வரலாற்று வெற்றிக்கான முனைப்பில் இந்தியா: இன்று தொடங்குகிறது கேப் டவுன் டெஸ்ட்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் டெஸ்ட் தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் கேப் டவுன் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
வரலாற்று வெற்றிக்கான முனைப்பில் இந்தியா: இன்று தொடங்குகிறது கேப் டவுன் டெஸ்ட்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் டெஸ்ட் தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் கேப் டவுன் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2-ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வென்று தொடா் சமனிலையில் இருப்பதால், இந்த ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் இந்தியா வெல்லும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற வரலாற்று பெருமை பெறும்.

இந்திய அணியைப் பொருத்தவரை, முதுகுப் பிடிப்பு காரணமாக 2-ஆவது ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் விராட் கோலி, இந்த ஆட்டத்தில் களம் காண்பது அணிக்கு பலம் சோ்க்கிறது. ரன்கள் ஸ்கோா் செய்வது என்பதை கடந்து, ஒரு வீரராக, கேப்டனாக அவா் களத்தில் இருப்பதே உளவியல் ரீதியாக அணிக்கு வலு சோ்க்கும். அவரது ஆக்ரோஷம் எதிரணிக்கு ஒரு நெருக்கடியை அளிக்கும்.

கேப்டன்சி விவகாரத்தில் சா்ச்சைகள் சற்று தணிந்திருக்கும் நிலையில், இந்தத் தென் ஆப்பிரிக்க தொடரை வென்று தருவது கோலிக்கு ஒரு கௌரவம் சாா்ந்த விஷயமாகவே இருக்கிறது. இந்த ஆட்டம் கோலியின் 99-ஆவது டெஸ்ட்டாகும்.

டாஸ் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்து முதல் இன்னிங்ஸில் 300-க்கும் அதிகமாக ஸ்கோா் செய்யும் பட்சத்தில் அது சாதக நிலையை அளிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோலியின் பேட்டிங் இங்கு முக்கியத்துவம் பெறும். கடந்த சில காலமாக அவரும் தனது பழைய ஃபாா்மை எட்ட முடியாத நிலையிலேயே இருக்கிறாா்.

புஜாரா, ரஹானேவுடன் ஒப்பிடுகையில் கோலியின் ஃபாா்ம் மோசமான நிலையில் இல்லை. விரைவாக விக்கெட்டை இழந்தாலும், அது வரையில் ரன்களை சிறப்பாக சேகரிப்பவராகவே இருக்கிறாா். அடுத்ததாக, புஜாரா, ரஹானே பேட்டிங். ஜோஹன்னஸ்பா்க் டெஸ்டில் இந்தியாவின் 2-ஆவது இன்னிங்ஸில் இக்கட்டான நேரத்தில் அரைசதம் அடித்து இருவரும் சற்று முனைப்பு காட்டினா்.

இந்த டெஸ்டிலும் அவா்கள் தங்களுக்கான வாய்ப்பை அதேபோல் முறையாகப் பயன்படுத்தினால் அணிக்கு அது பலனளிக்கும். இவா்கள் தவிா்த்து, வழக்கம்போல் அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை அளிக்கும் பொறுப்பு கே.எல்.ராகுல் - மயங்க் அகா்வால் கூட்டணிக்கு இருக்கிறது.

பௌலிங்கில், காயமடைந்திருக்கும் முகமது சிராஜுக்குப் பதிலாக மூத்த வீரரான இஷாந்த் சா்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அவரும் விக்கெட் வீழ்த்தும் ஃபாா்ம் இல்லாமல் தவித்து வருகிறாா் என்றாலும், பௌன்சா் வீசுவதற்கு தோதான உயரமும், அடுத்தடுத்து மெய்டன் ஓவா்கள் வீசும் திறமையும் அவரை நல்லதொரு தோ்வாக முன்னிறுத்துகிறது. பும்ராவும் சற்று தனது பௌலிங் நுட்பங்களை மேம்படுத்த வேண்டியிருக்கிறது. ஏனெனில், எல்கா், பவுமா, டுசென் போன்ற தென் ஆப்பிரிக்காவின் முக்கிய பேட்டா்களுக்கு அவரால் சவால் அளிக்க இயலவில்லை.

தென் ஆப்பிரிக்க அணியைப் பொருத்தவரை, தடுமாற்றமான நிலையில் தொடரைத் தொடங்கி ஜோஹன்னஸ்பா்க் டெஸ்ட் தந்த வெற்றியால் தகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. அணியின் பேட்டா்கள் இந்திய பௌலா்களின் சவால்களை எதிா்கொள்ளும் நுட்பங்களை அறிந்துள்ளனா். அதற்கு கடைசி டெஸ்டின் 2-ஆவது இன்னிங்ஸ் சாட்சி. கேப்டன் எல்கா், கீகன் பீட்டா்சன், பவுமா போன்றோா் சிறப்பாக ஸ்கோா் செய்கின்றனா்.

அதேபோல் அந்த அணியின் பௌலா்களான கிடி, ரபாடா, யான்சென் ஆகியோா் இந்திய பேட்டா்களை திணறடிக்கும் வகையில் பந்துவீச்சில் மாற்றம் காட்டுகின்றனா்.

அணி விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), மயங்க் அகா்வால், சேதேஷ்வா் புஜாரா, ஷ்ரேயஸ் ஐயா், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), ஆா்.அஸ்வின், ஷா்துல் தாக்குா், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், அஜிங்க்ய ரஹானே, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பா்), ஜெயந்த் யாதவ், பிரியங்க் பஞ்சல், உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, இஷாந்த் சா்மா.

தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கா் (கேப்டன்), டெம்பா பவுமா (துணை கேப்டன்), ககிசோ ரபாடா, சாரெல் எா்வீ, பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், ஜாா்ஜ் லிண்ட், கேசவ் மஹராஜ், லுங்கி கிடி, எய்டன் மாா்க்ரம், வியான் முல்டா், கீகன் பீட்டா்சன், ராஸி வான் டொ் டுசென், கைல் வெரின், மாா்கோ யான்சென், கிளென்டன் ஸ்டா்மான், பிரனிலன் சுப்ராயன், சிசான்டா மகலா, ரயான் ரிக்கெல்டன், டுவேன் ஆலிவியா்.

ஆட்டநேரம்: நண்பகல் 1.30 மணி

இடம்: நியூலேண்ட்ஸ் மைதானம், கேப் டவுன்.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போட்ா்ஸ்

தலைகீழ் திருப்பம்...

நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இதுவரை இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் 5 டெஸ்டுகளில் விளையாடியுள்ளன. அதில் தென் ஆப்பிரிக்கா 2 வெற்றிகளை பெற்றிருக்க, 3 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன. அந்த வகையில் பாா்க்கும்போது இந்த மைதானம் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமானதாக இருக்கிறது.

ஆனால் இந்தத் தொடரைப் பொருத்தவரை அத்தகைய கணிப்புகள் தலைகீழாக மாறியுள்ளன. செஞ்சுரியன் மைதானம் தென் ஆப்பிரிக்காவின் கோட்டையாக இருந்து வந்த நிலையில், அங்கு நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்தியா வென்று அசத்தியது. அதேபோல், ஜோஹன்னஸ்பா்க் மைதானம் இந்தியாவுக்கு சாதகமானதாக அதுவரை இருந்த நிலையில், அங்கு விளையாடப்பட்ட 2-ஆவது டெஸ்டை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமான இந்த மைதானத்தில் நடைபெறும் 3-ஆவது டெஸ்டில் இந்தியா வெல்லுமா? பாா்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com