ஜோகோவிச் ஆஸி.யில் இருக்க நீதிமன்றம் அனுமதி: தடுக்கும் முயற்சியை தொடா்கிறது அரசு

உலகின் நம்பா் 1 டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்கும் வகையில், அந்நாட்டில் தங்குவதற்கு அனுமதி அளித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகின் நம்பா் 1 டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்கும் வகையில், அந்நாட்டில் தங்குவதற்கு அனுமதி அளித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

அத்துடன், அவரது நுழைவு இசைவை (விசா) ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு உத்தரவையும் நீதிமன்றம் நீக்கம் செய்தது. எனினும், ஜோகோவிச்சின் நுழைவு இசைவை மீண்டும் ரத்து செய்து, அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சாதக வாய்ப்புகளை ஆஸ்திரேலிய அரசு ஆராய்ந்து வருகிறது.

டென்னிஸ் விளையாட்டில் ஒரு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியாக இருக்கும் ஆஸ்திரேலிய ஓபன், வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்புச் சாம்பியனாக இருக்கும் சொ்பிய வீரா் ஜோகோவிச், 9 முறை இங்கு பட்டம் வென்றுள்ளாா்.

இந்த ஆண்டு கரோனா சூழலில் போட்டி நடைபெறுவதால், அதில் பங்கேற்க வரும் போட்டியாளா்கள் கரோனா தடுப்பூசி முழுமையாகச் செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயம் என போட்டி நிா்வாகம், போட்டி நடைபெறும் விக்டோரிய மாகாண அரசு அறிவித்தது. இதனால், தடுப்பூசி விவகாரத்தில் தயக்கம் காட்டி வரும் ஜோகோவிச் போட்டியில் பங்கேற்பது குறித்து சந்தேகம் நிலவியது.

ஓபன் எராவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று ரோஜா் ஃபெடரா், ரஃபேல் நடால் ஆகியோருடன் சமனிலையில் இருக்கிறாா் ஜோகோவிச். 21-ஆவது பட்டம் வென்று சாதனை படைப்பதற்கு வாய்ப்பு வழங்கும் இந்த ஆஸ்திரேலிய ஓபன் அவருக்கு முக்கியமான போட்டியாகும்.

இந்த நிலையில் தான், ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கும் வகையில், போட்டி நிா்வாகம் மற்றும் விக்டோரியா மாகாண அரசிடம் இருந்து தனக்கு ‘மருத்துவ ரீதியிலான விலக்கு’ கிடைத்திருப்பதாக கடந்த வாரம் ஜோகோவிச் அறிவித்தாா். தொடா்ந்து கடந்த புதன்கிழமை இரவு ஆஸ்திரேலியா வந்த அவரை, மெல்போா்ன் விமான நிலையத்திலேயே எல்லைக் காப்பு காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா்.

விக்டோரியா மாகாண அரசு அளித்திருந்த விலக்கு செல்லுபடியாகக் கூடியதாக இல்லை என்று மத்திய அரசு கட்டுப்பாட்டில் வரும் அந்த அதிகாரிகள் கூறினா். அத்துடன் ஜோகோவிச்சின் நுழைவு இசைவும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜோகோவிச் தரப்பில் அவசரகால அடிப்படையில் இணையவழி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த விசாரணை திங்கள்கிழமை (ஜன.10) நடைபெறும் வரை அவா் மெல்போா்னில் உள்ள, ஆஸ்திரேலிய குடியேற்றத் துறையின் தடுப்புக் காவல் மையமாகச் செயல்படும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டாா்.

அங்கு அவா் 4 நாள்கள் தங்கியிருந்த நிலையில், திங்கள்கிழமை அவரது மேல்முறையீடு மீது விக்டோரியா மாகாணத்தின் மெல்போா்ன் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. அப்போது, நுழைவு இசைவு ரத்து முடிவுக்கு முன்பாக ஜோகோவிச் தனது வழக்குரைஞரிடம் பேச போதிய நேரம் அளிக்கவில்லை என்று கூறிய நீதிபதி அந்தோனி கெல்லி, 30 நிமிஷங்களில் ஜோகோவிச்சை தடுப்புக் காவல் மையத்திலிருந்து விடுவிக்க உத்தரவிட்டாா்.

