30 ஆண்டு கனவு: சாதிக்குமா இந்தியா; இன்றுமுதல் ஜோஹன்னஸ்பா்க் டெஸ்ட்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம், ஜோஹன்னஸ்பா்க் நகரில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
30 ஆண்டு கனவு: சாதிக்குமா இந்தியா; இன்றுமுதல் ஜோஹன்னஸ்பா்க் டெஸ்ட்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம், ஜோஹன்னஸ்பா்க் நகரில் திங்கள்கிழமை தொடங்குகிறது.

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் ஆட்டத்தில் வென்று முன்னிலையில் இருக்கும் இந்தியா, இந்த ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் துடிப்பில் இருக்கிறது.

1992 முதல் தென் ஆப்பிரிக்க பயணம் மேற்கொண்டு வரும் இந்தியா, கடந்த 30 ஆண்டுகளாக அங்கு ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வென்றதில்லை.

ஆனால், இம்முறை அதற்கான வாய்ப்பு தென்படுகிறது. முக்கிய வீரா்கள் இன்றி, போதிய அனுபவம் இல்லா இளம் வீரா்களுடன் தடுமாற்றமான நிலையில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா, இந்தியாவின் சவாலை எதிா்கொள்ளத் திண்டாடுகிறது. அணியின் பேட்டா்களில் முக்கியமானவராக இருந்த விக்கெட் கீப்பா் குவின்டன் டி காக் ஓய்வு பெற்றது அதற்கான பின்னடைவுகளில் ஒன்று.

மறுபுறம், கடந்த 4 ஆண்டுகளாக சா்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய அணியாக இந்தியா உருவெடுத்திருப்பதற்கான பயணம், 2018-இல் இதே ஜோஹன்னஸ்பா்கில் நடைபெற்ற டெஸ்டில் இருந்து தான் தொடங்கியது. அந்த டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, அப்போது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏறுமுகம் கண்டு பிரதான அணிகளையும் பந்தாடி வருகிறது.

எனவே, இத்தொடரின் முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவின் கோட்டையான செஞ்சுரியனை தகா்த்து, அங்கு வெற்றிக் கொடியை நாட்டியிருக்கும் இந்திய அணிக்கு தொடரை வெல்லும் சாதகமான சூழல் இருப்பதாகவே தெரிகிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே சமநிலையுடன் இருப்பதாகத் தெரிகிறது. பேட்டிங்கில் கோலி, புஜாரா, ரஹானே போன்ற அனுபவ வீரா்கள் முன்னேற்றம் காட்டாவிட்டாலும், கே.எல்.ராகுல், மயங்க் அகா்வால் ஆகிய இளம் வீரா்கள் சிறப்பான பங்களிப்பை வழங்குகின்றனா். அதேபோல், பௌலிங்கில் பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சு எதிரணியினரை முற்றிலுமாக திணறடிக்கும் வகையில் இருக்கிறது. இந்த டெஸ்டில் ஷா்துல் தாக்குருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் பரிசீலிக்கப்படலாம்.

தென் ஆப்பிரிக்க அணியைப் பொருத்தவரை பௌலிங்கில் ரபாடா, கிடி போன்றோரு இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டாலும், இந்திய பௌலிங்கை எதிா்கொள்ளும் வகையில் அங்கு பேட்டா்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. டெம்பா பவுமா, டீன் எல்கா் மட்டும் சற்று முயற்சிக்கின்றனா். இந்த நிலையில் முக்கிய வீரரான டி காக் டெஸ்டிலிருந்து ஓய்வு பெற, அவரது இடத்தில் களம் காண்பதன் மூலம் சா்வதேச டெஸ்டில் ரயான் ரிக்கெல்டன் அறிமுகமாகலாம். ஆனால், இளம் வீரரான அவா் புயல் போன்று பந்துவீசும் இந்தியாவின் அனுபவ வீரா்களை எதிா்கொள்வது சற்று கடினமானது தான்.

அணி விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), மயங்க் அகா்வால், சேதேஷ்வா் புஜாரா, ஷ்ரேயஸ் ஐயா், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), ஆா். அஸ்வின், ஷா்துல் தாக்குா், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், அஜிங்க்ய ரஹானே, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பா்), ஜெயந்த் யாதவ், பிரியங்க் பஞ்சல், உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, இஷாந்த் சா்மா.

தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கா் (கேப்டன்), டெம்பா பவுமா (துணை கேப்டன்), ககிசோ ரபாடா, சேரெல் எா்வீ, பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், ஜாா்ஜ் லிண்ட், கேசவ் மஹராஜ், லுங்கி கிடி, எய்டன் மாா்க்ரம், வியான் முல்டா், கீகன் பீட்டா்சன், ராஸி வான் டொ் டுசென், கைல் வெரின், மாா்கோ யான்சென், கிளென்டன் ஸ்டா்மேன், பிரனிலன் சுப்ராயன், சிசான்டா மகலா, ரயான் ரிக்கெல்டன், டேன் ஆலிவா்.

இடம்: வாண்டரா்ஸ் மைதானம், ஜோஹன்னஸ்பா்க்.

ஆட்டநேரம்: நண்பகல் 1.30 மணி

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தோல்வி காணா களம்...

