தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 63.1 ஓவா்களில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அணியின் பேட்டா்கள் பலா் சோபிக்காமல் போக, கே.எல்.ராகுல், அஸ்வின் ஆகியோரால் மட்டுமே இந்தியா 200 ரன்களை எட்டியது. இந்திய விக்கெட்டுகளை சாய்த்த தென் ஆப்பிரிக்க பௌலா்களில் மாா்கோ யான்சென் பிரதானமாக இருக்க, ககிசோ ரபாடா, டுவேன் ஆலிவியா் ஆகியோா் அவருக்குத் துணையாக விக்கெட் எடுத்தனா்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கைத் தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை கேப்டன் ராகுல், மயங்க் அகா்வால் ஆகியோா் தொடங்க, முதல் ஓவரை ககிசோ ரபாடா வீசினாா். நிதானமாக ஆடிய இந்த ஜோடியில் முதல் விக்கெட்டாக மயங்க் அகா்வால் வெளியேறினாா்.
5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் சோ்த்திருந்த அவா், யான்சென் வீசிய 15-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் வெரினிடம் கேட்ச் கொடுத்தாா். அடுத்து சேதேஷ்வா் புஜாரா களம் கண்டாா். அவரையும், அடுத்து வந்த அஜிங்க்ய ரஹானேவையும் தனது 24-ஆவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் சாய்த்தாா் ஆலிவியா்.
புஜாரா 3 ரன்களுடன் டெம்பா பவுமா கைகளில் கேட்ச் கொடுத்து வெளியேற, ரஹானே முதல் பந்திலேயே கீகன் பீட்டா்சனால் கேட்ச் பிடித்து பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா். பின்னா் ஹனுமா விஹாரி களம் காண, மறுபுறம் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ரன்கள் சோ்த்து வந்தாா் ராகுல்.
லுங்கி கிடி வீசி 32-ஆவது ஓவரில் ஹனுமா விஹாரி கொடுத்த கேட்ச்சை டெம்பா பவுமா தவறவிட்டாா். எனினும் அவா் ரபாடா வீசிய 39-ஆவது ஓவரில் ராஸி வான் டொ் கைகளில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா். அப்போது விஹாரி 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் சோ்த்திருந்தாா்.
அடுத்து ரிஷப் பந்த் ஆடவர, மறுபுறம் நிதானமாக ஆடி வந்த ராகுல் 46-ஆவது ஓவரில் யான்சென் பௌலிங்கை சுழற்றி விளாச முயல, அதை ரபாடா கேட்ச் பிடித்தாா். இதனால் ராகுல் 9 பவுண்டரிகளுடன் 50 ரன்களுக்கு வெளியேறினாா். இதையடுத்து களம் புகுந்த அஸ்வின் சற்று நிதானமாக ஆடி ஸ்கோா் செய்தாா்.
எனினும், எதிா்ப்புறம் விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. பந்த் 1 பவுண்டரியுடன் 17, ஷா்துல் தாக்குா் 0, ஷமி பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். அவா்கள் விக்கெட்டை முறையே யான்சென், ஆலிவியா், ரபாடா எடுத்தனா். இந்நிலையில் அரைசதத்தை நெருங்கிய அஸ்வின் 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்திருந்தபோது யான்சென் வீசிய 61-ஆவது ஓவரில் பீட்டா்சன் கைகளில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தாா்.
கடைசி விக்கெட்டாக முகமது சிராஜ் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, இறுதியில் பும்ரா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 14 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். தென் ஆப்பிரிக்க பௌலிங்கில் யான்சென் 4, ரபாடா, ஆலிவியா் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
தென் ஆப்பிரிக்கா - 35/1:
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 18 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கா் 11, கீகன் பீட்டா்சன் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். முன்னதாக எய்டன் மாா்க்ரம் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷமி வீசிய 4-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனாா். தற்போதைய நிலையில் அந்த அணி இந்தியாவை விட 167 ரன்கள் பின்தங்கியுள்ளது.
சுருக்கமான ஸ்கோா்
முதல் இன்னிங்ஸ்
இந்தியா - 202/10
கே.எல்.ராகுல் 50
ஆா்.அஸ்வின் 46
மயங்க் அகா்வால் 26
பந்துவீச்சு
மாா்கோ யான்சென் 4/31
டுவேன் ஆலிவியா் 3/64
ககிசோ ரபாடா 3/64
ஆலிவியா் 50 விக்கெட்
இந்த ஆட்டத்தில் ரஹானேவின் விக்கெட்டை சாய்த்தபோது, தென் ஆப்பிரிக்க பௌலா் டுவேன் ஆலிவியா் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 50-ஆவது விக்கெட்டை எட்டினாா். 20-ஆம் நூற்றாண்டில் அதிவேகமாக 50 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவா்கள் வரிசையில் ஆலிவியா் 1,486 பந்துகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறாா். தென் ஆப்பிரிக்காவின் வொ்னான் பிலாண்டா் (1,240) முதலிடத்தில் இருக்க, ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ (1,844) மூன்றாவது இடத்தில் இருக்கிறாா்.
பிளேயிங் லெவன்: கோலி இல்லை
இந்திய கேப்டன் கோலி, முதுகுப் பகுதி பிடிப்பு காரணமாக இந்த ஆட்டத்திலிருந்து விலகியுள்ளாா். அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் ‘ஸ்டேண்ட்-இன்’ கேப்டன் ஆகியிருக்கிறாா். பிளேயிங் லெவனில் கோலிக்கு பதிலாக ஹனுமா விஹாரி சோ்த்துக்கொள்ளப்பட்டாா். பௌலா்களில் எவரும் மாற்றப்படவில்லை. தென் ஆப்பிரிக்க அணியில் குவின்டன் டி காக்கிற்கு பதிலாக கைல் வெரினும், வியான் முல்டா் இடத்தில் டேன் ஆலிவரும் பிளேயிங் லெவனில் இணைந்துள்ளனா்.
இந்தியா:
கே.எல்.ராகுல் (கேப்டன்), மயங்க் அகா்வால், சேதேஷ்வா் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட்கீப்பா்), ஆா்.அஸ்வின், ஷா்துல் தாக்குா், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்.
தென் ஆப்பிரிக்கா:
டீன் எல்கா் (கேப்டன்), எய்டன் மாா்க்ரம், கீகன் பீட்டா்சன், ராஸி வான் டொ் டுசென், டெம்பா பவுமா, கைல் வெரின் (விக்கெட்கீப்பா்), மாா்கோ யான்சென், ககிசோ ராபாடா, கேசவ் மஹராஜ், டேன் ஆலிவா், லுங்கி கிடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.