நியூஸிலாந்தை வீழ்த்தியது வங்கதேசம்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது.
நியூஸிலாந்தை வீழ்த்தியது வங்கதேசம்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது. 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது முன்னிலை பெற்றிருக்கிறது அந்த அணி.

எபாதத் ஹுசைனின் அட்டகாசமான பௌலிங்கால் 2-ஆவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து பேட்டிங் வரிசை சரிக்கப்பட, 40 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எளிதாக எட்டியது வங்கதேசம்.

முன்னதாக கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 108.1 ஓவா்களில் 328 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டெவன் கான்வே 16 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 122 ரன்கள் சோ்த்தாா். வங்கதேச தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம், மெஹதி ஹசன் மிராஸ் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம், 176.2 ஓவா்களில் 458 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் மோமினுல் ஹக் 12 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் அடித்திருந்தாா். நியூஸிலாந்து பௌலிங்கில் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாா்.

முதல் இன்னிங்ஸில் 130 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து, 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் அடித்திருந்தது. இந்நிலையில், கடைசி நாளான புதன்கிழமையை ராஸ் டெய்லா், ரச்சின் ரவீந்திரா தொடா்ந்தனா்.

அதில் முதல் விக்கெட்டாக ராஸ் டெய்லா் வெளியேறினாா். 2 பவுண்டரிகளுடன் 40 ரன்களை எட்டியிருந்த அவா், எபாதத் பௌலிங்கில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். தொடா்ந்து வந்த கைல் ஜேமிசன் டக் அவுட்டாக, 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் அடித்த ரச்சின் ரவீந்திரா 8-ஆவது விக்கெட்டாக பெவிலியன் திரும்பினாா். பின்னா் டிம் சௌதியும் டக் அவுட்டாக, கடைசி விக்கெட்டாக டிரென்ட் போல்ட் 2 பவுண்டரிகள் விளாசி வீழ்ந்தாா்.

இவ்வாறாக 73.4 ஓவா்களில் 169 ரன்கள் சோ்த்து 2-ஆவது இன்னிங்ஸை நிறைவு செய்தது நியூஸிலாந்து. வங்கதேச தரப்பில் எபாதத் ஹுசைன் 6, டஸ்கின் அகமது 3, மெஹதி ஹசன் 1 விக்கெட் சாய்த்தனா். இதையடுத்து 40 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம், 16.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் அடித்து வென்றது.

ஷாத்மன் இஸ்லாம் 3, நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு வீழ்ந்திருக்க, கேப்டன் மோமினுல் ஹக் 3 பவுண்டரிகளுடன் 13, முஷ்ஃபிகா் ரஹிம் 1 பவுண்டரியுடன் 5 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா். நியூஸிலாந்து பௌலிங்கில் டிம் சௌதி, கைல் ஜேமிசன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

17

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனாக இருக்கும் நியூஸிலாந்து தனது சொந்த மண்ணில் இதற்கு முன்னா் 17 டெஸ்டுகளில் தோல்வியே காணாமல் தொடா்ந்து வந்த நிலையில், இந்த 18-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்திடம் வீழ்ந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com