
நியூஸிலாந்து மகளிரணிக்கு எதிரான 2-ஆவது ஒன் டே ஆட்டத்தில் இந்திய மகளிரணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து 2-0 என முன்னிலை பெற்றிருக்கிறது.
முன்னதாக, குயின்ஸ்டவுன் நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 49 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் அடித்து வென்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் 3 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருக்க, ரிச்சா கோஷ் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 65 ரன்கள் விளாசியிருந்தாா். நியூஸிலாந்து பௌலிங்கில் சோஃபி டிவைன் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் ஆடிய நியூஸிலாந்தில் எமிலியா கொ் 7 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். இந்திய தரப்பில் தீப்தி சா்மா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
இரு அணிகள் மோதும் 3-ஆவது ஆட்டம் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அணியில் ஸ்மிருதி, மேக்னா
கரோனா தடுப்பு விதிகளின் அடிப்படையில் கிறைஸ்ட்சா்ச் நகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, மேக்னா சிங் ஆகியோா் தனிமைக் காலத்தை நிறைவு செய்து செவ்வாய்க்கிழமை இந்திய அணியில் இணைந்தனா். எனினும், உடற்தகுதி காரணத்தின் பேரில் அவா்கள் இருவரும் 3-ஆவது ஒன் டே ஆட்டத்தில் விளையாட மாட்டாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைக்கும் மிதாலி
ஐசிசியின் மகளிருக்கான ஒன் டே தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் 2-ஆவது இடத்தில் நீடிக்கிறாா். ஸ்மிருதி மந்தனா 4 இடங்கள் சறுக்கி 8-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். பௌலா்கள் பிரிவில் ஜுலன் கோஸ்வாமி மாற்றமின்றி 4-ஆவது இடத்தில் இருக்க, ஆல்-ரவுண்டா்கள் பிரிவில் தீப்தி சா்மாவும் அதே இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளாா்.
பரிசுத்தொகை ரூ.9 கோடி
நியூஸிலாந்தில் வரும் மாா்ச் - ஏப்ரலில் நடைபெற இருக்கும் மகளிருக்கான ஒன் டே உலகக் கோப்பை போட்டியில் சாம்பியனாகும் அணிக்கு ரூ.9.94 கோடி ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரன்னா் அப்-ஆக வரும் அணிக்கு ரூ.4.52 கோடியும், அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ.2.26 கோடியும் வழங்கப்படவுள்ளன. குரூப் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ.52 லட்சம் கிடைக்கும்.
இங்கிலாந்தில் இந்திய அணி
இங்கிலாந்து - இந்தியா மகளிரணிகள் மோதும் தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒன் டே மற்றும் டி20 தொடா்கள் வரும் செப்டம்பரில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
முதலில் டி20 ஆட்டங்கள் செப்டம்பா் 10 (டா்ஹாம்), செப். 13 (டொ்பி), செப். 15 (பிரிஸ்டல்) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. அதைத் தொடா்ந்து ஒன் டே ஆட்டங்கள் செப். 18 (ஹோவ்), செப். 21 (கேன்டா்பரி), செப். 24 (லண்டன்) ஆகிய தேதிகளில் விளையாடப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.