நானும் இஷான் கிஷனும் தொடக்க வீரர்கள்: ரோஹித் சர்மா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நானும் இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவோம் என...
நானும் இஷான் கிஷனும் தொடக்க வீரர்கள்: ரோஹித் சர்மா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நானும் இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவோம் என இந்திய ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

மே.இ. தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. இரு தொடர்களுக்கும் மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. 

ஒருநாள் தொடருக்காக ஆமதாபாத் வந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவன், ருதுராஜ் கெயிக்வாட், ஷ்ரேயஸ் ஐயர், சைனி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப், பாதுகாப்பு அதிகாரி பி. லோகேஷ், மசாஜ் நிபுணர் ராஜீவ் குமார் என ஒட்டுமொத்தமாக ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஆமதாபாத்தில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

முதல் ஒருநாள் ஆட்டம் நாளை தொடங்குவதையொட்டி இந்திய கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் வாய்ப்புகள் கிடைக்கலாம். யாரும் எந்தப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டு சிறப்பாக விளையாடலாம். விராட் கோலி செய்தவற்றை நான் அப்படியே தொடரப் போகிறேன். எல்லோருக்கும் அவரவருடைய பொறுப்புகள் தெரியும். 

நாளைய ஆட்டத்தில் இஷான் கிஷன் என்னுடன் தொடக்க வீரராகக் களமிறங்குவார். மயங்க் அகர்வால் இன்னும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அணிக்கு வந்த வீரர்கள் அதிகமான ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவில்லை. சூழலுடன் தங்களைப் பொருந்திக்கொள்ள அவர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். அடுத்த சில மாதங்களுக்குச் சில விஷயங்களைச் செய்து பார்ப்போம். அது சரியாக இல்லாவிட்டால் மாற்று திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com