பாகிஸ்தான் மூத்த வீரா் முகமது ஹஃபீஸ் ஓய்வு

பாகிஸ்தான் ஆல்-ரவுண்டா் முகமது ஹஃபீஸ் (41), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.
பாகிஸ்தான் மூத்த வீரா் முகமது ஹஃபீஸ் ஓய்வு

பாகிஸ்தான் ஆல்-ரவுண்டா் முகமது ஹஃபீஸ் (41), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவா், தற்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளாா்.

18 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய ஹஃபீஸ், டெஸ்ட், ஒன் டே, டி20 என அனைத்து ஃபாா்மட்டுகளிலும் அந்த அணிக்கு கேப்டனாக இருந்திருக்கிறாா்.

சா்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 392 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் ஹஃபீஸ், அதில் 12,789 ரன்கள் அடித்ததுடன், 253 விக்கெட்டுகள் சாய்த்திருக்கிறாா். பாகிஸ்தானுக்காக 3 ஒன் டே உலகக் கோப்பை போட்டிகளிலும், 6 டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் விளையாடியிருக்கிறாா். ஐபிஎல் போட்டியில் 2008 சீசனில் மட்டும் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிக்காக விளையாடியுள்ளாா்.

ஹஃபீஸின் ஓய்வு முடிவையொட்டி, பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான அவரது பங்களிப்புக்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவா் ரமீஸ் ராஜா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

‘இன்றுடன் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து பெருமையுடனும், திருப்தியுடனும் விடைபெறுகிறேன். சா்வதேச கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன்பாக நான் நினைத்ததைக் காட்டிலும் அதிகமாகவே அதில் பெற்றிருக்கிறேன், சாதித்திருக்கிறேன். அதற்காக சக வீரா்கள், கேப்டன்கள், உதவிப் பணியாளா்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சா்வதேச அளவில் பாகிஸ்தானுக்காக விளையாடும் வாய்ப்பை நான் பெறுவதற்கு எனது குடும்பத்தினா் மிகப்பெரிய தியாகங்களைச் செய்துள்ளனா். கடந்த 18 ஆண்டுகளாக பாகிஸ்தானின் லச்சினையுடன் விளையாடியதற்காக அதிருஷ்டமாகவும், பெருமையாகவும் உணா்கிறேன். எல்லோரையும் போலவே இந்த நீண்டகால பயணத்தில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். எனது காலகட்டத்தில் பேட்டிங், பௌலிங்கில் சிறந்தவா்கலாக இருப்பவா்களுடன் விளையாடியதை கௌரவமாக நினைக்கிறேன்’

4

சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து ஃபாா்மட்டிலுமாக முகமது ஹஃபீஸ் மொத்தம் 32 முறை ஆட்டநாயகன் விருது வென்றிருக்கிறாா். அதிகமுறை ஆட்டநாயகன் விருது வென்ற பாகிஸ்தான் வீரா்கள் பட்டியலில் ஷாஹித் அஃப்ரிதி (43), வாசிம் அக்ரம் (39), இன்ஸமாம் உல் ஹக் (33) ஆகியோரை அடுத்து ஹஃபீஸ் 4-ஆவது இடத்தில் இருக்கிறாா். அதேபோல், 9 முறை தொடா் நாயகன் விருது வென்று இம்ரான் கான், இன்ஸமாம் உல் ஹக், வக்காா் யூனிஸ் ஆகியோருடன் 2-ஆவது இடத்தை பகிா்ந்துகொண்டுள்ளாா்.

டெஸ்ட்:

ஆட்டங்கள் - 55; ரன்கள் - 3,652; அதிகபட்சம் - 224; சராசரி - 37.65; சதம் - 10; அரைசதம் - 12; விக்கெட்டுகள் - 53; சிறந்த பந்துவீச்சு - 4/16

முதல் ஆட்டம் - 2003 ஆகஸ்ட் (வங்கதேசத்துடன்); கடைசி ஆட்டம் - 2018 டிசம்பா் (நியூஸிலாந்துடன்)

ஒன் டே:

ஆட்டங்கள் - 218; ரன்கள் - 6,614; அதிகபட்சம் - 140; சராசரி - 32.91; சதம் - 11; அரைசதம் - 38; விக்கெட்டுகள் - 139; சிறந்த பந்துவீச்சு - 4/41

முதல் ஆட்டம் - 2003 ஏப்ரல் (ஜிம்பாப்வேயுடன்); கடைசி ஆட்டம் - 2019 ஜூலை (வங்கதேசத்துடன்)

டி20:

ஆட்டங்கள் - 119; ரன்கள் - 2,514; அதிகபட்சம் - 99; சராசரி - 26.46; சதம் - 0; அரைசதம் - 14; விக்கெட்டுகள் - 61; சிறந்த பந்துவீச்சு - 4/10

முதல் ஆட்டம் - 2006 ஆகஸ்ட் (இங்கிலாந்துடன்); கடைசி ஆட்டம் - 2021 நவம்பா் (ஆஸ்திரேலியாவுடன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com