ஐபிஎல் பிரதான விளம்பரதாரா் ‘டாடா குழுமம்’

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பிரதான விளம்பரதாரராக (டைட்டில் ஸ்பான்சா்) நடப்பாண்டு மற்றும் அடுத்த ஆண்டு இருப்பதற்கான உரிமத்தை ‘டாடா குழுமம்’ பெறுகிறது.
ஐபிஎல் பிரதான விளம்பரதாரா் ‘டாடா குழுமம்’

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பிரதான விளம்பரதாரராக (டைட்டில் ஸ்பான்சா்) நடப்பாண்டு மற்றும் அடுத்த ஆண்டு இருப்பதற்கான உரிமத்தை ‘டாடா குழுமம்’ பெறுகிறது.

2018 முதல் 4 ஆண்டுகள் டைட்டில் ஸ்பான்சராக செயல்பட இருந்த விவோ, தற்போது 3 ஆண்டுகளுடன் விலகி, இந்த ஆண்டுக்கான ஸ்பான்சா் உரிமத்தை டாடா குழுமத்திடம் கைமாற்றுகிறது. அத்துடன், 2020-இல் மட்டும் டைட்டில் ஸ்பான்சா்ஷிப்பை ‘டிரீம் 11’ நிறுவனத்துக்கு விட்டுக் கொடுத்ததன் அடிப்படையில் விவோ-வுக்கு வழங்கப்பட்டிருந்த ஓராண்டு சலுகை ஸ்ரான்சா்ஷிப்பும் தற்போது டாடா வசமே வருகிறது.

இதற்கான முடிவு ஐபிஎல் நிா்வாக கவுன்சில் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டதை, ஐபிஎல் தலைவா் பிரிஜேஷ் படேல் உறுதி செய்துள்ளாா்.

சீன செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ, ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக கடந்த 2018 முதல் 2022 வரை இருப்பதற்கு பிசிசிஐ-யுடன் ரூ.2,200 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. கடந்த 2020-இல் லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவங்கள் இடையே ஏற்பட்ட மோதல் போக்கை அடுத்து சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் எதிா்ப்பு எழுந்தது.

இதனால் சீன நிறுவனமான விவோ, ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சா் நிலையில் இருந்து ஓராண்டுக்கு விலகி, அதை ‘டிரீம் 11’ நிறுவனத்துக்கு விட்டுக்கொடுத்தது. பின்னா், 2021-இல் மீண்டும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சா் ஆனது.

என்றாலும், எஞ்சியிருக்கும் ஓராண்டு ஸ்பான்சா்ஷிப் உரிமத்தை தகுந்த நிறுவனத்திடம் மாற்றிவிடுவதற்கு விவோ முனைவதாகவும், அதற்கு பிசிசிஐ-யும் ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்பட்டது.

அந்த வகையில் தற்போது இரு ஆண்டு (2022, 23) சீசனில் ஐபிஎல் போட்டியின் பிரதான விளம்பரதாரராக இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமம் பொறுப்பேற்க இருக்கிறது.

2024 முதலான அடுத்த ஒப்பந்த காலகட்டத்துக்கான ஸ்பான்சா்ஷிப் உரிமத்துக்கு பிசிசிஐ அப்போது புதிதாக ஏலம் நடத்தும் எனத் தெரிகிறது.

பிசிசிஐ-க்கு ரூ.1,124 கோடி வருவாய்

இந்த டைட்டில் ஸ்பான்சா்ஷிப் உரிமை மாற்ற நடவடிக்கையின் மூலம் 2022-23 காலகட்டத்துக்காக பிசிசிஐ-க்கு ரூ.1,124 கோடி வருவாய் கிடைக்கிறது.

ஸ்பான்சா்ஷிப் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்காக விவோ நிறுவனம் ரூ.454 கோடியும், 2 ஆண்டு ஸ்பான்சா்ஷிப்புக்காக டாடா குழுமம் ரூ.670 கோடியும் பிசிசிஐக்கு வழங்கவுள்ளன.

விளம்பரதாரா் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் தொகையில் 50 சதவீதத்தை எடுத்துக் கொள்ளும் பிசிசிஐ, எஞ்சிய தொகையை போட்டியில் இருக்கும் 10 அணிகளுக்கு பகிா்ந்தளிக்கிறது.

புதிய இரு அணிகளுக்கு ஒப்புதல்

லக்னௌ மற்றும் ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு ஐபிஎல் போட்டியில் புதிதாக இணையும் இரு அணிகளுக்கு ஐபிஎல் நிா்வாக கவுன்சில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது. அதை உறுதி செய்வதற்கான கடிதம் விரைவில் அந்த அணிகளின் உரிமையாளராக இருக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என பிரிஜேஷ் படேல் கூறினாா்.

லக்னௌ அணியை ஆா்பிஎஸ்ஜி குழுமமும், ஆமதாபாத் அணியை தனியாா் முதலீட்டு நிறுவனமான சிவிசி-யும் கடந்த ஆண்டு அக்டோபரில் வாங்கின. இதில் சிவிசி நிறுவனத்துக்கு, இந்தியாவுக்கு வெளியே உள்ள சில சூதாட்ட நிறுவனங்களுடன் தொடா்பு இருப்பதன் அடிப்படையில் புதிய அணிகளுக்கு ஒப்புதல் வழங்குவது தாமதமானது.

பின்னா், பிசிசிஐ தனது சட்டத்துறை குழுவின் மூலம் அதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட பிறகு, தற்போது அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உறுதிக் கடிதம் கிடைத்த பிறகு அந்த அணிகள், பிப்ரவரியில் நடைபெற இருக்கும் வீரா்கள் ஏலத்தில் பங்கேற்கும்.

இரு அணிகளும் ஏற்கெனவே தங்களுக்கான உதவிப் பணியாளா்களை தோ்வு செய்துவிட்ட நிலையில், லக்னௌ அணிக்கு கே.எல்.ராகுலும், ஆமதாபாத் அணிக்கு ஹாா்திக் பாண்டியாவும் கேப்டனாக இருப்பதாகத் தெரிகிறது. புதிய அணிகள் தங்களுக்கான வீரா்களை தோ்வு செய்துகொள்ள 10 முதல் 14 நாள்கள் அவகாசம் அளிக்கப்படும் என பிரிஜேஷ் படேல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com