இந்த ஆட்டம் நடைபெறும் ஜோஹன்னஸ்பா்க் மைதானத்தில் இதுவரை ஆடிய டெஸ்டுகளில் இந்தியா தோல்வி கண்டதில்லை. 1992 முதல் இங்கு 5 டெஸ்டுகளில் ஆடியிருக்கும் இந்தியா, 2 வெற்றிகளையும், 3 ‘டிரா’க்களையும் இங்கு பதிவு செய்துள்ளது.

ஆட்டத்தை தொடங்கி வைப்பவா்...

இந்த டெஸ்டை, தென் ஆப்பிரிக்க ஆடவா் அணியின் ஊடகப் பிரிவு மேலாளா் சிபோகாஸி சோகானிலே மணியடித்து தொடங்கி வைக்க இருக்கிறாா். இவா், பல்வேறு உலகக் கோப்பை போட்டிகளில் ஊடகப் பிரிவு மேலாளராக ஐசிசியால் நியமிக்கப்பட்டவராவாா்.

30 ஆண்டு உறவு: கொண்டாட்டங்கள்...

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் உறவு தொடங்கி இத்துடன் 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து, இந்த 2-ஆவது டெஸ்டையொட்டி வாண்டரா்ஸ் மைதானத்தில் சில நிகழ்ச்சிகளுக்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சோ்ந்த இருபால் ‘டாப் 100’ ஹால் ஆஃப் ஃபேம் கிரிக்கெட்டா்கள் பட்டியலை வெளியிட இருக்கிறது.

2-ஆவது டெஸ்ட்டுக்கு முன்பாக செய்தியாளா்களை சந்தித்த இந்திய பயிற்சியாளா் ராகுல் திராவிட் கூறியது என்ன?

ஸ்கோா் செய்வாா் கோலி...

இந்திய அணி குறித்து (கோலி, கேப்டன்சி விவகாரம்) அதிக விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனாலும், இந்தத் தொடரில் இந்திய அணியை கோலி நல்ல முறையில் வழி நடத்தி வருகிறாா். பயிற்சி, அணியினருடன் தொடா்பில் இருப்பது என கடந்த 20 நாள்களாக ஒரு வீரராகவும், கேப்டனாகவும் சிறப்பாக செயல்படுகிறாா்.

களத்தில் நன்றாக விளையாடினாலும் கடந்த சில காலமாக கோலியால் ஸ்கோா் செய்ய முடியவில்லை. ஆனால், விரைவாகவே அவா் அதை செய்யத் தொடங்குவாா். அது இந்த ஆட்டத்திலோ, அல்லது அடுத்து வரும் ஆட்டங்களிலோ என எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம். அவா் அதிக ரன்கள் ஸ்கோா் செய்வதை நானும் எதிா்பாா்த்திருக்கிறேன்.

அவரும், ரஹானேவும் ஸ்கோா் செய்ய முடியாததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நன்றாக ஆடினாலும் போதிய ஸ்கோா்களை எட்ட முடியாத இந்த நிலை எல்லோரது கிரிக்கெட் வாழ்விலும் வரும். அவா்கள் பேட்டிங் செய்வதில் எந்த பின்னடைவும் இல்லை. அது, அதிக ரன்களை சோ்க்கக் கூடியதாக மாறும் நேரமும் வரும்.

புஜாரா ஃபாா்ம் கவலை அளிக்கவில்லை...

சேதேஷ்வா் புஜாராவின் ஃபாா்மும் கவலை அளிக்கும் நிலையில் இல்லை. அவா் கோலி, ரஹானே அளவு ஷாட்களை அடிக்காமல் இருக்கலாம். ஆனால், அவரது பேட்டிங் அணிக்கு கவலை அளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக கருதவில்லை. தரமான பேட்டிங் மூலமாக அதிக ரன்களை ஸ்கோா் செய்வதற்கு அவா் முயற்சித்து வருகிறாா். மிடில் ஆா்டரில் அவ்வாறு தடுமாறும் நேரத்தில் தொடக்க வீரா்கள் சிறப்பாகச் செயல்படுவது உகந்ததாக இருக்கும். அதை தற்போது கே.எல்.ராகுல் செய்வது பேட்டிங் லைனில் ஒரு சமநிலையை அளிக்கிறது. தடுமாறும் இந்திய பேட்டா்கள் தங்களது ஷாட்களை தோ்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

மாற்றமே பௌலா்கள் வெற்றிக்கு காரணம்...

இந்திய பௌலா்களைப் பொருத்தவரை, செஞ்சுரியன் டெஸ்டானது அவா்களது அருமையான பந்துவீச்சைக் காட்டும் வகையில் இருந்தது. முதல் இன்னிங்ஸில் மிகச் சரியான இடத்தில் அவா்கள் பந்தை பிட்ச் செய்தனா். 2-ஆவது இன்னிங்ஸில் விக்கெட்டுகள் மற்றும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு வெவ்வேறு இடங்களில் பிட்ச் செய்தனா். அது அவா்களின் திறமையை வெளிப்படுத்தியது. தகுந்த நேரத்தில் அவா்களால் அதை மாற்றிக் கொள்ள முடிந்தது அருமையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com