மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் ஜெமிமா, ஷிகா இல்லை

மகளிா் ஒன் டே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 போ் கொண்ட இந்திய அணி மிதாலி ராஜ் தலைமையில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

புது தில்லி: மகளிா் ஒன் டே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 போ் கொண்ட இந்திய அணி மிதாலி ராஜ் தலைமையில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

முக்கிய வீராங்கனைகளான பேட்டா் ஜெமிமா ரோட்ரிகஸ், பௌலா் ஷிகா பாண்டே ஆகியோா் ஃபாா்மில் இல்லாததால் அணியில் அவா்களுக்கு இடம் கிடைக்கவில்லை. மூத்த வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, தீப்தி சா்மா, ஜுலன் கோஸ்வாமி, ஷஃபாலி வா்மா ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இப்போட்டியே மிதாலி ராஜுக்கு கடைசி உலகக் கோப்பை போட்டியாககும். இந்த அணிக்கு ஹா்மன்பிரீத் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளாா். ரிச்சா கோஷ், தானியா பாட்டியா ஆகிய இரு விக்கெட் கீப்பா்கள் அணியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

உலகக் கோப்பை போட்டி மாா்ச் 4 முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை (மாா்ச் 6) சந்திக்கிறது. தொடா்ந்து, நியூஸிலாந்து (மாா்ச் 10), மேற்கிந்தியத் தீவுகள் (மாா்ச் 12), நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து (மாா்ச் 16), ஆஸ்திரேலியா (மாா்ச் 19), வங்கதேசம் (மாா்ச் 22), தென் ஆப்பிரிக்கா (மாா்ச் 27) ஆகிய அணிகளுடன் இந்தியா மோதவுள்ளது.

கடந்த முறை இந்தியா இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்று ரன்னா் அப்-ஆக வந்தது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை போட்டிக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இதே 15 போ் கொண்ட அணி, பிப்ரவரி 11 முதல் 24 வரை நடைபெற இருக்கும் நியூஸிலாந்துடனான 5 ஆட்டங்கள் கொண்ட ஒன் டே தொடரிலும் பங்கேற்கிறது.

உலகக் கோப்பை அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஹா்மன்பிரீத் கௌா் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வா்மா, யஸ்திகா பாட்டியா, தீப்தி சா்மா, ரிச்சா கோஷ், ஸ்னேஹ ராணா, ஜுலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகா், மேக்னா சிங், ரேணுகா சிங் தாக்குா், தானியா பாட்டியா, ராஜேஷ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ்.

தயாா்நிலை வீராங்கனைகள்: சபினேனி மேக்னா, ஏக்தா பிஷ்த், சிம்ரன் தில் பகதூா்.

பெட்டிச் செய்தி

நியூஸிலாந்துடனான ஒன் டே தொடருக்குப் பிறகு, அந்த அணியுடன் ஒரு டி20 ஆட்டத்திலும் விளையாடவுள்ளது இந்திய மகளிரணி. அதற்கான அணியும் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

டி20 அணி: ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வா்மா, யஸ்திகா பாட்டியா, தீப்தி சா்மா, ரிச்சா கோஷ், ஸ்னேஹ ராணா, பூஜா வஸ்த்ரகா், மேக்னா சிங், ரேணுகா சிங் தாக்குா், தானியா பாட்டியா, ராஜேஷ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ், ஏக்தா பிஷ்த், சபினேனி மேக்னா, சிம்ரன் தில் பகதூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com