சிஎஸ்கே அணியில் இலங்கை வீரர்கள்: ஒரு பார்வை

2013-க்குப் பிறகு முதல்முறையாக இலங்கை வீரரைத் தேர்வு செய்துள்ள சிஎஸ்கே அணி...
சிஎஸ்கே அணியில் இலங்கை வீரர்கள்: ஒரு பார்வை
Published on
Updated on
2 min read


2013-க்குப் பிறகு முதல்முறையாக இலங்கை வீரரைத் தேர்வு செய்துள்ள சிஎஸ்கே அணி சமூகவலைத்தளங்களில் ரசிகர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வீரர் மஹீஸ் தீக்‌ஷனாவைத் தேர்வு செய்த காரணத்துக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் புறக்கணிப்போம் என ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள். 

2013-ல், இலங்கை அரசுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்றன. ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்கள் வீரர்கள் பங்கேற்றால் போட்டியை நடத்த விட மாட்டோம் எனச் சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. இதையடுத்து, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் கொண்ட அணியை விளையாட அனுமதிக்க மாட்டோம், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில், இலங்கை வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள் கொண்ட ஐபிஎல் அணிகளை அனுமதிக்க வேண்டாம் என ஐபிஎல் அணி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதினார்.

அப்போது சிஎஸ்கே அணியில் குலசேகரா, அகிலா தனஞ்ஜெயா என இரு இலங்கை வீரர்கள் இருந்தார்கள். இதையடுத்து ஐபிஎல் நிர்வாகக் குழு ஒரு முடிவை எடுத்தது. உள்ளூர் மக்களின் உணவுர்பூர்வமான விஷயத்துக்கு மதிப்பளித்து, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டங்களில் எந்த அணி சார்பிலும் இலங்கை அணி வீரர்கள் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. அணியில் உள்ள இரு இலங்கை வீரர்களும் சென்னையில் விளையாட மாட்டார்கள் என சிஎஸ்கே அணியும், அறிவித்தது. அந்த வருடம் குலசேகராவும் அகிலா தனஞ்ஜெயாவும் எந்தவொரு ஐபிஎல் ஆட்டத்திலும் விளையாடவில்லை. 

2013-ல் 11 இலங்கை வீரர்கள் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றார்கள். ஆனால் அந்த வருடம் சிஎஸ்கேவில் இடம்பெற்ற குலசேகராவும் தனஞ்ஜெயாவும் ஓர் ஆட்டத்திலும் விளையாடவில்லை. அடுத்த வருடம் இருவரும் சிஎஸ்கே அணியில் இடம்பெறவில்லை. 2013-க்குப் பிறகு கடந்த வருடம் வரை எந்தவொரு இலங்கை வீரரையும் சிஎஸ்கே அணி தேர்வு செய்யவில்லை. (2013-க்கு முன்பு வருடம் தவறாமல் இலங்கை வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றார்கள்.)

 மஹீஸ் தீக்‌ஷனா
 மஹீஸ் தீக்‌ஷனா

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்‌ஷனாவை ரூ. 70 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. இதையடுத்து சிஎஸ்கே அணிக்குக் கண்டனம் தெரிவித்து #BoycottCSK என்கிற ஹேஷ்டேக்குடன் பலரும் ட்விட்டரில் பதிவுகள் எழுதியுள்ளார்கள். 2013-ல் இலங்கை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் விதிக்கப்பட்ட தடை முடிந்துவிட்டதா, தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இலங்கை வீரரை சிஎஸ்கே அணி தேர்வு செய்துள்ளதால் அதனைப் புறக்கணிப்போம் எனப் பலரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்கள். இதனால் #BoycottCSK என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது. 

ஐபிஎல்: சிஎஸ்கே அணியில் இலங்கை வீரர்கள்

2008 - முரளிதரன், சமரா கபுகெடரா
2009 - முரளிதரன், திலன் துஷாரா
2010 - முரளிதரன், திசாரா பெரேரா, திலன் துஷாரா
2011 - குலசேகரா, சூரஜ் ரந்தீவ்
2012 - குலசேகரா, சூரஜ் ரந்தீவ்
2013 - குலசேகரா, அகிலா தனஞ்ஜெயா
2014 - 
2015 -
2016 - சிஎஸ்கே போட்டியில் பங்குபெறவில்லை
2017 - சிஎஸ்கே போட்டியில் பங்குபெறவில்லை
2018 -
2019 -
2020 -
2021 - 
2022 - மஹீஸ் தீக்‌ஷனா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com