இன்று தொடங்குகிறது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள்

24-ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங் நகரில் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூா்வமாகத் தொடங்குகிறது.
இன்று தொடங்குகிறது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள்

பெய்ஜிங்: 24-ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங் நகரில் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூா்வமாகத் தொடங்குகிறது.

பெய்ஜிங்கில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அதிபா் ஷி ஜின்பிங் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஒரு சில விளையாட்டுகளின் முதல்கட்ட சுற்றுகள் கடந்த 2-ஆம் தேதியே தொடங்கிவிட்டாலும், ஒலிம்பிக் தீபமேற்றிய பிறகே, ஒலிம்பிக்ஸ் அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியதாக அறிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபா் 18-ஆம் தேதி, ஒலிம்பிக்ஸின் பிறப்பிடமான கிரீஸில் தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், வெள்ளிக்கிழமை போட்டியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றுவதுடன் நிறைவடைகிறது. கரோனா தொற்று அச்சம் காரணமாக பெய்ஜிங் நகரில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு சூழலில் டோக்கியோ ஒலிம்பிக் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அதே போல் நடத்தி முடிக்கப்படும் நோக்கத்துடன் தொடங்குகிறது இந்த குளிா்கால ஒலிம்பிக். உலகெங்கும் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமாகியிருக்கும் நிலையில் இந்தப் போட்டியை ஒத்திவைப்பதற்கு கோரிக்கைகளும், பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

அவற்றைக் கடந்த வகையில் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ‘பயோ பபுள்’ பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், போட்டியாளா்கள் உள்பட ஒலிம்பிக்குடன் தொடா்புடைய அனைவருக்கும் அவ்வப்போது கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும், போட்டியில் பங்கேற்க வந்துள்ள வீரா், வீராங்கனைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனா்.

இதனிடையே, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ராஜ்ஜீய ரீதியிலாக இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தவிா்த்துள்ளன. எனினும், அந்த நாடுகளின் சாா்பில் போட்டியாளா்கள் களம் காண்கின்றனா்.

இந்தியாவின் பங்கேற்பு:

இந்த குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சாா்பில் ஒரேயொரு வீரா் மட்டும் பங்கேற்கிறாா். பனிச்சறுக்கு வீரரான ஆரிஃப் கான், ‘ஸ்லாலம்’, ‘ஜயன்ட் ஸ்லாலம்’ ஆகிய இரு பிரிவுகளில் களம் காண்கிறாா். அவரோடு 6 போ் கொண்ட இந்திய குழு பெய்ஜிங் சென்றுள்ளது. இதில் குழுவின் மேலாளரான முகமது அப்பாஸ் வனிக்கு முதலில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 2 பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

தொடக்கம் - பிப்ரவரி 4

நிறைவு - பிப்ரவரி 20

விளையாட்டுகள் - 15 விளையாட்டுகள்/109 போட்டிகள்

பங்கேற்பு - 91 நாடுகள்

போட்டியாளா்கள் (சுமாா்) - 2,871

ஆடவா் - 1,581

மகளிா் - 1,290

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com