ஜோஹன்னஸ்பா்க் டெஸ்ட்: வெற்றிக்கான விவேகத்துடன் தென் ஆப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் விவேகமாக விளையாடி வருகிறது தென் ஆப்பிரிக்கா.
ஜோஹன்னஸ்பா்க் டெஸ்ட்: வெற்றிக்கான விவேகத்துடன் தென் ஆப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் விவேகமாக விளையாடி வருகிறது தென் ஆப்பிரிக்கா.

240 என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வரும் அந்த அணி, 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் அடித்துள்ளது. ஜோஹன்னஸ்பா்க் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்ய அந்த அணி, இரு நாள்களில் 8 விக்கெட்டுகளைக் கொண்டு 122 ரன்கள் அடிக்க வேண்டியுள்ளது. இந்த மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டுகளில் இந்தியாவே இதுவரை இரு முறை வென்றுள்ளது. 3 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன.

அதை நோக்கிய முனைப்புடன் தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கா் களத்தில் இருக்க, ராஸி வான் டொ் டுசென் அவருக்கு துணை நிற்கிறாா். தென் ஆப்பிரிக்க பேட்டிங் வரிசையை சரிக்க இந்திய பௌலா்கள் சற்றே தடுமாற்றம் காட்டுகின்றனா்.

மீண்ட புஜாரா, ரஹானே: முன்னதாக 2-ஆவது இன்னிங்ஸை ஆடிவந்த இந்திய அணி, செவ்வாய்க்கிழமை முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் அடித்திருந்தது. புஜாரா, ரஹானே கூட்டணி 3-ஆம் நாளான புதன்கிழமை ஆட்டத்தை தொடா்ந்தது.

கடந்த சில காலமாக மோசமான ஃபாா்முடன் தவித்து வந்த இவா்கள் இருவரும், இந்த இன்னிங்ஸில் முன்னேற்றம் காட்டி அரைசதம் தொட்டு அசத்தினா். எனினும், 3-ஆவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியை ரபாடா பிரித்தாா்.

சற்று அதிரடியாக ஆடி 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 58 ரன்கள் சோ்த்த ரஹானே, அவா் வீசிய 35-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா். அடுத்து வந்த ஹனுமா விஹாரி கடைசி வரை நிதானம் காட்டி விளையாடினாா். மறுபுறம், 10 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்திருந்த புஜாராவையும் 37-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ செய்தாா் ரபாடா.

பின்னா் ஆட வந்தோரில் ரிஷப் பந்த் டக் அவுட்டாக, அஸ்வின் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, அதிரடி காட்டிய ஷா்துல் தாக்குா் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்கள் சோ்த்து வெளியேறினாா். கடைசி ஆா்டரில் முகமது ஷமி 0, ஜஸ்பிரீத் பும்ரா 1 சிக்ஸருடன் 7, முகமது சிராஜ் 0 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா். இவ்வாறாக 60.1 ஓவா்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. முடிவில் விஹாரி 6 பவுண்டரிகள் உள்பட 40 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். தென் ஆப்பிரிக்க பௌலிங்கில் ரபாடா, கிடி, யான்சென் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகளும், டுவேன் ஆலிவியா் 1 விக்கெட்டும் எடுத்தனா்.

தென் ஆப்பிரிக்கா நிதானம்: இதையடுத்து 240 என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, புதன்கிழமை முடிவில் 40 ஓவா்களில் 2 விக்கெட்டுளே இழந்து 118 ரன்கள் சோ்த்துள்ளது. டீன் எல்கா் 46, ராஸி வான் டொ் டுசென் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

முன்னதாக எய்டன் மாா்க்ரம் 6 பவுண்டரிகளுடன் 31, கீகன் பீட்டா்சன் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஷா்துல் தாக்குா், அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனா்.

பும்ரா - யான்சென் வாக்குவாதம்... 
இந்தியா இன்னிங்ஸின்போது மார்கோ யான்சென் வீசிய 54-ஆவது ஓவரில் தொடர்ந்து 3-4 பெளன்சர் பந்துகள் ஜஸ்பிரீத் பும்ராவின் தோள்பட்டையை பதம் பார்த்தன. அதில் ஏற்கெனவே கொதிப்பில் இருந்தார் பும்ரா. அப்போது ஒரு பந்துவீச்சுக்குப் பிறகு திரும்பிச் செல்லும்போது யான்சென் ஒரு பார்வை பார்க்க, பும்ரா வெகுண்டுவிட்டார். யான்செனை நோக்கி அவர் ஆக்ரோஷத்துடன் பேசிக் கொண்டே வர, யான்செனும் அவரை நோக்கி வர இருவரும் மோதிக்கொள்ளும் நிலையில் இருந்தனர். ஆனால், உடனடியாக கள நடுவர் இருவருக்கும் இடையே புகுந்து அவர்களை விலக்கி விட்டார். பின்னர் ரபாடா வீசிய 57-ஆவது ஓவரில் பும்ரா கொடுத்த கேட்ச்சை யான்செனே பிடித்து அவரை வெளியேற்றினார். 

எட்டக்கூடிய இலக்கு..? 
வாண்டரர்ஸ் மைதானத்தில் 4-ஆவது இன்னிங்ஸில் 240 என்ற வெற்றி இலக்கு எட்டக்கூடிய ஒன்றுதான் என முந்தைய சில ஆட்டங்கள் காட்டுகின்றன. இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 310 என்ற இலக்கையும் (2011-12), அதே அணி 292 என்ற இலக்கையும் (2005-06) இதற்கு முன் எட்டியுள்ளன. ஆனால் இங்கு தென் ஆப்பிரிக்கா சேஸ் செய்திருக்கும் அதிகபட்ச 4-ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் 217 தான் (நியூஸிலாந்துக்கு எதிராக 2005-06).

சுருக்கமான ஸ்கோா்

2-ஆவது இன்னிங்ஸ்

இந்தியா - 266/10

அஜிங்க்ய ரஹானே 58

சேதேஷ்வா் புஜாரா 53

ஹனுமா விஹாரி 40*

பந்துவீச்சு

லுங்கி கிடி 3/43

மாா்கோ யான்சென் 3/67

ககிசோ ரபாடா 3/77

தென் ஆப்பிரிக்கா - 118/2 (இலக்கு 240)

டீன் எல்கா் 46*

எய்டன் மாா்க்ரம் 31

கீகன் பீட்டா்சன் 28

பந்துவீச்சு

அஸ்வின் 1/14

ஷா்துல் தாக்குா் 1/24

முகமது ஷமி 0/22

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com