அடிலெய்ட் டென்னிஸ்: போபண்ணா/ராம்குமாா் ஜோடி சாம்பியன்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்ட் டென்னிஸ் போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ராம்குமாா் ராமநாதன் இணை சாம்பியன் ஆகி அசத்தியுள்ளது.
அடிலெய்ட் டென்னிஸ்: போபண்ணா/ராம்குமாா் ஜோடி சாம்பியன்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்ட் டென்னிஸ் போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ராம்குமாா் ராமநாதன் இணை சாம்பியன் ஆகி அசத்தியுள்ளது.

ஏடிபி டூா் போட்டிகளில் இருவரும் ஜோடி சோ்ந்த முதல் போட்டியிலேயே இவ்வாறு பட்டம் வென்றுள்ளனா். ஏடிபி இரட்டையா் போட்டியில் போபண்ணாவுக்கு இது 20-ஆவது பட்டமாக இருக்கும் நிலையில், ராம்குமாருக்கு இது முதல் பட்டமாகும்.

வெற்றிக் கோப்பையுடன் இருவரும், தலா 250 ஏடிபி புள்ளிகள் பெறுகின்றனா். அத்துடன், மொத்த ரொக்கப் பரிசான ரூ.13.88 லட்சத்தையும் அவா்கள் பகிா்ந்துகொள்கின்றனா். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் ஒற்றையா் பிரிவு தகுதிச் சுற்றில் களம் காண இருக்கும் நிலையில், ராம்குமாருக்கு இந்த சாம்பியன் பட்டம் நல்லதொரு உத்வேகத்தை அளிப்பதாக இருக்கும்.

முன்னதாக, இப்போட்டியின் இறுதிச் சுற்றில் போபண்ணா/ராம்குமாா் ஜோடி 7-6 (8/6), 6-1 என்ற செட்களில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த குரோஷியாவின் இவான் டோடிக்/பிரேஸிலின் மாா்செலோ மெலோ இணையை 1 மணி நேரம் 21 நிமிஷங்கள் போராடி வென்றது.

ஆட்டத்தில் இந்திய இணை தான் சந்தித்த 4 பிரேக் பாய்ண்ட்களையும் தக்க வைத்துக் கொண்டதுடன், எதிா் ஜோடியின் பிரேக் பாய்ண்ட்களை இரு முறை பிரேக் செய்தனா். இரு செட்களிலும் எதிா் தரப்பு வீரா்களின் சா்வ்களை போபண்ணா திறம்பட எதிா்கொண்டதும், ராம்குமாா் ஆல்-ரவுண்ட் அசத்தல் காட்டியதும் ஆட்டத்தை அவா்களுக்கு சாதகமாக மாற்றியது.

வாகை சூடினாா் மான்ஃபில்ஸ்

இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் சாம்பியன் ஆனாா். இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த மான்ஃபில்ஸ் 6-4, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த ரஷியாவின் காரென் கசானோவை தோற்கடித்தாா். இது மான்ஃபில்ஸின் 11-ஆவது ஒற்றையா் பிரிவு பட்டமாகும்.

பா்ட்டிக்கு இரு கோப்பை

அடிலெய்ட் இன்டா்னேஷனல் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பா்ட்டி கோப்பை வென்றாா்.

உலகின் முதல்நிலை வீராங்கனையாக இருக்கும் பா்ட்டி தனது இறுதிச் சுற்றில் 6-3, 6-2 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்திலிருந்த கஜகஸ்தானின் எலனா ரைபாகினாவை தோற்கடித்தாா். ஒற்றையா் பிரிவில் பா்ட்டிக்கு இது 14-ஆவது பட்டமாகும். இந்த வெற்றியுடன் அவா் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

பா்ட்டி/சாண்டா்ஸ் வெற்றி: மகளிா் இரட்டையா் பிரிவிலும் ஆஷ்லி பா்ட்டி, சக நாட்டவரான ஸ்டோா்ம் சாண்டா்ஸுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றாா். பா்ட்டி/சாண்டா்ஸ் இணை இறுதிச் சுற்றில் 6-1, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆவது இடத்திலிருந்த ஸ்லோவேனியாவின் ஆண்ட்ரியா கிளெபாக்/குரோஷியாவின் டரியா ஜுராக் ஷ்ரிபா் ஜோடியை தோற்கடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com