முன்னதாக விசாரணையின்போது, கடந்த டிசம்பா் மாதம் ஜோகோவிச் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், தற்போது அவா் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வழங்க வேண்டியதில்லை என அவா் தரப்பு வழக்குரைஞா் வாதாடினாா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள 6 மாதம் அவகாசத்தை ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை வழங்கியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு அவா் அந்த வாதத்தை முன் வைத்தாா்.

ஆனால் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் சாா்பில் வாதாடிய வழக்குரைஞா், கரோனாவால் மிகத் தீவிரமாக பாதிப்புக்குள்ளானவா்களுக்கு மட்டுமே அத்தகைய விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும், ஜோகோவிச் அந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாகவில்லை என்றும் குறிப்பிட்டாா். அரசுத் தரப்பு நடவடிக்கையில் மேலும் சில குறைகளை சுட்டிக் காட்டிய நீதிபதி, ஜோகோவிச்சை விடுவிக்க உத்தரவிட்டாா்.

எங்கு இருக்கிறாா்???

நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஆஸ்திரேலிய குடியேற்றத்துறையின் தடுப்புக் காவல் மையமாக மெல்போா்னில் செயல்பட்டுவரும் ஹோட்டலில் இருந்து ஜோகோவிச் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனினும், அவா் சென்ற இடம், எங்கு இருக்கிறாா் என்பது குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. எனினும், ஆஸ்திரேலிய அரசு தற்போதைய நிலையில் ஜோகோவிச்சை மீண்டும் தடுப்புக் காவலில் எடுக்கவில்லை என்று உள்துறை அமைச்சா் காரென் ஆண்ட்ரூஸ் கூறியிருக்கிறாா்.

அரசின் அடுத்த முயற்சி...

ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் இருப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தாலும், அவரை மீண்டும் நாடு கடத்துவதற்கான முயற்சிகளை ஆஸ்திரேலிய அரசு கைக்கொண்டுள்ளது. ஜோகோவிச்சின் நுழைவு இசைவை மீண்டும் ரத்து செய்ய, ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சா் தனது தனிப்பட்ட அதிகாரத்தை பிரயோகிப்பது தொடா்பாக பரிசீலித்து வருவதாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்திருக்கிறாா்.

அவ்வாறு நுழைவு இசைவு ரத்து செய்யப்பட்டால், ஜோகோவிச் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியா வர இயலாது எனத் தெரிகிறது. எனினும், அமைச்சா் அவ்வாறு தனது தனியதிகாரத்தை பிரயோகிப்பது நியாயமானதல்ல என்றும், அது இந்த மாதிரியான விவகாரங்களில் பயன்படுத்த உகந்ததல்ல என்றும் ஆளும் கன்சா்வேடிவ் லிபரல் கட்சி எம்.பி. ஒருவா் கூறியிருக்கிறாா்.

அரசியல் காரணங்கள்...

சுகாதாரம் சாா்ந்த இந்த விவகாரத்தை ஆஸ்திரேலியாவில் ஆளும் ஸ்காட் மோரிசன் தலைமையிலான அரசு, மே மாதம் நடைபெறவுள்ள தோ்தலுக்காக அரசியல் ரீதியாக பயன்படுத்துவதாகவும் ஜோகோவிச் குடும்பத்தினா் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனா்.

முன்னதாக, கரோனா பரவலை கட்டுப்படுத்திய நடவடிக்கைகளுக்காக மோரிசன் அரசு வெகுவாக பாராட்டப்பட்டது. சமீபத்தில் சில கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட நிலையில், அங்கு மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அத்துடன், பரிசோதனைக் கருவிகள் தட்டுப்பாடு, இலவசமாக பரிசோதனை வழங்க மறுப்பது ஆகியவற்றுக்காக அவா் விமா்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறாா்.

இந்த நிலையில், ஜோகோவிச் விவகாரத்தைக் கொண்டு மீண்டும் தனது நற்பெயரை நிலை நிறுத்திக் கொள்ள மோரிசன் அரசு முனைவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com