கள். இதில் உள்ள சோகம், இருவருமே அந்த ஆட்டத்துக்குப் பிறகு வேறு எந்த ஒருநாள் ஆட்டத்திலும் விளையாடவில்லை. இத்தனைக்கும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் அசோக் மன்கட் தான் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். ஆனால் இந்திய அணி அடுத்து விளையாடிய உலகக் கோப்பைப் போட்டிக்கு அவர் தேர்வாகவில்லை. 

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

1975 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அன்ஷுமன் கெயிக்வாட், கர்சான் காவ்ரி, மொஹிந்தர் அமர்நாத் என மூன்று வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்கள். 

கபில் தேவ், 25-வது வீரராக அறிமுகமானார். தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், 37-வது வீரர். 

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் 74-வது ஒருநாள் வீரர். தோனி 157-வது வீரர். அவருக்கு முன்பு 156-வது வீரராகத் தேர்வான தினேஷ் கார்த்திக், தோனியின் ஆளுமைக்கு மத்தியில் எப்படியோ இதுவரை 94 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிவிட்டார். 

இந்தியாவின் 100-வது ஒருநாள் வீரர், பங்கஜ் தர்மானி. அவர் ஒரு ஒரே ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார். 

தோனி
தோனி

விராட் கோலி, இந்தியாவின் 175-வது ஒருநாள் வீரர். ஆர். அஸ்வின் 185-வது வீரர். 

இந்தியாவின் 200-வது ஒருநாள் வீரர், ஸ்டூவர்ட் பின்னி. அவர் 14 ஒருநாள், 6 டெஸ்டுகளில் விளையாடினார். ஆஸ்திரேலியாவில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், 232-வது வீரராக அறிமுகமானார். 

கடந்த வருடம் ஷிகர் தவன் தலைமையில் இலங்கை சென்ற இந்திய அணியில் 7 வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்கள். 

சமீபத்தில் இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமானவர், வெங்கடேஷ் ஐயர். அவர் இந்தியாவின் 242-வது வீரர். 

விராட் கோலி
விராட் கோலி

999 ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றி, தோல்விகள்:

ஆட்டங்கள் - 999
வெற்றிகள் - 518
தோல்விகள் - 431
டை ஆன ஆட்டங்கள் - 9
முடிவு கிடைக்காத ஆட்டங்கள்- 41
வெற்றி சதவீதம் - 54.54%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com