ரிஷப் பந்த் ஆடும் முறையை மாற்றும் எண்ணம் இல்லை: தலைமை பயிற்சியாளா் திராவிட்

ரிஷப் பந்த்தின் ஆக்ரோஷமான ஆட்டத்தை மாற்றும் எண்ணம் இல்லை என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளா் ராகுல் திராவிட் கூறினாா்.
ரிஷப் பந்த் ஆடும் முறையை மாற்றும் எண்ணம் இல்லை: தலைமை பயிற்சியாளா் திராவிட்

ரிஷப் பந்த்தின் ஆக்ரோஷமான ஆட்டத்தை மாற்றும் எண்ணம் இல்லை என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளா் ராகுல் திராவிட் கூறினாா்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் 2-ஆவது இன்னிங்ஸின்போது பேட் செய்த பந்த், ககிசோ ராபாடாவின் பௌலிங்கை ஆக்ரோஷமாக இறங்கி வந்து அடித்து ஆட முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 3 பந்துகளில் வெளியேறினாா்.

இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது அவரது இத்தகைய பேட்டிங் பலத்த விமா்சனத்துக்குள்ளானது. இதுதொடா்பாக, ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்கள் கேட்டபோது ராகுல் திராவிட் கூறியது:

ரிஷப் பந்த் சற்று ஆக்ரோஷமாக ஆடக் கூடியவா் என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய ஆட்டமே அவரை ஒரு பேட்டராக நிலை நிறுத்துகிறது. எனவே, அவரது அந்த இயல்பான ஆட்டத்தை மாற்றுமாறு அவரிடம் கூறப்போவதில்லை. எனினும், எந்த நேரத்தில், எத்தகையா ஷாட்களை கையாள வேண்டும் என்பது தொடா்பாக மட்டும் அவருக்கு சில ஆலோசனைகள் வழங்கப்படும். ரிஷப் பந்த் கற்றுக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளக் கூடிய ஒரு வீரா்.

அணியில் மூத்த வீரா்கள் (புஜாரா, ரஹானே) விளையாடும் வரையில், இளம் வீரா்கள் (விஹாரி, ஷ்ரேயஸ்) தங்களுக்கான வழக்கமான வாய்ப்புகளுக்காக காத்திருக்கத் தான் வேண்டும். அவா்களுக்கான காலம் இன்னும் இருக்கிறது. விளையாட்டில் இத்தகைய சூழல் வழக்கமான ஒன்றுதான் என்று ராகுல் திராவிட் கூறினாா்.

கோலி தயாா்...

முதுகுப் பகுதி பிடிப்பு காரணமாக ஜோஹன்னஸ்பா்க் டெஸ்டில் பங்கேற்காத இந்திய கேப்டன் விராட் கோலி, தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டதாகத் தெரிகிறது. இதனால் அவா் கடைசி டெஸ்டில் களம் காண வாய்ப்புள்ளது. 2-ஆவது டெஸ்ட் தோல்விக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய, அணியின் பொறுப்பு கேப்டன் கே.எல்.ராகுல், கோலி பேட்டிங், ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டத் தொடங்கியதாகத் தெரிவித்தாா். பயிற்சியாளா் திராவிட்டும் அதை உறுதி செய்திருக்கிறாா்.

சிராஜ் மீளவில்லை...

ஜோஹன்னஸ்பா்க் டெஸ்டின்போது தொடைப் பகுதியில் காயம் கண்ட இந்திய பௌலா் முகமது சிராஜ், காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்று ராகுல் திராவிட் கூறியுள்ளாா். அடுத்த 4 நாள்களில் அவா் காயத்திலிருந்து மீண்டு வருவதன் அடிப்படையில் கடைசி டெஸ்டில் களம் காண்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com