ஆஸி. வீரர் கவாஜாவுக்கு வாய்ப்பு வழங்காதது பற்றி ஜோ ரூட் ஆச்சர்யம்
By DIN | Published On : 12th January 2022 03:26 PM | Last Updated : 12th January 2022 03:26 PM | அ+அ அ- |

முதல் மூன்று டெஸ்டுகளில் கவாஜா விளையாடாதது பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆச்சர்யம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதுவரை நான்கு டெஸ்டுகள் முடிந்துள்ளன. ஆஸ்திரேலியா 3-0 என முன்னிலையில் உள்ளது. 4-வது டெஸ்ட் டிரா ஆனது.
4-வது டெஸ்டில் விளையாடிய ஆஸி. வீரர் கவஜா இரு சதங்களை எடுத்தார். 2019 ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஆஸி. அணியில் மீண்டும் இடம்பிடித்த 35 வயது கவாஜா, தன்னுடைய 45-வது டெஸ்டில் 9-வது மற்றும் 10-வது சதங்களை எடுத்தார். ஆஷஸ் தொடரில் நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர் சதமடித்தார். டிராவிஸ் ஹெட்டுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஆஸி. அணியில் இடம்பிடித்த கவாஜா, இந்தச் சதங்களால் தனக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கவேண்டிய நெருக்கடியை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் ஆஷஸ் தொடரின் முதல் மூன்று டெஸ்டுகளில் கவாஜா விளையாடாதது பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆச்சர்யம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
ஆஷஸ் தொடரின் தொடக்கத்திலிருந்து கவாஜா விளையாடவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. அவர் அருமையான வீரர். தன்னுடைய திறமையில் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளார். எப்படி விளையாடவேண்டும் என்பதில் அவருக்குப் புரிதல் உள்ளது. கவாஜாவை ரன்கள் எடுக்க விடாமல் நாங்கள் செய்யவேண்டும். அதற்காகத் திட்டமிட வேண்டும் என்றார்.