ஆஷஸ் தொடரில் கவாஜா சதம்: 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த ஆஸ்திரேலியா
By DIN | Published On : 06th January 2022 02:05 PM | Last Updated : 06th January 2022 02:05 PM | அ+அ அ- |

கவாஜா
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று 3-0 என்கிற முன்னிலையுடன் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி.
4-வது டெஸ்ட் சிட்னியில் புதன் அன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மழை காரணமாக நேற்றைய ஆட்டம் பலமுறை தடைப்பட்டது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 6, கவாஜா 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்றைய ஆட்டத்தில் ஸ்டீஸ் ஸ்மித்தும் உஸ்மான் கவாஜாவும் தங்களுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்கள். ஸ்மித் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 201 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் சதமடித்த கவாஜா, 137 ரன்களுக்கு பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். 2019 ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஆஸி. அணியில் மீண்டும் இடம்பிடித்த கவாஜா, தன்னுடைய 45-வது டெஸ்டில் 9-வது சதத்தை எடுத்துள்ளார். ஆஷஸ் தொடரில் நான்கு வருடங்களுக்குப் பிறகு சதமடித்துள்ளார். டிராவிஸ் ஹெட்டுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஆஸி. அணியில் இடம்பிடித்த கவாஜா, இந்தச் சதத்தால் தனக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கவேண்டிய நெருக்கடியை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு உருவாக்கியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி 134 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது. ஹசீப் ஹமீது, ஸாக் கிராவ்லி தலா 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.