பந்த் சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு

தென் ஆப்பிரிக்காவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் ரிஷப் பந்த் சதத்தால் இந்திய அணி 198 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
பந்த் சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு


தென் ஆப்பிரிக்காவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் ரிஷப் பந்த் சதத்தால் இந்திய அணி 198 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3-வது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் ஆட்டம் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3-வது நாள் உணவு இடைவேளையில் 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தது.

ரிஷப் பந்த் 51 ரன்களுடனும், விராட் கோலி 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன்பிறகு, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் தொடங்கியது. அதேசமயம், ரிஷப் பந்தின் அதிரடியும் தொடர்ந்தது. இடைவேளைக்குப் பிறகு கூடுதலாக ஒரு ரன் மட்டுமே சேர்த்த நிலையில், மீண்டும் ஸ்டம்புக்கு வெளியே வந்த பந்தை ஆட முயற்சித்து 29 ரன்களுக்கு கோலி ஆட்டமிழந்தார்.

கோலி விக்கெட்டை தொடர்ந்து, ரவிச்சந்திரன் அஸ்வின் (7), ஷர்துல் தாக்குர் (5), உமேஷ் யாதவ் (0), முகமது ஷமி (0) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. எனினும், மறுமுனையில் பந்த் துரிதமாக ரன் சேர்த்து முன்னிலையை உயர்த்தினார். சதத்தையும் நெருங்கினார்.

ஜாஸ்பிரித் பும்ராவைக் கொண்டு பந்த் ஒருவழியாக சதத்தை அடைந்தார். ஆனால், பும்ராவும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

பந்த் 100 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் மார்கோ ஜான்சென் 4 விக்கெட்டுகளையும், லுங்கி என்கிடி மற்றும் ககிசோ ரபாடா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 212 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணியின் இன்னிங்ஸுடன் 3-ம் நாள் தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com