யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் சதமடித்த வீரர்களின் சோகக் கதைகள்!

இறுதிச்சுற்றில் சதமடித்த எந்தவொரு வீரரும் சர்வதேச கிரிக்கெட் பக்கமே எட்டிப்பார்த்ததில்லை...
உன்முக்த் சந்த்
உன்முக்த் சந்த்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்று நாளை நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் எந்த வீரராவது சதமடித்தால் உடனே அவரை எச்சரிக்கும் விதமாக ஒரு புள்ளிவிவரம் நிச்சயம் வெளியாகும்.

அதாவது, இதுவரை யு-19 உலகக் கோப்பைப் போட்டி இறுதிச்சுற்றில் சதமடித்த எந்தவொரு வீரரும் சர்வதேச கிரிக்கெட் பக்கமே எட்டிப்பார்த்ததில்லை!

யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் சதமடித்த வீரர்கள்

உன்முக்த் சந்த் (இந்தியா) - 111* (2012)
பிரெட் வில்லியம்ஸ் (ஆஸ்திரேலியா) - 108 (1988)
ஸ்டீபன் பீட்டர்ஸ் (இங்கிலாந்து) - 107 (1998)
மன்ஜோத் கல்ரா (இந்தியா) - 101* (2018)
ஜேரட் பர்க் (ஆஸ்திரேலியா) - 100* (2002)

சதமடித்து தனது அணிக்கு வெற்றி தேடித் தந்த இவர்களின் கதை பிறகு என்னவானது?

2018 யு-19 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் மன்ஜோத் கல்ரா சதமடித்தார். ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்து இந்திய அணி கோப்பையை வெல்ல உதவினார். 

அதே ஆட்டத்தில் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிருத்வி ஷா, இதுவரை 5 டெஸ்ட், 6 ஒருநாள், 1 டி20 ஆட்டம் என இந்திய அணியில் பலமுறை இடம்பிடித்துவிட்டார். அதே ஆட்டத்தில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஷுப்மன் கில், 10 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியதோடு இந்திய அணிக்கு மறக்க முடியாத காபா டெஸ்ட் வெற்றியையும் அளித்துவிட்டார்.

ஆனால், இறுதிச்சுற்றில் சதமடித்து ஆட்ட நாயகன் விருதை வென்ற மன்ஜோத் கல்ரா பிறகு என்ன ஆனார் என்றே பலருக்கும் தெரியவில்லை. உலகக் கோப்பைக்குப் பிறகு உள்ளூரில் 1 லிஸ்ட் ஏ, 2 டி20 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். 2021 மார்ச்சுக்குப் பிறகு அவர் எந்த கிரிக்கெட் ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. அதற்கொரு காரணமும் உள்ளது. வயதைக் குறைவாகக் காண்பித்து உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடியதாக மன்ஜோத் கல்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் மன்ஜோத் கல்ரா ஒரு வருடத்துக்கு ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாட தடை விதித்தது தில்லி கிரிக்கெட் சங்கம். இந்தத் தடையால் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையே முடங்கிப் போய்விட்டது. 

குடும்பத்தினருடன் மன்ஜோத் கல்ரா
குடும்பத்தினருடன் மன்ஜோத் கல்ரா

2012 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் உன்முக்த் சந்த் சதமடித்தார். அவருடைய கதை மன்ஜோத் கல்ராவை விட மோசம்.

2012 யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி கேப்டனாக இருந்த உன்முக்த் சந்த், இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சதமடித்து கோப்பையை வெல்ல உதவினார். இதனால் அவர் விரைவில் இந்திய அணிக்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்திய ஏ அணிகளில் இடம்பெற்ற உன்முக்த் சந்த், அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். சரியாக விளையாடாததால் 2017-ல் தில்லி அணியிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு உத்தரகண்ட் அணியில் இணைந்து விளையாடினார். எனினும் அவரால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் எடுத்து கவனம் ஈர்க்க முடியவில்லை. 18 வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். தில்லி, மும்பை, ராஜஸ்தான் அணிகளில் இடம்பெற்றார். இதன்பிறகு நடந்தது தான் யாரும் எதிர்பாராதது.

