ஈடன் கார்டன்ஸில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: கங்குலி அறிவிப்பு

மேற்கு வங்க அரசின் அனுமதி இருந்தாலும் வீரர்களின் பாதுகாப்பு கருதி இம்முடிவை எடுத்துள்ளோம் என்றார். 
ஈடன் கார்டன்ஸில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: கங்குலி அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடர் நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மே.இ. தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. 

கொல்கத்தாவில் நடைபெறும் மூன்று டி20 ஆட்டங்களுக்கும் 75% ரசிகர்களை அனுமதிக்க மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது. விளையாட்டு அரங்குகளில் 75% ரசிகர்கள் அனுமதியுடன் போட்டிகள் நடக்கலாம் என மேற்கு வங்க அரசு அனுமதி அளித்ததையடுத்து ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 50,000 ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெறும் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்த நிலை இல்லை. ஆமதாபாத்தில் நிலவும் கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு 3 ஒருநாள் ஆட்டங்களிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.  

இந்நிலையில் மேற்கு வங்க அரசு அனுமதித்தாலும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கங்குலி கூறியதாவது:

மூன்று டி20 ஆட்டங்களுக்கும் நாங்கள் ரசிகர்களை அனுமதிப்பதில்லை. பொதுமக்களுக்கு எவ்வித டிக்கெட்டுகளையும் விற்பனை செய்ய மாட்டோம். மைதானத்தில் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதுபோன்ற காலகட்டங்களில் ரசிகர்களை அனுமதிப்பதன் மூலம் வீரர்களின் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளை அனுமதிக்க முடியாது. ரசிகர்களை அனுமதிக்க எங்களுக்கு மேற்கு வங்க அரசின் அனுமதி இருந்தாலும் வீரர்களின் பாதுகாப்பு கருதி இம்முடிவை எடுத்துள்ளோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com