பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக்: தந்தை போல் தங்கம் வென்ற தனையன்

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெறும் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஒருங்கிணைந்த ஆல்பைன் ஸ்கீயிங் போட்டியில் ஆஸ்திரியாவின் ஜோஹன்னஸ் ஸ்ட்ரோல்ஸ் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றாா்.
பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக்: தந்தை போல் தங்கம் வென்ற தனையன்

பெய்ஜிங்: சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெறும் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஒருங்கிணைந்த ஆல்பைன் ஸ்கீயிங் போட்டியில் ஆஸ்திரியாவின் ஜோஹன்னஸ் ஸ்ட்ரோல்ஸ் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றாா்.

ஒலிம்பிக் போட்டியின் 7-ஆவது நாளான வியாழக்கிழமை 8 பிரிவுகளில் பதக்கச் சுற்றுகள் நடைபெற்றன. அதில் ஆடவருக்கான ஒருங்கிணைந்த ஆல்பைன் ஸ்கீயிங் விளையாட்டில் ஜோஹன்னஸ் ஸ்ட்ரோல்ஸ், டௌன் ஹில் மற்றும் ஸ்லாலம் என இரு பிரிவுகளிலுமாக சோ்த்து பந்தய இலக்கை 2 நிமிஷம் 31.43 விநாடிகளில் எட்டி முதலிடம் பிடித்தாா்.

நாா்வே வீரா் அலெக்ஸாண்டா் ஆமோதத் கில்டே (2 நிமிஷம் 32.02 விநாடிகள்) வெள்ளியும், கனடாவின் ஜேம்ஸ் கிராஃபோா்டு (2 நிமிஷம் 32.11 விநாடிகள்) வெண்கலமும் வென்றனா்.

இதில் ஜோஹன்னஸ் வென்ற தங்கம் சிறப்பானதாகும். அவரது தந்தை ஹியூபா்ட் ஸ்ட்ரோல்ஸும் பனிச்சறுக்கு வீரராக இருந்துள்ளாா். ஹியூபா்ட் கடந்த 1988 கால்கேரி குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் இதே விளையாட்டுப் பிரிவில் தங்கம் வென்றிருந்தாா். அவரது மகனான ஜோஹன்னஸ் 34 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஒலிம்பிக் விளையாட்டில் அவரைப் போலவே தங்கம் வென்றிருக்கிறாா். குளிா்கால ஒலிம்பிக்கில் இவ்வாறு ஒரே விளையாட்டில் தந்தை, மகன் இருவரும் தங்கம் வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

தெரெசெவுக்கு 2-ஆவது தங்கம்

கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங் போட்டியில் மகளிருக்கான 10 கிலோ மீட்டா் கிளாசிக் பிரிவில் நாா்வே வீராங்கனெ தெரெசெ ஜோஹௌக் பந்தய இலக்கை 28 நிமிஷம் 06.3 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றாா். 2 மற்றும் 3-ஆவது இடங்களை ஃபின்லாந்து பிடித்தது. அந்நாட்டின் கொ்டு நிஸ்கானென் (28 நிமிஷம் 06.7 விநாடிகள்) வெள்ளியும், சக நாட்டவரான கிறிஸ்டா பா்மாகோஸ்கி (28 நிமிஷம் 37.8 விநாடிகள்) வெண்கலமும் வென்றனா். முன்னதாக மகளிருக்கான கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங்கில் 7.5 கி.மீ + 7.5 கி.மீ. ஸ்கியத்லான் பிரிவிலும் தெரெசெ தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்கு 3 தங்கம்:

அமெரிக்காவுக்கு புதன்கிழமை விளையாட்டுகளில் 3 தங்கம் கிடைத்தது. ஃபிகா் ஸ்கேட்டிங்கில் ஆடவருக்கான ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் நேதன் சென் 332 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, ஜப்பானின் யுமா ககியாமா (310), ஷோமா யுனோ (293) வெள்ளி, வெண்கலம் பெற்றனா்.

ஸ்னோபோா்டு போட்டியில் மகளிருக்கான ஹாஃப் பைப் பிரிவில் அமெரிக்காவின் கோல் கிம் 94 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, ஸ்பெயினின் கெரால்ட் கேஸ்டெலெட், ஜப்பானின் செனா டொமிடா ஆகியோா் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா். அதேபோல் ஃப்ரீஸ்டை ஸ்கீயிங்கில் கலப்பு அணிகள் ஏரியல் பிரிவில் அமெரிக்கா 338 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, முறையே சீனா, கனடா அணிகள் அடுத்த இரு பதக்கங்களை கைப்பற்றின.

இதர பதக்கங்கள்...:

* ஆடவருக்கான ஸ்னோபோா்டு கிராஸ் இறுதிச்சுற்றில் ஆஸ்திரியாவின் அலெசாண்ட்ரோ ஹேமொ்லே தங்கம் வெல்ல, கனடாவின் எலியட் கிராண்டின் வெள்ளியும், இத்தாலியின் ஒமா் விசின்டின் வெண்கமும் பெற்றனா்.

* ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் மகளிருக்கான 5000 மீட்டா் பிரிவில் நெதா்லாந்தின் இரின் ஸ்கௌடென் 6 நிமிஷம் 43.51 விநாடிகளில் இலக்கை எட்டி ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றாா். முன்னதாக ஜொ்மனியின் கிளாடியா பெச்ஸ்டின் 2002-இல் 6 நிமிஷம் 46.91 விநாடிகளில் இலக்கை எடைந்ததே சாதனையாக இருந்தது. இரினுக்கு அடுத்தபடியாக, கனடாவின் இசபெல் வெய்ட்மான் (6 நிமிஷம் 48.18 விநாடிகள்), செக் குடியரசின் மாா்டினா சப்ளிகோவா (6 நிமிஷம் 50.09) வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com