முதல் தர கிரிக்கெட்டில் 3379 ரன்கள் எடுத்த உன்முக்த் சந்த், 28 வயதில் இந்திய கிரிக்கெட்டிலிருந்து விலகினார். பிசிசிஐக்கு விடை கொடுத்த உன்முக்த் சந்த், அடுத்த மூன்று வருடங்களில் அமெரிக்காவுக்காக விளையாடவுள்ளதாகக் கூறியுள்ளார். அமெரிக்காவில் மைனர் லீக் போட்டியில் விளையாடியுள்ள உன்முக்த் சந்த், 2023-ல் தொடங்கும் மேஜர் லீக் போட்டியிலும் விளையாடத் திட்டமிட்டுள்ளார். கடந்த மாதம் ஆஸ்திரேலிய பிக் பாஷ் லீக் (பிபிஎல்) டி20 போட்டியில் விளையாடிய முதல் இந்திய ஆடவர் என்கிற பெருமையை உன்முக்த் சந்த் பெற்றார்.

உன்முக்த் சந்த் சதமடித்த அதே 2012 இறுதிச்சுற்றில் விளையாடிய சந்தீப் சர்மா இந்தியாவுக்காக 2 டி20 ஆட்டங்களிலும் விஹாரி 13 டெஸ்டுகளிலும் விளையாடி விட்டார்கள். ஆனால் உன்முக்த் சந்த், இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இப்போது அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளார். 

(2020 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் அந்த ஆட்டத்தில் யாரும் சதமடிக்கவில்லை. ஐபிஎல் நட்சத்திரம் யாஷஸ்வி ஜெயிஸ்வால் அதிகபட்சமாக 88 ரன்கள் எடுத்தார். அந்த ஆட்டத்தில் விளையாடிய ரவி பிஸ்னாய் இந்திய டி20 அணிக்குத் தற்போது தேர்வாகியுள்ளார்.) 

இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் பிரெட் வில்லியம்ஸ், ஸ்டீபன் பீட்டர்ஸ், ஜேரட் பர்க் என யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டங்களில் சதமடித்த அனைவராலும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியாமல் போய்விட்டது. 

 2002-ல் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தந்த ஆஸ்திரேலியாவின் ஜேரட் பர்க், மொத்தமாகவே 3 டி20 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். யு-19 போட்டியில் சாதித்த அவரால் அதன்பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் கூட நல்ல வாய்ப்புகளைப் பெற முடியவில்லை. 

1998-ல் ஸ்டீபன் பீட்டர்ஸ் 107 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல உதவினார். பிறகு 260 முதல் தர கிரிக்கெட் ஆட்டம் என ஏராளமான ஆட்டங்களில் விளையாடினாலும் கடைசி வரை அவரால் இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. 

1988-ல் பிரெட் வில்லியம்ஸ் அடித்த சதத்தால் ஆஸ்திரேலிய அணி இளையோர் உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு இவரும் கிரிக்கெட்டில் சிறிய அளவில் கூட சாதிக்கவில்லை. 4 முதல்தர ஆட்டங்கள், 3 லிஸ்ட் ஏ ஆட்டங்கள் மட்டுமே விளையாடியதால் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்கும் கனவு வெகுதூரமாகிப் போனது. 

அரையிறுதியில் சதமடித்த யாஷ் துல்
அரையிறுதியில் சதமடித்த யாஷ் துல்

இதனால் யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டத்தில் சதமடித்தாலே அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதானா என யாரும் பயப்படத் தேவையில்லை. கிரிக்கெட்டில் இதுபோன்ற பல அவநம்பிக்கைகளை வீரர்கள் உடைத்துள்ளார்கள். அரையிறுதியில் சதமடித்த கேப்டன் யாஷ் துல், சதத்தைத் தவறவிட்ட ரஷீத், தொடக்க வீரர்கள் ரகுவன்ஷி, ஹர்நூர் சிங் என முன்னணி பேட்டர்கள் சதமடித்து அதன்பிறகு புதிய வரலாறை எழுத முயலலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com