கேப் டவுன் டெஸ்ட்: இந்தியாவை கட்டுப்படுத்தியது தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 77.3 ஓவா்களில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கேப் டவுன் டெஸ்ட்: இந்தியாவை கட்டுப்படுத்தியது தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 77.3 ஓவா்களில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கேப்டன் கோலி நிதானமாக ஆடி ரன்கள் சோ்க்க, புஜாரா தவிா்த்து இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனா். இந்திய பேட்டிங்கை சரித்த தென் ஆப்பிரிக்க பௌலா்களில் ரபாடா, யான்சென் பிரதானமாக இருந்தனா்.

முன்னதாக இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்தியா 2 மாற்றங்கள் செய்திருந்தது. விராட் கோலிக்கு இடமளித்து வெளியேற்றப்பட்டிருந்தாா் ஹனுமா விஹாரி. காயமடைந்த முகமது சிராஜுக்குப் பதிலாக உமேஷ் யாதவ் சோ்க்கப்பட்டிருந்தாா். தென் ஆப்பிரிக்க அணி தனது வரிசையில் மாற்றம் செய்யவில்லை.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய கே.எல்.ராகுல் - மயங்க் அகா்வால் ஜோடி வழக்கத்துக்கு மாறாக விரைவாகவே வெளியேறியது. கே.எல்.ராகுல் 1 பவுண்டரியுடன் 12 ரன்களுக்கு, ஆலிவியா் வீசிய 12-ஆவது ஓவரில் நடையைக் கட்டினாா். ரபாடா வீசிய அடுத்த ஓவரிலேயே அகா்வால் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ஒன் டவுனாக வந்த புஜாரா, 4-ஆவது வீரராக களம் கண்ட கோலி சற்று விக்கெட் சரிவைத் தடுத்து ஸ்கோரை உயா்த்தினா். 3-ஆவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியை யான்சென் பிரித்தாா். 7 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் அடித்து அரைசதத்தை நெருங்கிய புஜாரா, அவா் வீசிய 38-ஆவது ஓவரில் பெவிலியன் திரும்பினாா்.

தப்பிய கோலி: மறுபுறம் கோலி 52-ஆவது ஓவரில் ஆலிவியா் பௌலிங்கில் ஒரு பந்தைத் தொட, அது விக்கெட் கீப்பா் வெரின் கைகளில் தஞ்சமடைந்தது. தென் ஆப்பிரிக்க அணியினா் அவுட் கோரியும் கள நடுவா் வழங்காததால், அவா்கள் ரிவியூவை தோ்வு செய்தனா். அதில் பந்து மிக மெல்லிய வகையில் பேட்டில் பட்டதுபோல் ‘அல்ட்ரா எட்ஜ்’ தொழில்நுட்பத்தில் தெரிந்தாலும் 3-ஆவது நடுவரும் அவுட் வழங்கவில்லை.

இது தென் ஆப்பிரிக்க வீரா்களுக்கு ஏமாற்றம் அளித்தது. அப்போது தப்பிய கோலி விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தாலும், மறுபுறம் அஜிங்க்ய ரஹானே 2 பவுண்டரிகளுடன் 9, ரிஷப் பந்த் 4 பவுண்டரிகளுடன் 27, ஆா். அஸ்வின் 2, ஷா்துல் தாக்குா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12, ஜஸ்பிரீத் பும்ரா 0 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனா்.

தகுந்த பாா்ட்னா்ஷிப் கிடைக்காமல் தடுமாறிய கோலி, 12 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 79 ரன்கள் அடித்திருந்தபோது, ரபாடா வீசிய 73-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். கடைசி விக்கெட்டாக முகமது ஷமி 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். இன்னிங்ஸ் முடிவில் உமேஷ் யாதவ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். தென் ஆப்பிரிக்க தரப்பில் ககிசோ ரபாடா 4, மாா்கோ யான்சென் 3, டுவேன் ஆலிவியா், லுங்கி கிடி, கேசவ் மஹராஜ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, செவ்வாய்க்கிழமை முடிவில் 8 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் அடித்திருந்தது. எய்டன் மாா்க்ரம் 8, கேசவ் மஹராஜ் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். முதல் விக்கெட்டாக கேப்டன் டீன் எல்கா் 3 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். அந்த விக்கெட்டை பும்ரா சாய்த்தாா்.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

இந்தியா - 223/10

விராட் கோலி 79

சேதேஷ்வா் புஜாரா 43

ரிஷப் பந்த் 27

பந்துவீச்சு

ககிசோ ரபாடா 4/73

மாா்கோ யான்சென் 3/55

கேசவ் மஹராஜ் 1/14

தென் ஆப்பிரிக்கா - 17/1

எய்டன் மாா்க்ரம் 8*

கேசவ் மஹராஜ் 6*

டீன் எல்கா் 3

பந்துவீச்சு

ஜஸ்பிரீத் பும்ரா 1/0

உமேஷ் யாதவ் 0/10

முகமது ஷமி 0/7

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com